அமைச்சரவையில் மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா உள்ளே; எஸ்.எம். நாசர் வெளியே!
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆகிறார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தமிழக அமைச்சரவையில் இடம் பெறுகிறார். மேலும், தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுகிறார். வரும் மே 11-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைப்பார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படவுள்ளது. அப்போது மேலும் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.