ட்ராமா – விமர்சனம்

நடிப்பு: விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப் கே விஜயன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தம்பிதுரை மாரியப்பன்
ஒளிப்பதிவு: அஜித் ஸ்ரீனிவாசன்
படத்தொகுப்பு: முகன்வேல்
இசை: ஆர்.எஸ்.ராஜ் பிரதாப்
தயாரிப்பு: ’டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ்’ எஸ்.உமா மகேஸ்வரி
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
’TRAUMA’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘அதிர்ச்சி’ என்றொரு பொருள் உண்டு. அதிர்ச்சியூட்டும் மூன்று கிரைம் கதைகளை தனித்தனியே வளர்த்தெடுத்து, முடிச்சுகள் நன்றாக இறுகியபின் அவற்றை ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து கிளைமாக்சுக்கு நகர்த்தும் ’ஆந்தாலஜி’ வகைப் படம் என்பதால் இதற்கு பொருத்தமாக ‘ட்ராமா’ (TRAUMA) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அதிர்ச்சிக்கதை 1:-
சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடும் தன் நண்பர்கள் இருவருக்கு ஆசை வார்த்தை காட்டி, கார்களை திருடிவரச் செய்து, அவர்களுக்கு பணம் கொடுக்கிறார் ஒரு கார் மெக்கானிக் (ஈஸ்வர்). ஒரு கட்டத்தில் அதிகப் பணம் எதிர்பார்க்கும் திருடர்களிடம், “நீங்க பிஎம்டபிள்யூ மாதிரியான பெரிய பணக்காரத்தனமான காரை திருடிக்கொண்டு வாங்க. நான் நிறைய பணம் கொடுக்கிறேன்” என்கிறார் மெக்கானிக். இதை ஏற்று சந்தோஷமாக ‘கார் வேட்டை’க்குக் கிளம்பும் திருடர்கள் இருவரும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை கிளப்பிக்கொண்டு சிட்டாய் பறக்கிறார்கள். வழியில் வாகனச் செக்கிங் செய்துகொண்டிருக்கும் போலீசார் இவர்களது காரையும் நிறுத்தி சோதனை செய்கிறார்கள். கார் டிக்கியைத் திறந்து பார்க்கும் போலீசார் அதிர்ச்சியில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். டிக்கியில் போலீசார் அப்படி எதைத் தான் பார்த்தார்கள் என்று திருடர்களும் எட்டிப் பார்க்க, உள்ளே கொலை செய்யப்பட்ட ஒரு நபரின் பிணம் இருப்பதைப் பார்த்து இவர்களும் அலறுகிறார்கள். வீணாகக் கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொண்டோம் என்று பதறும் திருடர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட, போலீசார் அவர்களைத் துரத்திச் செல்கிறார்கள்…
அதிர்ச்சிக்கதை 2:-
திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகியும் சுந்தர் (விவேக் பிரசன்னா) – கீதா (சாந்தினி தமிழரசன்) தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தன்னிடம் உள்ள குறைபாடு தான் என்பது சுந்தருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த உண்மையை கீதாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டு, பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். பலனில்லை. இவர்களது நெருங்கிய நண்பரான ரகு (ஆனந்த் நாக்), கீதாவிடம் உண்மையைச் சொல்லிவிடு என்று அறிவுரை வழங்கியும், “அதுக்கு எனக்கு தைரியம் இல்லை” என்று கண் கலங்குகிறார் சுந்தர். இந்நிலையில், மருத்துவர் உண்மை புத்திரனின் (பிரதீப் கே விஜயன்) ‘கருத்தரிப்பு மையம்’ (’ஃபெர்டிலிட்டி சென்டர்’) விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, அங்கு கீதாவை அழைத்துச் செல்கிறார் சுந்தர். மருத்துவ பரிசோதனைகளை முடித்த பின்னர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளைக் கொடுக்கிறார் மருத்துவர் உண்மை புத்திரன். அந்த மாத்திரைகளை கீதாவுக்குத் தெரியாமலேயே அவர் குடிக்கும் ஜுஸில் சுந்தர் கலந்து கொடுக்கிறார். சில நாட்களிலேயே கீதா கர்ப்பம் தரிக்கிறார். தாயாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் கீதாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு மர்ம ஃபோன் வருகிறது. “உன் வயிற்றில் குழந்தை உருவானதற்கு சுந்தரோ, மாத்திரைகளோ காரணம் இல்லை. நான் தான்” என்று சொல்லும் மர்ம மனிதன், அதை நிரூபிப்பதற்கு படுக்கையறை வீடியோ ஒன்றை அனுப்புகிறான். “இந்த விஷயத்தை நான் பகிரங்கப்படுத்தக் கூடாது என்றால், 50 லட்சம் ரூபாயுடன் நான் சொல்லும் இடத்துக்கு வா” என்கிறான். குழப்பமும் தவிப்புமாய் கலங்கி நிற்கிறார் கீதா…
அதிர்ச்சிக்கதை 3:
ஆட்டோ டிரைவர் முருகேசன் (மாரிமுத்து). இவருடைய மனைவி பார்வதி (ரமா). இவர்களது மகள் செல்வி (பூர்ணிமா ரவி). பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார் செல்வி. ஒருதலைக் காதலுடன் அவரைத் துரத்தித் திரிகிறார் ஜீவா (பிரதோஷ்). ஆரம்பத்தில் பிடி கொடுக்காத செல்வி, தன்னை பெட்ரோல் பங்க் உரிமையாளரின் பாலியல் தொல்லையிலிருந்து ஜீவா காப்பாற்றியதை அடுத்து, அவரது காதலை ஏற்றுக்கொள்கிறார். இன்ப வானில் பறக்கும் காதலர்கள் படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். செல்வி கர்ப்பவதி ஆகிறார். விஷயம் அவரது அம்மா, அப்பாவுக்குத் தெரிய வர, ஏக கதறல். ஜீவாவுக்கு தகவல் சொல்ல போன் பண்ணினால், அவர் கால் அட்டண்ட் பண்ணவே இல்லை. செய்வதறியாது தவிக்கிறார் செல்வி…
மேற்கண்ட மூன்று அதிர்ச்சிக்கதைகளும் ஒரு கட்டத்தில் ’மருத்துவர் உண்மை புத்திரன்’ என்ற புள்ளியில் ஒருங்கிணைகின்றன. இவை எப்படி அவரிடம் வந்து சேருகின்றன? பிரச்சனைகளுக்கும் அவரது கருத்தரிப்பு மையத்துக்கும் என்ன சம்பந்தம்? சிக்கல்கள் எவ்விதம் தீர்வை எட்டுகின்றன? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ட்ராமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவர் சுந்தர் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார். மனைவியை நேசிப்பது, அதே நேரத்தில் குழந்தைப்பேறு இல்லாததற்கு தான் தான் காரணம் என்ற உண்மையை மனைவியிடம் சொல்லாமல் மறைப்பது, இப்படி மறைப்பதற்காக குற்றவுணர்வு கொள்வது என சகல உணர்வுகளையும் வழக்கமான தன் யதார்த்தமான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
அவரது மனைவி கீதாவாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். குழந்தை இல்லை என கவலைப்படுவது, கர்ப்பம் தரித்ததும் மகிழ்வது, தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அப்பா தன் கணவர் இல்லை என்பதை அறிந்து உடைந்துபோவது என அருமையாகவும் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.
இவர்களது நெருங்கிய நண்பர் ரகுவாக வரும் ஆனந்த் நாக் மற்றும் கருத்தரிப்பு மைய மருத்துவர் உண்மை புத்திரனாக வரும் பிரதீப் கே விஜயன் ஆகியோர் எதிர்பாராத நேரத்தில் எதிர்மறைப் பண்புகளுடன் வெளிப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.
பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் செல்வி கதாபாத்திரத்தில் ’பிக்பாஸ் தமிழ்’ புகழ் பூர்ணிமா ரவியும், அவரை காதலிக்கும் ஜீவா கதாபாத்திரத்தில் பிரதோஷும் நடித்திருக்கிறார்கள். இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, காதலிக்கும்போதும், பின்னர் பிரச்சனையின் கனத்தால் எமோஷனை வெளிப்படுத்தும்போதும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். செல்வியின் அப்பா முருகேசனாக வரும் மாரிமுத்துவும், அம்மா பார்வதியாக வரும் ரமாவும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய்குமாராக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிளாக வரும் வையாபுரி, முதலமைச்சராக வரும் நிழல்கள் ரவி, கார் மெக்கானிக்காக வரும் ஈஸ்வர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
மூன்று க்ரைம் கதைகள், அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புள்ளி என்ற அந்தாலஜி வகைப்பட்ட கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல், நேர்த்தியாக, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன். தனியார் நடத்தும் கருத்தரிப்பு மையங்கள் (ஃபெர்டிலிட்டி சென்டர்கள்) குறித்த எச்சரிக்கை மணியையும் அவர் இப்படத்தில் ஒலிக்கச் செய்திருப்பது வரவேற்புக்குரியது. பாராட்டுகள்.
ஆர்.எஸ்.பிரதாப்பின் இசை, அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, முகன்வேலின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்தை உயர்த்திக் காட்ட உதவியுள்ளன.
‘ட்ராமா’ – எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், நன்றாக பார்த்து ரசித்த மனநிறைவோடு திரும்பி வரலாம்!
ரேட்டிங்: 3.5/5