”துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியை முற்றாக நிராகரிக்கிறோம்!” – நாடு கடந்த தமிழீழ அரசு
தனித் தமிழீழம் கோரி இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழீழ தேசியத் தலைவரும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார் என்றும், இப்போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மூத்த மகன் சார்லஸ், இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாகவும் சிங்கள அரசு அறிவித்திருந்தது.
இதன்பின், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ”மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் தேதி பிரபாகரனின் மகள் துவாரகா ’தமிழ் ஒளி’ என்ற யூ-டியூப் சேனலில் காணொளி வாயிலாகத் தோன்றி பேசுவார்” என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதேபோல், நவம்பர் 27ஆம் தேதி ‘பிரபாகரனின் மகள் துவாரகா’ என கூறப்பட்ட ஒரு பெண் ’மாவீரர் நாள்’ உரை நிகழ்த்தும் காணொளி வெளியானது.
அந்த பெண் துவாரகா தான் என சிலர் நம்பினாலும், பெரும்பாலான ஈழத்தமிழர்கள் நம்பவில்லை. ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் புலனாய்வு இணையம் ஒன்று ஒருபடி மேலே சென்று, அந்த பெண் பற்றி புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. அதன்படி, “அந்த பெண் ஸ்விட்சர்லாந்து நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் பெண். அவர் பெயர் ‘ராஜரட்னம் மித்துஜா’. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் அமோகமான நிதிவளங்களை கபளீகரம் செய்ய சிங்கள அரசின் உளவு அமைப்பினால் “துவாரகா” என போலியாக, மோசடியாக மாறுவேடம் அணிவிக்கப்பட்டவர். அவர் வெளிநாடுகளில் வாழும் சில ஈழத்தமிழர்களை நம்ப வைத்து ஏற்கெனவே பணம் பறித்திருக்கிறார்.”
இந்நிலையில், ”துவாரகா வீடியோ” என கூறப்படும் போலியான, மோசடியான காணொளியை முற்றாக நிராகரிப்பதாகவும், பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காணொளியில் காட்டுவது வேதனை அளிக்கிறது என்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழீழ தேசிய மாவீரர் நாளில், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது.
கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், அவதானங்களின் வழி நின்றும் இம்முடிவினை நாம் எடுத்துள்ளோம்.
தமிழீழ தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும் மதிப்போடும் வைத்திருக்கிறார்கள். தேசியத் தலைவரின் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காட்டுவது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது.
அதே வேளை, இவ்விவகாரத்தினை பேசுபொருளாகக் கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் வேண்டுகிறோம்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் ருத்ரகுமாரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.