“பயம் இல்லை என்றால் நீ ராஜா; பயந்தால் நீ கூஜா”: படவிழாவில் டிராஃபிக் ராமசாமி பேச்சு!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடிக்க, கிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும்போது, “இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை, தன்னம்பிக்கை, தைரியம் இந்த மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயம் இல்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா” என்றார்.
நடிகை ரோகிணி பேசும்போது, ” டிராபிக் ராமசாமி என்னை பாதித்த ஒரு கேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்த சரித்திரத்தில் நானும் இருப்பது பெருமை” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ” இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும். டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர். அவரது போராளி முகம், போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது” என்றார்.
நடிகை அம்பிகா பேசும்போது “எஸ்.ஏ.சி. சாருடன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வக்கீலாக நடித்தேன். இதில் பதவி உயர்வு பெற்று, நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். இதில் அது நிறைவேறி இருக்கிறது” என்றார்.
இவ்விழாவில் இயக்குநரும் கதையின் நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி, இயக்குநர்கள் ஷங்கர், .எம்.ராஜேஷ், பொன்ராம், சாமி, நடிகைகள் உபாசனா, அபர்னதி, நடிகர்கள் மோகன்ராம், சேத்தன், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், ஒளிப்பதிவாளர் குகன், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, கலை இயக்குநர் வனராஜ், எடிட்டர் பிரபாகர், படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் பேசினார்கள்.
விழா மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டு பேசினார்கள். இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும் கொடுத்தது.