பிரபல உணவகங்களின் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்!
கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் முக்கிய இடங்களில் செயல்படும் கேஎஃப்சி உள்ளிட்ட உணவங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 84 சதவீத பிரட்களில் அதாவது 32 மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள் தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், பிரிட்டானியா, கேஎஃப்சி, டோமினோஸ், மெக்டொனால்ட்ஸ், சப்வே ஆகியவை தங்கள் தயாரிப்புகளில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து, உணவுப்பொருள்களில் கலக்க அனுமதிக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களின் பட்டியலில் இருந்து பொட்டாசியம் புரோமேட்டை நீக்க இருப்பதாகவும், பொட்டாசியம் அயோடேட் கலக்கும் அளவைக் குறைத்து நிர்ணயிக்க இருப்பதாகவும் இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவித்துள்ளது.