சிறப்பு விரைவு நீதிமன்றம் வழி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில் காலம் தாழ்த்தியே அவர்களில் நால்வர் தற்போது கைதாகியுள்ளனர். இந்த கொடுஞ்செயலில் தொடர்புடைய இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களை தப்புவிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குரிய தன்மையில் செயல்படாததுடன் வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாததாலும் தேர்தல் நேரத்தில் இப்பிரச்னையை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் கைதாகியுள்ளவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதுடன் வழக்கையும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகாரளிப்பதற்கான நம்பகத்தையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டும், சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மிக நியாயமானதென தமுஎகச வலியுறுத்துகிறது.

இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். வாய்ப்புள்ள இடங்களில் / வடிவங்களில் மக்களைத் திரட்டும் பணியை தமுஎகச மாவட்டக்குழுக்களும் முன்னெடுக்கின்றன.

இதேநோக்கில் 15.03.2019 அன்று பொள்ளாச்சியிலும், சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் மகளிர் அமைப்புகள் நடத்தவுள்ள மனிதச்சங்கிலி இயக்கத்தில் தமுஎகச கரமிணைக்கிறது. அவ்வாறே பங்கெடுக்குமாறு சமூக அக்கறையுள்ள கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்..

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்