மே தினம்: உழைப்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளாக 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16,72,785 உறுப்பினர்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 19,576 தொழிலாளர்களுக்கு ரூ.11.28 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 44 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய பதிவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திமுக அரசின் சார்பில், தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை. வேறுபாடு இல்லை. உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். அந்த நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மே தினம், உலகின் மிகப்பெரும் ஜனநாயக அமைப்புக்கான நாட்டின் தேர்தல் திருவிழாவுடன் இணைந்து வருகிறது. நீடித்த அமைதிக்கான கோரிக்கையில் நாம் அணி சேர்ந்து வலிமையாக குரல் எழுப்பி ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம் என உறுதி ஏற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உருண்டு கொண்டிருக்கும் உலகத்தை கைகளில் தாங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் திருநாளில் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்திய தொழிலாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவை. அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க, தொழிலாளர் விரோத பாஜக அரசை வீழ்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்கும் தொழிலாளர்கள் மேம்படவும், அவர்கள் வாழ்வுக்கான வளமை பெருகவும் உலகத்தார் அனைவருமே இன்றைய நாளில் உறுதியேற்போம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது. உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது. உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
இதேபோன்று, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திக தலைவர் கி.வீரமணி, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சு.திருநாவுக்கரசர் எம்பி, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.