ஆளுநரின் அலட்சியம்:  ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதி ஆனது

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது.

நிரந்தர சட்டம் ஒன்றை இயற்ற தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாததால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இருந்துவந்த சட்டபூர்வத் தடை சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

இதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப். 26 தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த அக்டோபர் 19 அன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்.28 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் (நவ. 26) சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அளித்துள்ளோம். அதனடிப்படையில் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

மேலும், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு மாநில அளவில் தடை சட்டம் இயற்றினால் போதாது. தேசிய அளவில் தடைச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, மாநில சட்ட அமைச்சர்களின் மாநாட்டில், இந்திய சட்டத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இது குறித்து ஆராய்வதாக இந்திய சட்டத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்,” எனவும் தெரிவித்தார். அரசமைப்பு சட்ட அடிப்படையில்தான் சட்ட மசோதா இயற்றப்பட்டதாகவும் 24 மணிநேரத்திற்குள் விளக்கம் அளித்ததாகவும், மசோதா அரசமைப்பு சட்ட கூறுகளுக்கு எதிரானது அல்ல எனவும் அவர் கூறியிருந்தார்.

அவசர சட்டம் 60 நாட்கள் முடிந்து நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.