“சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது”: மு.க.ஸ்டாலின் கருத்து!
சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
3 நாட்களுக்கு முன்பு பி.டி.ஐ யில் என்னிடம் பேட்டி எடுத்தார்கள். அப்போது இந்த கேள்வியை என்னிடம் கேட்டார்கள். அதாவது சசிகலா முதல்வராக வந்தால் என்ன செய்வீர்கள் என்று. அப்போதே தெளிவாக ஒரு பதில் சொன்னேன். அதே பதிலை இப்போதும் நான் உங்களிடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழக மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்தபோது ஆளுங்கட்சியாக அதிமுகவையும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுகவும் வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்கள். அதிலும் 1.1 சதவீதம் ஓட்டு தான் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள வித்தியாசம். அந்த அடிப்படையில் தான் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆக, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால், மக்களுடைய எண்ணத்திற்கு விரோதமாக இன்று ஒரு சம்பவம் அரங்கேறுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை வாங்கி சிறை சென்றபோது ஓ.பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக நியமித்தார்.
அதுமட்டுமல்ல, அவர் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை வந்து அனுமதிக்கப்பட்டிருக்கும்போது கூட முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு அந்த பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் சசிகலாவிற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலும் எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை, கட்சியிலும் எந்தப் பொறுப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அதற்கு நேர் மாறாக மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், அதேபோல ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.
திமுகவைப் பொறுத்த வரையில் விரைவில் நாங்கள் ஜனநாயக அடிப்படையிலே இந்தப் பிரச்சனையை சந்திப்போம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.