“பணத்தை வைத்து அரசியல் செய்கிறது ஒன்றிய அரசு”: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிலாஸ்பூரில் நேற்று பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனை திறந்துவைத்தது குறித்தும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழக அரசின் நிதியமைச்சர் என்ற முறையில் சொல்கிறேன். எல்லா இடங்களிலும் ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்வது தெளிவாகி இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் இதனைச் செய்கிறது. ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில், ஒன்றை கட்டிமுடித்து திறக்கப் போகின்றனர். மற்றொன்றில் இன்னும் சுவர்கூட கட்டவில்லை.
எனவே இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் (One side Game) ஆடுவதைப்போல தெரிகிறது. அதேபோல், தற்போது எத்தனையோ திட்டங்களில் பிரதான் மந்திரி என்ற முற்சேர்க்கையுடன் பெயர் மாற்றுகின்றனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த திட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே இருந்தது. ஒருவேளை உ.பி., பீகாரில் இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், பிரதம மந்திரி என்று திட்டத்திற்கு பெயர் வைக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் 60 சதவீதம், நீங்கள் 40 சதவீதம் என்று முதல் வருடம் கூறுவார்கள். இரண்டாவது ஆண்டில் நாங்கள் 40 சதவீதம் நீங்கள் 60 சதவீதம், 3-வது ஆண்டில், நாங்கள் 20 சதவீதம் நீங்கள் 80 சதவீதம் என்று கூறுவார்கள். ஆனால், திட்டத்தின் பெயர் வந்து பிரதம மந்திரி என்று இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், ஒன்றிய அரசின் பங்கு வெறும் 25 சதவீதம் மட்டும்தான், ஆனால் மாநில அரசின் பங்கு 75 சதவீதம். எனவே இதையெல்லாம் ஒரு அரசியலாகத்தான் செய்கின்றனரே தவிர, திட்டமிட்டு மக்கள் நலனுக்காக செய்வதாக தெரியவில்லை. எல்லா திட்டங்களுக்கும் பிரதம மந்திரி என்று பெயர் வைத்துவிட்டு, அவர்கள் அளிக்கும் நிதியை குறுக்கிக் கொண்டே போய்விட்டு, மாநில அரசு தரக்கூடிய நிதியை வைத்து பிரதம மந்திரியை விளம்பரப்படுத்துவது போலவும், பிரச்சாரம் செய்வது போலவும் மாற்றிக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.