திருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி கருப்பு பணம் டெபாசிட் செய்த தமிழக அமைச்சர்!
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது.
வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது.
இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி கருப்புப் பணத்தை டெபாசிட் செய்திருந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வரி மற்றும் அபராதத்தினைச் செலுத்த ஒப்புக்கொண்டது தெரிந்தது.
இந்தத் திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். அதன்படி அந்த நபர் 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார்.
அந்த நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
“அந்த தமிழக அமைச்சர் யார் என உங்களுக்குத் தெரியுமா?” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதை நீங்கள் தான் கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.