தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்கலாம்!
மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தர பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
அப்போது உத்தர பிரதேசத்துக்கு 11 மக்களவை தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 மக்களவை தொகுதிகள் வரை குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.
இதேபோல் கேரளாவிலும் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 20-லிருந்து 12-ஆக குறையலாம். கர்நாடகாவில் மக்களவை தொகுதிகள் 28-லிருந்து 26-ஆக குறையலாம்.
தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதுதான். அப்போதுதான், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.
தொகுதி மறுவறையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியும் அதிகரிக்கலாம்.
தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக நாடாளுமன்றத்தில் சமநிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பின், நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.