அவசர சட்டத்தை ஏற்க மாணவர்கள் மறுப்பு: நிரந்தர தீர்வுக்காக போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் தேவை என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், இளைஞிகள் உள்ளிட்ட பல கோடி தமிழ் மக்கள் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராமல், வெயில், பனி, மழையை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்திவருவதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது.

ஆனால் போராட்டக்காரர்கள், தமிழக அரசின் இந்த அவசர சட்டம் தற்காலிகமானது என்றும், உச்சநீதிமன்றம் போனால் இதற்கு தடை விதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் கூறி நிராகரித்து விட்டார்கள்.

மோடி அரசு, காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு ஏற்படும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

இன உணர்வால் கொதிதெழுந்திருக்கும் தமிழக இளைஞர்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை மத்திய – மாநில அரசுகள் புரிந்து கொள்ளுமா? அல்லது இந்த போராட்டத்தை ஒடுக்க அரச வன்முறையை கையில் எடுக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!