வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை 1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் நாளை (டிசம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், அனுராக் காஷ்யப் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விடுதலை 2’ படக்குழுவினர் 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி கோரியுள்ளனர். அதன்படி, 20-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை ஒருநாளைக்கு அதிகபட்சமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.