சசிகலாவை துணை வேந்தர்கள் சந்தித்த விவகாரம்: ஆளுநர் நடவடிக்கை!
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர், முதல்வர் பதவியேற்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுகவின் அமைப்பு ரீதியிலான 50 மாவட்டங்கள் மற்றும் பல்வேறு அணியினர் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி சசிகலாவைச் சந்தித்து அளித்துள்ளனர். வரும் 29-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர்கள் 11 பேர் சசிகலாவைச் சந்தித்து பேசினர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர்கள், சசிகலாவிடம் முதல்வர் மறைவு தொடர்பாக விசாரித்ததாக கூறப்பட்டது.
ஆனால், ஆளுநரை வேந்தராகவும், அமைச்சரை இணைவேந்தராகவும் கொண்டு செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்று பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் முதன்முதலாக கோரிக்கை எழுப்பினார். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பல்வேறு அரசியல் கட்சிகளும் துணைவேந்தர்களின் செயல்பாடுகளை விமர்சித்தன.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.