சட்டப் பேரவைக்குள் போலீஸ் அராஜகம்: நடவடிக்கை தொடங்கினார் ஆளுநர்!
தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி மற்றும் அவை காவலர் சீருடையில் நுழைந்த போலீசாரின் அராஜகம் குறித்து பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். எடப்பாடி பழனிசாமியை, கடந்த 16-ஆம் தேதி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அன்று மாலையே முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்கள் 30 பேரும் பதவியேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கும் போதே, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, நேற்று சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான திமுக, காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். அந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து ஏற்பட்ட அமளியால் இருமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் எண்ணிக் கணிக்கும் முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவானதாகவும், இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேரவையில் நடைபெற்ற அமளி குறித்தும் நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது என்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி குறித்து பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
இதையடுத்து வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பான அறிக்கையை தமிழக ஆளுநருக்கு பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அனுப்பி வைத்ததாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.