கொதிநிலையில் தமிழக மாணவர்கள்: மெரினா கடலுக்குள் இறங்கி போராட்டம் – கைது!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து போராடி, வேதனையை வெளிப்படுத்தினார்கள் ஆனால் மத்திய மோடி அரசு அவர்களது கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.

இதனால் கொந்தளித்து, கொதிநிலையில் இருக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று கூடி போராட போவதாக தகவல் வெளியானதை அடுத்து, அதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசாரின் தடையையும் தாண்டி இன்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெரினாவில் திரண்டனர். அவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீனவர்களை பாதுகாக்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர்.

“டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எங்களுக்கு உணவு அளித்து உயிர் வளர்க்கும் விவசாயிகளின் உயிர்தான் முக்கியம். எங்கள் உயிர் பெரிதல்ல” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறினார்.

‘தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்காதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர். அதேபோல், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடலில் இறங்கிய இந்த மாணவர்களை கைது செய்ய போலீசாரும் கடலில் இறங்கினர். ஆனால் போலீசார் நெருங்க நெருங்க, மாணவர்கள் கடலின் உள் பகுதிக்குள் செல்லத் தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் செய்வது அறியாமல் தவித்தனர்.

மீண்டும் மீண்டும் போராடி கடலின் உள்பகுதிக்குச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள், “எங்கள் உயிர் பெரிதல்ல. விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகிவிட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சென்னை மெரினாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதுபோல் மதுரை தமுக்கம் மைதானம், சேலம் போன்ற இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.