“முத்து கிருஷ்ணன் மரணம் தற்கொலை அல்ல; கொலை!”

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையின்படி, முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், டெல்லி வந்துள்ள முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறும்போது, “எனது மகன் துணிச்சலானவர். அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையில்லை. அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னிடம் தொலைபேசியில் பேசினார். விரைவில் வீட்டுக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில்தான் டெல்லிக்கு வந்தாரே தவிர தற்கொலை செய்துகொள்ள அல்ல. எனது மகனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனது மகனின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையின்போது எங்கள் தரப்பில் ஒரு மருத்துவரும் இருக்க வேண்டும்” என்றார்.

முத்துகிருஷ்ணனின் சித்தப்பா கவி கூறும்போது, “முத்துகிருஷ்ணனுக்கு குடும்பத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. அவர் நன்றாக படிக்கக் கூடியவர். விரைவில் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னவர் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அவரது மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நன்றாகப் படித்து சமூகத்துக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட முத்துகிருஷ்ணன் நிச்சயமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்” எனத் தெரிவித்தார்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் – புலே மாணவர் சங்கத்தின் நிர்வாகி பாலகங்காதர் கூறும்போது, “சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடனேயே நான் அங்கு சென்றுவிட்டேன். முத்துகிருஷ்ணனின் சடலத்தை நான் பார்த்தபோது, அவரது கால்கள் தரையில் ஊன்றியிருந்தன. தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் கால் தரையில் ஊன்றியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இது நிச்சயமாக கொலையாகவே இருக்க வேண்டும். இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.