எதிர்ப்பு எதிரொலி: 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு
தனியார் நிறுவனங்களில் உழைக்கும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்டவையும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்படும். இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும், இது கட்டாயம் அல்ல எனவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன் ஆகியோர் தெரிவித்தனர்.
என்றாலும், இந்த சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் தீவிர போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்தன.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் தமிழக அரசின் தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத் தலைவர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மசோதாவை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
இந்நிலையில், இந்த மசோதா மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.