புறக்கணிப்பு முடிவின் மூலம் மம்தா பானர்ஜி யாருக்கு உதவ முன் வருகிறார்?
“கல்யாண வீடுன்னா நான் தான் மாப்பிள்ளையாக இருக்கணும். சாவு வீடுன்னா நான் தான் பொணமா கிடக்கணும்”னு ஒரு புகழ்பெற்ற வசனம் உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக மமதா பானர்ஜி அறிவித்த உடன் இந்த வசனம் நினைவுக்கு வந்தது.
எந்தக் கட்சி தலைவர் உடனும் கலந்து பேசாமல், குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விவாதிக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி அழைப்பு விடுத்தார். எந்த முரண்பாடும் இல்லாமல், பிஜேபிக்கு எதிரான எதிர்கட்சிகளின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மமதா அழைப்பு விடுத்த கூட்டத்தில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என விலகிக் கொள்ள, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அனைத்து எதிர் கட்சிகளும் வரவேற்பும் ஆதரவும் அளித்தன. அதற்கு ஒரே காரணம் பிஜேபிக்கு எதிரான கட்சிகளின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.
இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த சில காலமாக மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி க்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த ஆளுநர் ஜெகதீப் தங்கரை வேட்பாளராக அறிவித்தது பிஜேபி. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூடி, மூத்த அரசியல் தலைவரான மார்க்கரெட் ஆல்வாவை அறிவித்தன. நியாயமாக இந்த முடிவை ஆதரித்து இருக்க வேண்டிய மமதா பானர்ஜி, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். உண்மையில் பிஜேபி அறிவித்துள்ள வேட்பாளரால் அதிகம் பாதிக்கப்பட்டவர் மமதா தான். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அவர் தான் முன் நின்றிருக்க வேண்டும். ஆனால் இந்த புறக்கணிப்பு முடிவின் மூலம் அவர் யாருக்கு உதவ முன் வருகிறார்? எதிர் கட்சிகளுக்கு என்ன செய்தியை கொடுக்கிறார்? பிஜேபிக்கு எதிரான எதிர் கட்சிகளின் ஒற்றுமையை குளிப்பதன் மூலம், நாட்டுக்கு அவர் சொல்ல வரும் செய்தி என்ன?
முதல் பாராவை மீண்டும் படிக்கவும்…
எஸ்.ஜான்பால்