திருச்சி சிவா எம்.பி. பார்வையில் ‘கண்ணே கலைமானே’

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, பூ ராமு, வடிவுக்கரசி, வசுந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. திமுக எம்.பி. திருச்சி சிவா, ‘கண்ணே கலைமானே’ படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பல பக்கங்கள் பேச வேண்டிய வசனத்தை ஒரே காட்சியில் பின்னணி இசையின் துணை கூட இல்லாமல் திரையில் காட்டுகின்ற வல்லமை தங்களுக்கு உண்டு என்பதை தங்களின் முந்தைய படங்களில் நான் கண்டு, ரசித்து உங்களிடம் கூட அது குறித்து பகிர்ந்து கொண்டதுண்டு.
‘கண்ணே கலைமானே’ படத்தில் தம்பி உதயநிதியிடம் மறைந்திருந்த ஓர் அழகான பரிமாணத்தை நீங்கள் முழுமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். அவருடைய அமைதியான சுபாவத்திற்கேற்ப அருமையான பாத்திரம்.
தன்னை ஒரு விவசாயி என பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டு இயற்கை வேளாண்மையின் இன்றியமையை வலியுறுத்துவது ஒருபுறம், ஆதரவற்றோர்க்கு ஆர்ப்பாட்டமும் விளம்பரமுமில்லாமல் உதவிடும் குணம் மறுபுறம், என ஒரு திரைப்பட இலட்சிய கதாநாயகன் என்பதாக மட்டுமல்ல, கண்களால் சிரித்து அமைதியாக காதலை வெளிப்படுத்தும் ஒரு சராசரி கிராம இளைஞனாக பட்டாசு சத்தம் இல்லாமல் அகல் விளக்கின் வெளிச்சமாய் மிளிர்கிறார் உதயநிதி!
ஏற்ற சரியான பொருத்தமாய் தமன்னா! திருமணத்திற்குப்பின் என்ன ஓர் இனிமை ததும்பும் இல்லற வாழ்க்கைக் காதல். கிராமக் குடும்பப் பெரியவர்களின் குணங்களின் இலக்கணமாய் நடமாடும் வடிவுக்கரசியும் கதாநாயகனின் தந்தையும்!
கதை வேறு கோணத்தில் திரும்பி பயணிக்கத் தொடங்கியவுடன் எல்லா பாத்திரங்களுக்கும் முழுவேலை. இடைவேளைக்குப் பின் உதயநிதி நடிப்பில் உலாவரத் தொடங்குகிறார். நான் பார்த்த அவரின் படங்களின் உச்சம் இது என சொல்லலாம்.
இந்தப்படம் பல விருதுகளை பெற தகுதியான படம். குறிப்பாக உதயநிதி, வடிவுக்கரசி இருவரும். கடந்த உங்களின் சில படங்களில் ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் என்னை உறைய வைத்திருக்கிறீர்கள். கண்ணே கலைமானே படம் , நல்ல சிற்பியின் உளியே சிறந்த சிலை வடிக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு.
நன்றி தம்பி சீனு! இந்த படத்தில் வேளாண் தொழிலுக்கு முக்கியம் தந்ததற்காக! பாராட்டுகள்! ஓர் இளைஞனிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தியதற்காக! மகிழ்ச்சி! மீண்டும் நல்ல படம் ஒன்று தந்ததற்காக!!
இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.