கால எந்திரம் (டைம் மிஷின்) ஒன்றை வடிவமைப்பது எப்படி?
ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்த காலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.
ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.
இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப் பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு.
ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.
இதன் அர்த்தம் என்னவென்று பார்ப்பதற்கு, இயல்பாக, அன்றாடம் நாம் செய்யும் ஒரு கார் பயணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்துகொள்வோமாக. நேர்கோட்டில் ஓட்டிச் செல்லும்போது நிநீங்கள் ஒற்றைப் பரிமாணத்தில் பயணிக்கிறீர்கள். வலதுபக்கமோ இடதுபக்கமோ திம்பும்போது, இரண்டாவது பரிமாணத்தைச் சேர்க்கிறீர்கள். ஒரு திருகலான மலைப்பாங்கான பாதையில் மேலும் கீழும் ஓட்டிச் செல்லும்போது, உயரத்தையும் இது சேர்ப்பதால், எல்லாவித மூன்று பரிமாணங்களிலும் பயணிப்பதாக ஆகிறது. ஆனால், காலத்தினுள் நாம் பயணிப்பது எவ்வாறு சாத்தியம்? நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிப்பதற்கான வழியை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?
ஒரு சிறு விஞ்ஞானப் புனைகதைக்குள் நாம் சிறிது ஆழ்வோம். காலப்பயணத் திரைப்படங்களில், பரந்து விரிந்த, ஆற்றல்-பசி கொண்ட எந்திரம் ஒன்று தொடந்து சித்தரிப்படுவது நமக்குத் தெரியும்.நான்காவது பரிமாணத்தின் ஊடே ஒரு வழியை – காலத்தினூடே ஒரு குடைவுப்பாதையை – அந்த எந்திரம் உண்டாக்கும். காலப் பயணி ஒருவர் – தைரியமும் பெரிதும் மடத்துணிச்சலுமுள்ள தனிமனிதன் ஒருவன் – இன்னதென்று அறியா அதற்குள் செல்லத் தயாராகி, காலச் சுருங்கைப் பாதையினுள் அடியெடுத்து வைத்து, எது என்று தெரியாத இன்னொரு காலத்தில் வெளிப்படுவான். இந்தக் கருதுகோள், வலிந்து பெறப்பட்டதாக இருக்கலாம். எதார்த்தம் இதிலிருந்த மிக வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, அப்படியொன்றும் மிகப் பைத்தியகாரத்தனமானதல்ல.
இயற்பியலாளர்கள் கூட, காலத்துக்குள் போகும் சுருங்கைவழி பற்றி சிந்தித்து வந்துள்ளார்கள். ஆனால் நாம் இதற்கு, ஒரு வேறுபட்ட கோணத்திலிருந்து வரவேண்டும். இயற்கையின் விதிகளுக்குள்ளாக, கடந்தகாலம் அல்லது எதிர்காலத்துக்கான நுழைவாயில்கள் என்றாவது சாத்தியமாகுமா என்று நாம் வியக்கலாம். எதிர்பார்த்தபடியே, அப்படிப்பட்டவை உள்ளன என்று நாம் இன்று நினைக்கிறோம். அதற்கும் மேலாக, நாம் அவற்றுக்கு புழுத்துளைகள் (வா[ர்]ம் ஹோல்) என்று பெயரும் கொடுத்திருக்கிறோம். உண்மை என்னவென்றால், இந்த புழுத்துளைகள் எல்லாம் நம்மைச் சுற்றிலும் உள்ளன – ஆனால், காண முடியாத அளவு மிகச் சின்னவையாக மட்டுமே அவை உள்ளன. புழுத்துளைகள் மிக நுண்ணியவை. வெளியிலுள்ளும் காலத்தினுள்ளும் அவை, மூலை முடுக்குகளிலும் பிளவுகளிலும் காணப்படுகின்றன. இது கடினமான கருதுகோளாக உங்களுக்குத் தென்படலாம். ஆனால், என்னோடு தொடர்ந்து வாருங்கள்.
தட்டையானது அல்லது ஸ்திரமானது என்று எதுவுமில்லை. நீங்கள், போதுமான அளவு மிக நெருக்கமாக எதையும் கவனித்துப் பார்த்தால், அதனுள் துளைகளையும் சுருக்கங்களையும் கண்டுபிடிக்கலாம். இது அடிப்படையான இயற்பியல் விதி. காலத்துக்கும் கூட இதைப் பொருத்தலாம். மெத்தென்ற நீர்ப் பந்து போன்றவை கூட நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் கொண்டிருக்கும். இப்போது, முதல் மூன்று பரிமாணங்களில் இதுதான் உண்மை என்று காட்டுவது எளிதானது. ஆனால் – என்னை நம்புங்கள் – நான்காம் பரிமாணத்திலும் இதுவே உண்மை.
காலத்திலும் நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் இருக்கின்றன. மிகமிகச் சிறிய அளவில் உள்ள, மூலக்கூறுகளைக் காட்டிலும் சிறியதான, அணுவைக் காட்டிலும் சிறியதானவற்றினுள், குவாண்டம் நுரை என்று அழைக்கப்படுபவைகளுக்கான இடம் இருப்பதை நாம் அறிகிறோம். இங்கேதான் புழுத்துளைகள் இருக்கின்றன. வெளியினுள்ளும் காலத்தினுள்ளும் நுண்ணிய சுருங்கை வழிகள் அல்லது குறுக்கு வழிகள், இந்த குவாண்டம் உலகுக்குள், நிரந்தரமாக உருப்பெற்றபடி, அழிவுபெற்றபடி, மறுவடிவம் பெற்றபடி இருந்துவருகின்றன. மேலும் இவை உண்மையில், தனித்தனி இரு இடங்களையும் வேறுபட்ட இரு காலங்களையும் இணைப்பவை.
துரதிருஷ்டவசமாக, இந்த நிஜமாக வாழும் காலச் சுருங்கை வழிகள், ஒரு சென்டிமீட்டருக்கும் பில்லியன்-டிரில்லியன்-டிரில்லியன் அளவு சிறியவை. ஒரு மனிதன் உட்புகுந்து செல்லமுடியாத மிகச் சிறு வழிகள் – ஆனால், இந்த இடம்தான் புழுத்துளைக் கால எந்திரங்கள் பற்றி யோசனைக்கு இட்டுச் செல்கிறது. ஒரு புழுத்துளையைக் கைப்பற்றுவதும் அதை ஒரு மனிதனோ அல்லது ஒரு வானவெளிக் கப்பலோ கூட புகுந்து செல்வதற்கு ஏற்றவாறு, போதுமான அளவுக்குப் பெரிதாக பல டில்லியன் மடங்கு அதை உருப்பெருக்குவதும் சாத்தியமாகலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
ஒருவேளை, போதுமான அளவுக்கு சக்தியையும் முன்னேறிய தொழில்நுட்பத்தையும் ஈந்தால், ஆகாயவெளியில் கூட, ஒரு மாபெரும் புழுத்துளையை கட்டமைக்க முடியும். இதைச் செய்ய முடியும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படிச் செய்தால், அது ஒரு உண்மையில் மகத்தான சாதனமாகத் திகழும். அதன் ஒரு முனை இங்கே பூமிக்கு அருகிலிருக்க, மற்ற முனை மிக மிகத் தொலைவில், ஏதாவதொரு தொலைதூரக் கிரகத்தின் அருகிலிருக்க வேண்டும்.
கோட்பாட்டுரீதியில், ஒரு காலச் சுருங்கையோ அல்லது ஒரு புழுத்துளையோ, மற்ற கிரகங்களுக்கு நம்மை இட்டுச்செல்வதைக் காட்டிலும் அதிகமாகவே செயல்பட முடியும். இரு முனைகளும் அதே இடத்தில் உள்ளதாய், துரத்தால் அல்லாமல் காலத்தால் பிரிக்கப்பட்டதாய் அது இருந்தால், விண்கலம் ஒன்று உள்ளே பறந்து போக முடிந்து, பூமிக்கு அருகில் அது மீண்டும் – தொலைதூரக் கடந்த காலத்தில் – வெளிப்படவும் முடியும். கலம் ஒன்று தரையிறங்கக் கீழே வந்ததைக் காண, ஒரு டைனோசார் சாட்சியாக இங்கே இருக்கலாம்.
வரவாற்றில் அப்போலோ 10 தான் மனிதரோடு சென்ற அதிவிரைவு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகததை எட்டியது. ஆனால், காலத்தினுள் பயணிக்க அதை விட 2000 மடங்கு அதி வேகத்தில் நாம் செல்லவேண்டியிருக்கும். இன்று, நான்கு பரிமாணங்களில் பயணிப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எளிதானதல்ல என்பதையும், உங்கள் தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொள்ள முடியாமல், தடுமாற வைக்கும் ஒரு கருதுகோள் இந்த புழுத்துளைகள் என்பதையும் நான் அறிவேன்.
ஆனால், கொஞ்சம் நில்லுங்கள். இன்றாவது அல்லது எதிர்காலத்திலாவது, ஓரு புழுத்துளை வழியாக காலப்பயணம் மேற்கொள்வது மனிதரால் சாத்தியமா என்பதை வெளிப்படுத்த ஒரு எளிய பரிசோதனையைச் செய்ய நான் நினைத்துள்ளேன். எளிய பரிசோதனைகளும் ஷாம்பெய்னும் எனக்குப் பிடிக்கும். ஆகவே நான், எனக்குப் பிடித்தமான இரு விஷயங்களை இணைத்து எதிர்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்குக் காலப் பயணம் செய்வது சாத்தியமா என்று பார்க்கப் போகிறேன்.
எதிர்காலத்துக் காலப் பயணிகளுக்கான ஒரு வரவேற்பு விருந்து ஒன்றை நான் நடத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், இதில் ஒரு திருகல் உள்ளது. விருந்து நடந்து முடிந்த பிறகுதான், இதைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும்படி நான் செய்யப் போகிறேன். காலத்திலும் வெளியிலும் சரியான ஒருங்கிணைப்பைத் தந்தவர்களுக்குத்தான் நான் ஒரு அழைப்பிதழை உருவி எடுத்துத் தரப்போகிறேன். அதன் பிரதிகள், ஏதாவது ஒரு வடிவில், பல் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை, அழைப்பிதழில் உள்ள தகவலை எதிர்காலத்தில் வாழ்ந்திருக்கப்போகும் யாராவது ஒருவர் ஒருநாள் கண்டுபிடிக்கப்போகிறார். எனது விருந்துக்கு ஒரு புழுத்துளைக் கால எந்திரத்தைப் பயன்படுத்தி – ஒருநாளைக்கு காலப்பயணம் சாத்தியம்தான் என்பதை நிரூபிக்கும்வண்ணம் – பின்நோக்கி வரப்போகிறார்.
இதற்கிடையில், எனது காலப்பயண விருந்தாளிகள் எந்த நிமிடத்திலும் இப்போது வரப்போகிறார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. ஆனால், நான் இதைச் சொல்லும்போது, எந்த விருந்தாளியும் வரவில்லை. என்ன அவமானம்? ஒரு எதிர்கால மிஸ் யுனிவர்ஸாவது கதவுக்கு உள்ளே அடியெடுத்து வைப்பாள் என்று நான் நம்பினேன். எனவே, ஏன் இந்தப் பரிசோதனை வேலை செய்யவில்லை? ஒரு காரணம் – இறந்தகாலத்துக்குக் காலப்பயணம் செய்கையில் ஏற்படுவது என்று எல்லோரும் அறிந்த பிரச்சனை – முரண்புதிர்கள் (பாரடாக்ஸ்) என்று நாம் அழைக்கும் ஒரு பிரச்சனை.
நினைத்துப் பார்ப்பதற்கே வேடிக்கையானவை இந்த முரண்புதிர்கள். அதில் மிகப்பிரபலமான ஒன்று – ‘தாத்தா’ முரண்புதிர். ‘பைத்தியகார விஞ்ஞானி’ முரண்புதிர் என்று ஒரு புதிய எளிய பதிப்பும் என்னிடம் இருக்கிறது.
திரைப்படங்களில், விஞ்ஞானிகளைப் பெரும்பாலும் பைத்தியம் பிடித்தவராகச் சித்தரிக்கும் விதம் எனக்குப் பிடித்தமானது அல்ல என்றாலும், இந்த விஷயத்தில் அதுதான் உண்மை. விஞ்ஞானியான அந்த ஆள், தம் லாழ்நாள் முழுதையும் இது தின்றுவிடும் என்று தெரிந்தும், ஒரு முரண்புதிரைப் படைக்கத் தீர்மானிக்கிறார் – எப்படியோ, ஒரு புழுத்துளையை, ஒரு நிமிடத்தில் இறந்தகாலத்துக்குள் செலுத்தக் கூடிய கால நுழைவாயில் ஒன்றை, அவர் கட்டமைக்கிறார். புழுத்துளை வழியாக, ஒரு நிமிடத்துக்கு முன் தான் எவ்வாறு இருந்தோம் என்பதை விஞ்ஞானியால் பார்க்கமுடியும். ஆனால் , தனது முந்திய நான்-ஐ சுட்டுவிட நமது விஞ்ஞானி தீர்மானித்து புழுத்துளையைப் பயன்படுத்துகிறார் என்றால்? அவர் இப்போது இறந்திருப்பார். ஆகவே, துப்பாக்கிக்குண்டை வெடித்தது யார்? இதுதான் அந்த முரண்புதிர். இது ஒன்றும் புரிந்துகொள்ளும்படி இல்லை. இந்தவகை நிலமைதான் பிரபஞ்சத்தோற்றவிய லாளர்களுக்கு பயங்கரக் கனவை உண்டாக்கிவருவது.
ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் ஆட்சி செலுத்துகிற அடிப்படையான ஒரு விதியை இந்தவகைக் கால எந்திரம் சீர்குலைத்துவிடும் – காரியத்துக்குமுன் காரணம் நிகழ்கிறது – முறையான வழியில் அல்லாமல். பொருட்கள் தாமாகவே அசாத்தியச் செயலை மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறவன் நான். அப்படி அவற்றால் முடியும் என்றால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ‘கயோஸ்’ நிலைக்கு இறங்குவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. ஆகவே, இந்த முரண்புதரை நிகழாமல் தடுக்க ஏதாவதொன்று எப்போதுமே நிகழும் எந்று நான் நினைக்கிறேன். தன்னைத் தானே சுட்டுவீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையை நமது விஞ்ஞானி அடையமாட்டார் என்பதற்கு எப்படியாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் – இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும் – புழுத்துளைதான் ஒரு பிரச்சனையாக உள்ளது.
முடிவில், இது போன்ற ஒரு புழுத்துளை இருந்துவர முடியாது என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டம் தான் அதற்கான காரணம். ராக் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்போதாவது போயிருந்தால் ஒன்றின்மீது ஒன்றேறி ஏற்படும் இந்த கீரீச்சிடல் சப்தத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதுதான் பின்னூட்டம். இதற்கு என்ன காரணம் என்பது எளிதானது. மைக்ரோபோனில் ஒலி நுழைகிறது. ஒயர்கள் வழியாக மாறுதலூட்டப்பட்டு, ஆம்ப்ளிஃபயரால் பெருக்கப்பட்ட ஒலி, ஸ்பீக்கர்கள் வழியாக வெளியே வருகிறது. ஆனால், மைகினுள் அது திரும்பச்சென்று, ஸ்பீக்கர்களிலிருந்து மிக அதிகமாக ஒலி ஏற்பட்டால், அது சுற்றிக்சுற்றி வளைய வந்து, ஒவ்வொரு தடவையும் அதிகரித்த ஒலியைப் பெருகிறது. அதைத் தடுக்க ஒன்றும் இல்லாவிட்டால், பின்னூட்டத்தால் ஒலிபெருக்கி அமைப்பே ஆழிந்துவிடும்.
இதே விஷயம்தான் ஒரு புழுத்துளையிலும் ஏற்படும் – ஒலிக்கு பதிலாக கதிர்வீச்சு. புழுத்துளை விரிவடைந்த உடனுக்குடனே, இயற்கையான கதிர்வீச்சு அதில் நுழையும். வளையமாகச் சுற்றிவருவதில் அது முடியும். பின்னூட்டம் வலிமையானதாக ஆகிவிட்டால், அது புழுத்துளையை அழித்துவிடும். ஆகவே, நுண்ணிய புழுத்துளைகள் இருப்பதாக இருந்தாலும், எதில்வரும் ஒரு குறிப்பிட்ட நாளில் அதை பெருக்குவது சாத்தியமாகக் கூடும். ஆனால், அதை ஒரு கால எந்திரமாகப் பயன்படுத்துவதற்கு போதுமான கால அளவுக்க அது நிலைத்திருக்காது. எனது விருந்துக்கு யாரும் திரும்ப வர முடியாததற்கு இதுதான் உண்மையான காரணம்.
முரண்புதிர்கள் ஏற்பட்டால் தவிர, இறந்த காலத்துக்கான எந்த வகைக் காலப் பயணமும் – புழுத்துளை வழியாகவோ அல்லது வேறு முறைப்படியோ – அசாத்தியம் என்பதுதான் நிலமை.
ஆகையால், இறந்த காலத்துக்கான காலப் பயணம் என்றைக்கும் கைகூடப்போவதில்லை என்பது தான் சோகம். டைனோசார் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம் தருவது; வரலாற்றாசிரியர்களுக்கு நிம்மதி தருவது.
ஆனால், இன்னும் கதை முடியவில்லை. இதனால், எல்லாவித காலப் பயணங்களுமே சாத்தியமில்லை என்று ஆகிவிடவில்லை. காலப் பயணம் சாத்தியம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்துக்கான காலப் பயணம். ஒரு நதி போன்று ஓடுகிறது காலம். காலத்தின் நீரோட்டத்தில், நாம் ஒவ்வொருவருவருமே இரக்கமற்று இழுத்துச் செல்லப்படுவோம் என்றே தோன்றுகின்றது.ஆனால், காலம் ஒரு நதி போன்றது என்பது இன்னொரு விதத்தில்தான். அது, வேறுவேறு இடங்களில் வேறுவேறு வேகங்களில் ஓடுகிறது. அதுதான் எதில்காலத்துக்குள்ளான பயணத்துக்குத் திறவுகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் இந்தக் கருத்து முன் மொழியப்பட்டது. காலம், வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும் இடங்களும் இருக்கும் எனபதையும் மற்ற இடங்களில் காலம் வேகத்தையும் அடையும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அவருடையது மிகச்சரியானது. சரியாக, நம் தலைக்கு மேலேயே அதற்கான சான்று இருக்கிறது. மேலே ஆகாயவெளியில்.
அதுதான், குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் அல்லது ஜிபிஎஸ். செயற்கைக்கோள்களின் தொடர்வரிசை ஒன்று, பூமி சுற்றிவரும் கோளப்பாதையில் உள்ளது. செயற்கைக்கோள் மூலமான வான்வழிச் செலவை, செயற்கைக்கோள்கள் சாத்தியமாக்கியுள்ளன. ஆனால் அவை, கீழே பூமியில் நிகழ்வதைவிட வான்வெளியில் காலம் அதிவேகத்தில் ஓடுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு விண்கலத்தின் உள்ளும் மிகத் துல்லியமான கடிகாரம் உண்டு. ஆனால் அவை மிகச் சரியாகக் கணித்தபோதிலும் ஒவ்வொரு நாளினுடைய ஒரு நிமிடத்தின் பில்லியன் மடங்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துக் கொள்கிறது. அந்த மாற்றத்தை சரிசெய்து கொள்ளும் செயல்முறை அதிலுள்ளது. இல்லாவிட்டால், அந்த துளி வித்தியாசம், எல்லாச் செயலையும் சீர்குலைத்து விடும் – ஒரு நாளைக்கு ஆறு மைல் மெதுவாகப்போகும்படி பூமியிலுள்ள ஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்தையும்பாதித்துவிடும். இப்படி இதனால் உண்டாகும் தற்காப்பற்ற முடக்கநிலையை நீங்களை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
பிரச்சனை, கடிகாரங்களில் இல்லை. கீழே இருப்பதைவிட வெளியில் காலம் அதிகரிப்பதால் அவை வேகமான ஓடுகின்றன. இந்த அசாதாரணமான விளைவுக்குக் காரணம், பூமின் பொருள்திணிவில் இருக்கிறது. காலத்தால் பொருள் இழுத்துச் செல்லப்படும்போது, ஒரு நதியின் வேகக் குறைவான பகுதிபோல், அதை வேகக் குறைப்புச் செய்கிறது என்பதை ஐன்ஸ்டீன் உணர்ந்தார். பொருள் கனமாக இருப்பதற்கேற்ப காலத்தால் அது இழுபடுவதும் அதிகரிக்கும். இந்த திடுக்கிட வைக்கும் எதார்த்தம், எதிர்கால காலப் பயணத்துக்கான சாத்தியத்துக்கான கதவை திறந்துவிட்டுள்ளது.
பால்வீதியின் சரியான மையத்தில், நமக்கு 26,000 ஒளியாண்டுத் தூரத்தில், பால்வெளிமண்டலத்திலேயே மகா கனமான பொருள் ஒன்று உள்ளது. தனது சுய ஈர்ப்புவிசையால் நான்கு மில்லியன் அளவு சூரியன்களின் பொருள்திணிவை தனியொரு புள்ளில் இறுக்கியடைத்துக் அடக்கிக் கொண்டதாய் உள்ள மகா பொருள்திணிவு கொண்ட கருந்துளை (பிளேக் ஹோல்)தான் அது. கருந்துளைக்கு அருகில் நீங்கள் எவ்வளவு நெருங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அதன் ஈர்ப்புவிசை வலிமயுடையதாய் இருக்கும். உண்மையிலேயே அருகில் போனால், ஒளிக்கதிரால் கூட தப்பிக்கமுடியாது. இந்தமாதிரி ஒரு கருந்துளை, காலத்தின் மீது விசித்திரமான விளைவை ஏற்படுத்துகிறது. பால்மண்டலத்தின் வேறு எதையும்விட அதை மிக மெதுவாகச் செல்வதாக ஆக்கிவிடுகிறது. இது அதை ஒரு இயற்கையான கால எந்திரமான ஆக்கிவிடுகிறது.
இதைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட ஒரு விண்கலம், இந்த விசித்திர நிகழ்வினைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி நான் கற்பனை செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரு விண்வெளிப் பயண நிறுவனம் இந்த செயல்திட்டத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடிந்தால், ஒவ்வொரு முழுச் சுற்றையும் முடிக்க அதற்கு 16 நிமிடங்கள் ஆவதை அவர்கள் கவனிக்கமுடியும்.
ஆனால், இந்தத் திணிவுகொண்ட பொருளின் அருகில், விண்கலத்தின் தளத்தில் உள்ள தைரியசாலிகளுக்கு, காலம் மெதுவாகக் கீழிறங்கும். பூமியின் ஈர்ப்புவிசை இழுவையைவிட, மிக அதிக தீவிர கதியில் அதன் விளைவு இங்கே இருக்கும். குழுவினரின் காலம் பாதியாகக் குறைந்துபோகும். ஒவ்வொரு 16 நிமிட சுற்றிலும், எட்டு நிமிட நேரத்தை மட்டும்தான் அவர்கள் அனுபவம் கொள்வார்கள்.
கூற்றிச் சுற்றி அவர்கள், கருந்துளைக்கு மிகத் தொலைவில் போகப்போக, ஒவ்வொருவரும் நேரத்தின் அரைப்பங்கையே அனுபவம் கொள்வார்கள். விண்கவமும் அதன் குழுவும் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருப்பார்கள். தம் வாழ்நாளின் ஐந்து ஆண்டுகள் அவர்கள் கருந்துளையைச் சுற்றுகிறார்கள் என்று கற்பனைசெய்து கொள்ளுங்கள். மற்ற இடத்தில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, பூமியிலுள்ள யாவரும் அவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வயதானவர்களாக இருப்பார்கள்.
ஆகவே, மகா பொருள்திணிவுகொண்ட கருந்துளை, ஒரு கால எந்திரமாக ஆகிறது. ஆனால், இது நடைமுறையில் மிகச்சரியாக நிகழமுடியாதுதான். புழுத் துளைகள் மேல் அது சலுகைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், முரண்புதிர்களை அது எழுச்சிபெறச் செய்யாது. கூடவே, பின்னூடட்டத்தின் ஒரு ‘பளிச்’சிடலால் அது தன்னையே அழித்துக் கொள்ளாது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. அதற்கு நீண்டகாலம் இருக்கிறது. எதிர்காலத்துக்குள் மிகத்தொலைவில் நம்மை அது இட்டுச் செல்லாது. அதிருஷ்டவசமாக, காலத்தில் பயணிப்பதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. இதுவே ஒரு உண்மையான கால எந்திரத்தை நாம் கட்டமைப்பதந்கு இறுதியானதும் சிறந்ததுமான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நீங்கள் பயணத்தை மிக மிக வேகமாகப் செய்யதால் போதும். கருந்துளைக்குள் உறுஞ்சப்படுவதைத் தவிர்க்கத் தேவைப்படும் வேகத்தை விடவும் அதிவேகமாகப் போக வேண்டும். பிரபஞ்சம் பற்றிய இன்னொரு விநோதமான ஒரு நடப்புத்தான் இதற்கான காரணம். ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகின்ற, நிமிடத்துக்க186,000 மைல்கள் என்பதுதான் பிரபஞ்சவெளியின் வேக எல்லை. இந்த வேகத்தை எதுவும் மீறிவிட முடியாது. அறிவியலில் மிகவும் சிறப்பாக நிரூபணம் பெற்ற ஒன்று இது. நம்பினால் நம்புங்கள், ஒலியின் வேகத்துக்கு நிகராகப் பயணம் செய்தால், அது உங்களை எதிர்காலத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
ஏன் என்று விவரிக்க, விஞ்ஞானப் புனைகதையின் பயணப்போக்குவரத்து முறையைச் சற்று கனவு சாண்போம். ஒரு அதிவிரைவுவேகத் தொடர்வண்டியின் ஒரு பாதையைப்போல், பூமியைச் சுற்றிலும் ஒரு பாதை போவதாகக் கற்பனை செய்வோம். இந்த கற்பனைத் தொடர் வண்டியை முடிந்த அளவுக்கு ஒளியின் வேகத்துக்கு நிகராகப் போக நாம் பயன்படுத்தப் போகிறோம் – அது ஒரு கால எந்திரமாக எவ்வாறு ஆகிறது என்று பார்க்க. உள்ளே பயணிகள் எதிர்காலத்துக்கான ஒருவழிப் பயணச்சீட்டுடன் இருக்கிறார்கள். தொடர்வண்டி, தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. விரைவில் அது பூமியை மறுபடியும் மறுபடியும் சுற்றிச் சுற்றி வரலாகிறது.
ஒளியின் வேகத்தை எட்டுதல் என்பதன் பொருள், அதிவேகமாக பூமியைச் சுறிற்றி வருதல். ஒரு நிமிடத்துக்கு ஏழு தடவை. ஆனால், தொடர்வண்டி எவ்வளவு அதிகமாகச் சுற்றிக்கொள்வதாயிருந்தாலும், இயற்பியலின் விதிகள் அதை ஒதுக்குவதால், அது ஒளியின் வேகத்தை என்றும் அடையவே முடியாது. மாறாக, அந்த எல்லையற்ற வேகத்துக்கு வெட்கி, அது அந்த வேகத்துக்கு நெருங்கி வருவதாகக் கொள்வோம். இப்போது ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கிறது. கலத்தின் தளத்தில் – உலகின் பிற பகுதியை ஒப்பிட – காலம் மெதுவாக ஓடத் தொடங்குகிறது; கருந்துளைக்கு அருகில் நிகழ்வதுபோல் – ஆனால் மிக அதிகமாக. தொடர்வண்டியிலுள்ள எல்லாம் மெதுவான இயக்கத்தில் (சுலோ மோஷனில்) இருக்கிறது.
வேக எல்லையைக் காப்பாற்றவே இது நிகழ்கிறது. எதனால் இப்படி என்று காண்பது கடினமானதல்ல. தொடர்வண்டியினுள் ஒரு குழந்தை ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். அவளது முன்னோக்கிய வேகம், தொடர்வண்டியின் வேகத்தோடு இணைசேர்கிறது. ஆகையால் வேக எல்லையை அவள் தற்செயலாகவாவது முந்திவிட முடியாதா? இல்லை என்பதுதான் பதில். இயற்கையின் விதிகள், கலத்தின் தளத்தில் காலம் மெதுவாகி வரும் சாத்தியக்கூறைத் தடுத்துவிடுகின்றன.
இப்போது அவள், வேக எல்லையை மீறும்வகையில் போதுமான வேகத்தில் ஓட முடியாது. வேக எல்லையைப் பாதுகாக்க, காலம் எப்போதுமே மெதுவாகிவிடும். இந்த எதார்த்தத்திலிருந்துதான், எதிர்காலத்தில் பல ஆண்டுகள் பயணிப்பதன் சாத்தியம் வெளிப்படுகிறது.
ஜனவரி 1, 2050-ல் நிலையத்திலிருந்து தொடர்வண்டி கிளம்புவதாகக் கற்பனை செய்வோம். 2150 புத்தாண்டு நாளில் கடைசியாக வந்து நிற்பதற்கு முன், 100 ஆண்டுகளாக அது பூமியைப் பல தடவைகள் சுற்றுகிறது. தொடர்வண்டியினுள் காலம் மிகவும் மெதுவாகிவிடுவதால், பயணிகள் ஒரு வாரகாலமே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்கள் வெளியே வரும்போது, தாம் விட்டுச்சென்றதை விட வேறு ஒரு உலகத்தைக் காண்பார்கள். ஒரு வாரத்தில் அவர்கள் 100 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்திருப்பார்கள். அந்த அளவு வேகத்தை எட்டும் தொடர் வண்டியைக் கட்டுவதென்பது முடியவே முடியாத காரியம்தான். ஆனால், அந்தத் தொடர்வண்டியை நிகர்த்ததான வேறொன்றை நம்மால் கட்டமுடியும் – சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சிஈஆர்என்-னின் உலகின் பெரிய அணுத்துகள் ஆக்ஸிலரேட்டர்.
படுபாதாள அறையில், 16 மைல் நீளமான வட்ட மூடுபாதையில், டிரில்லியன் நுண்ணிய அணுத்துகள்களின் நீரோட்டம் உள்ளது. சத்தி அளிக்கப்படும்போது அவை ஒரு நொடியின் ஒரு பின்னத்தில், பூஜ்யத்திலிருந்து 60,000 எம்பிகெச் வேகத்தில் முடுக்கப்படுகின்றன. சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு, அணுத்துகள்கள் வேகவேகமான, ஒரு நொடியின் 11,000 கால அளவில் மூடுபாதையில் வீசிச் செல்லும் – இது ஒளியின் வேகத்துக்கு மிக அருகிலானது. ஆனால், தொடர்வண்டி போலவே இவையும் தேவையான அளவு வேகத்தை எட்டுவதில்லைதான். அவை வேகஎல்லையின் 99.99 சதவீதத்தையே எட்டமுடியும். அப்படி நிகழும்போது, காலத்துள் அவையும் பயணிக்கத் தொடங்கிவிடும். பை-மெஸான் என்றழைக்கப்படும் மிகமிகக் குறுகிய வாழ்நாளுடைய அணுத்துகள்கள் சிலவற்றால், இதை நாம் அறியமுடிகிறது. சாதாரணமாக, ஒரு நொடியின் 25 பில்லியன் பிரிவுள் ஒன்று என்ற வேகத்தில் அவை சிதைவுறுகின்றன. ஆனால் ஒளிவேகத்துக்கு நிகராக அவை முடுக்கப்படும்போது, 30 மடங்குக்குமேல் நிலைத்துநிற்கின்றன.
அந்த அளவுக்கு அது எளிமையானது. எதிர்காலத்தில் நாம் உண்மையில் பயணம் செய்ய விரும்பினால், நாம் வேகமாகச் செல்வதே தேவை. உண்மையான வேகம். எப்போதாவது நாம் அதைச் செய்ய முடியும் என்றால், ஆகாயவெளிக்குச் செல்வதே ஒரே வழியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் அப்போலாதான், மிகவேகமாக மனிதருடன் சென்ற ஒரு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகத்தை எட்டியது. ஆனால் காலப்பயணம் செய்ய, அதைவிட 2,000 மடங்கு வேகமாக நாம் செல்லவேண்டியுள்ளது. அதைச் செய்ய மிகப் பெரிய விண்கப்பல் நமக்குத் தேவை. நிஜமாகவே பேரிய அளவிலான எந்திரம். அந்தக் கப்பல், ஏராளமான அளவு எரிபொருளை ஏற்றிச்செல்லப் போதுமான அளவு பெரிதாய், ஒளியின் வேகத்துக்கு ஏறக்குறைய உள்ள முடுகுவிசையைப் போதுமான அளவு கொண்டதாய் இருக்கவேண்டும். பிரபஞ்ச வேக எல்லையின் கீழ் சேர, முழுதாய் ஆறு ஆண்டுகளுக்கான முழுச்சக்தித்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும்.
கப்பல் கனமானதாகவும் பெரிதாயும் இருப்பதால், ஆரப்பகாலத்து முடுகுவிசை மெதுவானதாய் இருத்தல் அவசியம். ஆனால் படிப்படியாக, வேகத்தை அது பெறவேண்டும். விரைவில் பேரளவுத் தொலைவை கடக்க வேண்டும். ஒரு வாரத்தில் அது, வெளிப்புற கிரகங்களை அடையும். இரண்டு ஆண்டுகளில் அது, பாதி ஒளிவேகத்தினை எட்டும். நமது சூரிய மண்டலத்துக்கு மிக வெளியே போய்விடும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அது, 90 சதவீத ஒளிவேகத்தில் பயணிக்கும். புறப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிலிருந்து ஏறக்குறைய 30 டிரில்லியன் மைல் தூரத்தில் இருக்கும்போது, காலத்துள் பயணம் செய்யத்தொடங்கும் கப்பல். கப்பலில் காலத்தின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும், பூமியில் இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். திணிவுள்ள கருந்துளையைச் சுற்றிவரும் விண்கலமும் இதற்கு இணையான சூழலில்தான் இருக்கும்.
முழுவேகத்தில் சென்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சபட்ச வேகமாகிய 99 சதவீத ஒளிவேகத்தை அடையும். இந்த வேகத்தில், கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும்.
காலம் மெதுவாவதால் இன்னோரு பயனும் உண்டு. கோட்பாட்டுப்படி இதன் அர்த்தம், மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும் என்பதே. பால்மண்டலத்தின் எல்லைமுனைக்குப் போய்வர 80 ஆண்டுகள் ஆகும். ஆனால். நமது பயணத்தின் உண்மையான அதிசயம், பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதுதான். மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட விகிதங்களில், ஓடும் காலத்தைப் பெற்ற பிரபஞ்சம் அது. நுண்ணிய புழுத்துளைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிரபஞ்சம் அது. இறுதியாக, இயற்பியல் அறிவைக் கொண்டு, நான்காம் பரிமாணத்தின் ஊடாகச் சென்றுவரும் உண்மையான பயணிகளாக நாம் விளங்கக் கூடிய பிரபஞ்சம் அது.
ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen William Hawking (1942 – ) :
நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் வரிசையில் இன்றுள்ள பிரசித்திபெற்ற கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி. பிரபஞ்சத்தோற்றவியல், குவாண்டம் ஈர்ப்புவிசை, கருந்துளை போன்ற துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளும், பொது இயற்பியலில், ரோஜர் பென்ரோஸுடன் சேர்ந்து இவர் ‘சிங்குளாரிட்டி’ பற்றி கூறியுள்ளவையும் முக்கியமானவை. கருந்துளைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு ஒன்று, ‘ஹாக்கிங் ரேடியேசன்’ என்றே அழைக்கப்படுகிறது. அறிவியலைப் பற்றி ஜனரஞ்சகமாக இவர் எழுதிய A Brief History of Time விற்பனையில் சாதனை படைத்தது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூளைநரம்பு முடக்க நோயால் பாதிக்கப்பட்டு படிப்படியே தம் உடற் செயல்பாட்டை இழந்த இவர், இன்று தலையால் மட்டுமே வாழும் விந்தை மனிதர்.
தமிழாக்கம்: கால சுப்ரமணியம்
நன்றி: ‘உன்னதம்’ இதழ்