தூவல் – விமர்சனம்
நடிப்பு: இளையா, சுகாஸ்ரீ, சிவம், மாஸ்டர் நிவாஸ், ராஜ்குமார், திவ்யா கிருஷ்ணா, பரோட்டா முருகேசன், கோகுல், சந்திரன், தனசேகரன், ராஜவேல் கிருஷ்ணா, கிருஷ்ணன், சாந்தா, ஜித்தன், ராஜகுமாரி, காயத்ரி,
கணேஷ், ராஜசேகர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராஜவேல் கிருஷ்ணா
இசை: பத்ம சதீஷ்
ஒளிப்பதிவு: எஸ்.ஏ.தர்வேஸ்
படத்தொகுப்பு: ராம் கோபி
தயாரிப்பு: ‘சைகர் பிக்சர்ஸ்’ கமலகுமாரி & ராஜ்குமார்
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்
ஆற்றங்கரை ஓரம் உள்ள அழகிய கிராமம் – தூவல்.
அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்றில் வரும் மீன்களைப் பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆற்றில் நீர் வரத்தும், மீன் வரத்தும் குறையும்போது, அந்த ஆற்றை சுற்றியிருக்கும் காட்டில் வசிக்கும் பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இப்படியே பல தலைமுறைகளாக அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களது பிழைப்பைக் கெடுக்கும் வகையில் வனத்துறை அதிகாரி ராஜ்குமார் வந்து சேருகிறார். வேட்டையாடுவதை அவர் தடுக்கிறார். மீன்பிடிப்பதையும் தனது சுயநலத்துக்கு சாதகமாக்கிக் கொள்ள சதி செய்கிறார்.
மறுபுறம், உள்ளூர் தாதாவாக இருக்கும் சிவம், ஆற்றில் வரும் மொத்த மீன்களையும் தானே அள்ளிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதற்காக ஆற்றில் வெடிகளை வெடிக்கச் செய்து மீன்களை வாரிக் குவிக்கிறார். இதுவும் கிராம மக்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது.
இப்படியாக வனத்துறை அதிகாரி ராஜ்குமார், தாதா சிவம் ஆகியோரின் அட்டூழியங்கள் மூலம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அவற்றிலிருந்து அவர்கள் விடுபட்டார்களா என்பதும் தான் ‘தூவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
வனத்துறை அதிகாரியாக வரும் ராஜ்குமார் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து இளைஞனாக வரும் இளையா மீன்பிடித் தொழிலில் ஈடுபாடு, காதல், கோபம், கிராம மக்களுக்காக வரிந்து கட்டுவது என அனைத்து உணர்வுகளையும் நிறைவாக கடத்தியுள்ளார்.
அமைதியான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் தாதாவாக வரும் சிவம். சாந்தா, மாஸ்டர் நிவாஸ் உள்ளிட்ட ஏனையோரின் நடிப்பும் நேர்த்தி.
’பிழை’ என்ற படத்தின் இயக்குனரான ராஜவேல் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிராம மக்களின் ஆற்று மீன்பிடி வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இப்படியான ஆற்று மீன்பிடி தொழிலும், அதை நம்பி ஒரு கிராமமே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தமிழ் சினிமாவிற்கு புதிதான ஒன்று. ஆற்று நீரோட்டத்தில் மூங்கில்களை வைத்து மீன் பிடிக்கும் காட்சிகள் அசத்தல்.
தர்வேஸின் ஒளிப்பதிவும், சதீஷின் பின்னணி இசையும் காட்சிகளோடு ஒன்ற செய்கிறது.
பல உலகப் படவிழாக்களில் விருதுகள் வாங்கிய படம் என்பதே இதன் சிறப்பைச் சொல்லப் போதுமானது.
‘தூவல்’ – புதிய அனுபவம்! பார்க்கலாம்!