துப்பாக்கி முனை – விமர்சனம்

சுட்டுக் கொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஒரு ‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரி, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை சுட்டுக் கொல்லாமல், அவனை காப்பாற்ற போராடுகிறார் என்பது தான் ‘துப்பாக்கி முனை’ படத்தின் வித்தியாசமான ஒருவரிக் கதை.

ராமேஸ்வரம் தீவில் 15 வயது பள்ளி மாணவியை, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்ட்டான ‘மிர்ச்சி’ ஷா பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஷாவை என்கவுண்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு  மும்பையிலிருந்து ராமேஸ்வரம் அனுப்பப்படுகிறார்..

கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் விக்ரம் பிரபுவை சந்தித்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷா நிரபராதி என்றும், உண்மையான குற்றவாளிகள் வேறு நபர்கள் என்றும் விளக்குகிறார். இதனால், ஷாவை என்கவுண்ட்டர் செய்யாமல் அவரை காப்பாற்றும் பணியில் விக்ரம் பிரபுவும், உண்மையான குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடிக்கும் பணியில் எம்.எஸ்.பாஸ்கரும் தீவிரமாக இறங்குகிறார்கள். அவர்கள் தத்தமது பணியை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? என்பது மீதிக்கதை.

விக்ரம் பிரபு ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்துகிறார். பார்க்கிற இடங்களில் எல்லாம் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளும் முரட்டு அதிகாரிக்கே உரிய கம்பீரத்தையும், மிடுக்கையும் சரியாக வெளிப்படுத்துகிறார்.  அம்மாவின் அன்புக்காக ஏங்குவதும், தான் செய்வது தவறில்லை. இதுவும் ஒரு அறம் தான் என்பதைப் புரிய வைப்பதுமாக படம் நெடுக பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார்.

மகளை இழந்த தகப்பனின் தவிப்பைக் கண்முன் நிறுத்துகிறார் எம்.எஸ்.பாஸ்கர். “எங்கேயாவது ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட்டு தலை குனியணும்” என்று தழுதழுத்த குரலில் சொல்லும்போது கண்ணீரை வரவழைக்கிறார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்ட்டாகவும், ராமேஸ்வரத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவராகவும் வரும் ‘மிர்ச்சி’ ஷா அப்பாவியான நடிப்பில் மனதை அள்ளுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையில் தோன்றும் ஹன்சிகாவை இப்படத்தின் கதாநாயகி என சொல்ல முடியாவிட்டாலும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து போகிறார். கதையின் சில முக்கியத் திருப்பங்களுக்கு பயன்படுகிறார்.

ஹன்சிகாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன், செல்வாக்கு மிக்கவராகவும், உண்மையான குற்றவாளியின் தந்தையாகவும் வரும் வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ராசாமதியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான நிலப்பரப்பை கண்களுக்குள் கடத்துகிறது.. ராமேஸ்வரம் தீவு குறித்த காட்சிகளில் அவரின் உழைப்பு பளிச். முத்து கணேஷின் இசையில் ‘யார் இவன்’, ‘பூவென்று சொன்னாலும்’ பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு, படத்தின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

”நாம சாப்பிடுற அரிசியில நம்ம பேரு இருக்குறது உண்மைன்னா, என் துப்பாக்கியில இருக்குற ஒவ்வொரு தோட்டாவுலயும் குற்றவாளியின் ஜாதகம் இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஆனா, அந்த நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட ஒரு கேஸ் இது”, ”கோர்ட்டுக்கும் நேரமில்லை. துப்பாக்கிதான் கோர்ட்டு, தோட்டாதான் தீர்ப்பு” போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கவனிக்க வைக்கிறார்.

படத்தில் காதல், டூயட் என்று இயக்குநர் தினேஷ் செல்வராஜ் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதது ஆரோக்கியமான அம்சம். வடமாநிலத் தொழிலாளர்கள் என்றாலே குற்றப் பின்னணி உடையவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கப்படும் பிம்பத்தை இயக்குநர் தகர்த்திருப்பது அவரின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குறித்தும், அப்படி வன்முறை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு மரணம் சிறந்த தீர்வாகாது என்பது குறித்தும் அக்கறை விதைத்த விதத்தில் இயக்குநர் தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’ முயற்சியை வரவேற்கலாம்.

‘துப்பாக்கி முனை’ – பார்க்கலாம்!