தொரட்டி – விமர்சனம்
கூடா நட்பு எப்போதும் கேடாய் முடியும் என்பதே கரு.
80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின் சகவாசத்தால் கெட்டுப்போகிறான். அவனை திருமணம் முடிக்கும் பெண் அவனை எப்படி மாற்றுகிறாள். கூடா நட்பு என்ன விளைவுகளை தருகிறது , அதன் முடிவு என்ன என்பது தான் கதை.
அத்தி பூத்தாற்போல் தமிழ் சினிமாவில் நிகழும் அதிசயங்களில் ஒன்றாக நிகழ்ந்துள்ளது இந்த தொரட்டி. 80 களின் காலப் பின்னணியில் சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு நிறைய முயற்சிகள் வந்தது. ஆனால் எதுவும் அத்தனை நன்றாக அமையவில்லை. இப்படம் அந்தக் குறையை போக்கியிருக்கிறது.
இந்த தலைமுறை சுத்தமாக அறிந்திராத வாழ்க்கை. மிக எளிமையான கதை அதைவிட ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, புதுமுகங்கள் தரும் அனுபவ நடிப்பு என இப்படம் ஒரு வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துப் போகிறது.
ஆடு கிடை போடுவது, வறண்டு போன நிலம், திண்பதற்காக திருடுபவர்கள், அம்பாசிடர் கார், என படம் நெடுகிலும் 80 களின் பின்னணியை அச்சுப்பிசகாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பெரும் உழைப்பு ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேறியிருக்கிறது. மண் வாசம், ஆட்டுப் புழுக்கை, தொரட்டி குச்சி, ஓடை நீர், மலைப்பாறை, மனதிற்குள் வந்து விழும் மழையாக இந்த படம் ஒரு வாழவை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மாயன், செம்பிண்ணுவின் காதலை தமிழ் சினிமா பல காலம் சொல்லும்.
முழுப்படத்திலும் முழுக்க புதுமுகங்கள். ஆனால் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். ஹீரோ ஷமன் குடித்து தறிகெட்டு திரியும் இளைஞனாக, பின் காதலில் மனைவியிடம் உருகும் கணவனாக , இறுதியில் மன்னிக்கும் மாமனிதானாக கேரக்டரை தனக்குள் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். ஹிரோயின் சத்ய கலா, அவரின் பேச்சு அத்தனை கம்பீரம். பருத்தி வீரன் முத்தழகுக்கு பிறகு அச்சு அசல் கிராமத்து பெண்ணை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். அவரது பார்வையே பல கதைகள் பேசுகிறது. தமிழின் மண் மனம் மாறாத பதிப்பு இவரெல்லாம இன்னும் நிறைய வளர வேண்டும். திருட்டு பயல்களாக வரும் மூவரும் நம்முள் பயத்தை விதைக்கும் நடிப்பை தந்திருக்கிறார்கள். ஊமையனாக வருபவர் மிகச்சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார். குரோதம் அவர் கண்ணில் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் தோழர்.
அருகிலிருந்து பார்க்காமல் திரையில் இப்படி ஒரு வாழ்வை கொண்டு வர முடியாது. இயக்குநர் மாரிமுத்து பெரிதாய் கவனம் ஈர்த்திருக்கிறார். தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பை தந்திருக்கிறார். கேமரா 80 களின் நிறத்தை அப்படியே பெயர்த்தெடுத்து வந்திருக்கிறது. பாடல்கள் தாலாட்டு இசை அத்தனை அற்புதமாக இருக்கிறது. படத்தின் எளிமை தான் படத்தின் பலம். சொல்ல வந்ததை நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்..
எளிமை, கதைக்களம், திரைக்கதை, நடிப்பு , கேமரா, இசை ஆகியவை பலம்.
படத்தின் முடிவு திணித்தது போல் இருப்பது பலவீனம்.
இறுதியாக – ஒரு சிறு பட்ஜெட் படம் படம் எப்படி எடுப்பட வேண்டும் என பாடமெடுத்திருக்கிறது.
தவறவிடக்கூடாத வாழ்க்கைப் படம் இந்தப்படம்!