“எவர் மனதும் புண்படாமல் சாதியச் சிக்கலை சொல்லும் படம் ‘பரியேறும் பெருமாள்!” – தொல்.திருமா
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத் தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம்.
சாதிய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
எவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும். கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
“பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.