கள்ளரும், அழகரும், கள்ளழகரும்! – தொ.பரமசிவன்

அழகர்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஒன்பது நாள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது நான்காம் திருநாளன்று அழகர், கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்குப் புறப்படுகிறார். ஒன்பதாம் திருநாளன்று இரவு கோயிலுக்குத் திரும்பவும் வந்து சேர்கிறார். …

(அழகர்கோயில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தை சேர்ந்தது ஆகும்.)

இத்திருவிழாவில் அழகர், கள்ளர் திருக்கோலம் பூண்டு வருகிறார். ‘நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை’ என்று பெரியாழ்வாரும், ‘வஞ்சக் கள்வன் மாமாயன்’ என்று நம்மாழ்வாரும், இத்தலத்து இறைவனான- அழகரைப் பாடியிருப்பதைக் காட்டி, அது காரணமாகவே அழகர், கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்று புராணிகர்கள் கூறுகின்றனர். இக்கருத்து பொருத்தமானதன்று.

கள்ளர் என்ற சாதியாரில் அழகர்மலைப் பகுதியிலும் மேலூர் பகுதியிலும் வாழ்கின்ற ‘மேலநாட்டுக் கள்ளர்’ என்ற பிரிவினர் போல அழகர் வேடமிட்டு வருகிறார். அச்சாதியினரின் ஆசாரங்களுக்கேற்ற வேடத்தையே அழகர் புனைந்து வருகிறார் என்பது தெளிவு. கைக்கொன்றாக வளதடி எனப்படும் வளரித்தடி, சாட்டை போன்ற கம்பு, மேலநாட்டுக் கள்ளர் சாதி ஆண்கள் இடுகின்ற கொண்டை, தலையில் உருமால், அவர்கள் பெரிதும் விரும்பி அணியும் வண்டிக்கடுக்கன் இவ்வாறு அமைகிறது கள்ளர் வேடம்.

‘வளதடி’ எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Boomerange என்று குறிப்பிடுவர். மேலநாட்டுக் கள்ளரும், சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில்வாழ் கள்ளரும் இக்கருவியைக் கையாள்வதில் பெரும்புகழ் பெற்றவர்கள். “மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய கருவிகளில் வளரித்தடியும் ஒன்று” என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. … (பக்கம் 150)

“வளரி என்னும் இவ்வாயுதம் இந்தியாவிலேயே தமிழ்ப் பகுதியிலேதான் பயன்படுத்தப்படுகிறது. 1883 மார்ச்சில் சிவகங்கைக்கு அண்மையில் இந்த பூமராங்குகள்’ பயன்படுத்தப்படுவதை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்று புரூஸ் புட் (Bruce Foote) என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

கைக்கொன்றாக வளரி ஏந்திய அழகருக்கு இடப்படும் கொண்டையும் கள்ளர் சாதியில் ஆண்கள் இடுகின்ற கொண்டையே. சாதாரணமாகப் பெண்கள் இடுகின்ற கொண்டையைப் போல பிடரியின் கீழ்ப்பகுதியில் தொடங்கி தோளை நோக்கிச் சரிந்ததாக இல்லாமல் நடுப்பகுதியில் இக்கொண்டை நேரானதாக அமைந்துள்ளது. (இச்சாதியினரில் முதியவர் ஓரிருவர் இக்கொண்டை இட்டிருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.)

‘மதுரை இதழ்’ என்ற நூலெழுதிய நெல்சன், “கள்ளச் சாதியில் 15 வயது ஆன ஆண்மகன், தான் விரும்பும்வரை முடி வளர்த்துக் கொள்ளலாம். சிறுவர்களுக்கு இந்த உரிமை இல்லை ” என்று குறிப்பிடுவது இச்சாதியில் ஆண்கள் கொண்டையிடும் வழக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

வண்டிக்கடுக்கன் காது மடலோடு ஒட்டியதில்லை. மிகப் பெரிய காது வளையம் இது. அடிப்புறத்தில் கல் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இச்சான்றுகளால் அழகர் மேலநாட்டுக் கள்ளர் போல் வேடம் புனைந்து வரும் செய்தி உறுதிப்படுகிறது. ( பக்கம் 151)

இக்கோயில், ‘கள்ளழகர் கோயில்’ என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்துதான் ஆவணங்களில் குறிக்கப்படுகிறது. ஆழ்வார்கள் பாசுரங்களில் மட்டுமின்றி இக்கோயிலில் உள்ள 123 கல்வெட்டுகளில் ஒன்றில்கூட இப்பெயர் வழங்கக் காணவில்லை. ‘அழகர் குறவஞ்சி’, ‘அழகர் கலம்பகம்’, ‘அழகர் பிள்ளைத்தமிழ்’, ‘அழகர் கிள்ளை விடுதூது’, இருபதாம் நூற்றாண்டிலெழுந்த ‘சோலை மலைக் குறவஞ்சி’ ஆகிய இலக்கியங்களும் இதைப்பற்றி எந்தக் குறிப்பையும் தரவில்லை. ‘அழகர் கிள்ளை விடுதூது’ அழகர் மதுரைக்கு வந்து வைகையாற்றில் இறங்குவதைப் பற்றி மட்டுமே பாடுகிறது. மதுரைக்கு வரும் அழகரை வரவேற்கும் வகையிலமைந்த ‘அழகர் வருகைப் பத்து’ம் கள்ளர் வேடமிடுவதைக் குறிக்கவில்லை. சென்னை கீழ்த்திசை ஒலைச்சுவடி நூலகத்திலுள்ள ‘திருமாலிருஞ் சோலைமலை அழகர் மாலை’ என்னும் நூல் மட்டும் (R 8462),

“கள்ளக் குடிகட்கு உரிமை அமைத்தருள் காரணத்தால் கள்ளர்க்குரிய அழகப்பிரான் எனக் காதலுரைத்(து) உள்ளத் துறையும் பிரானே அழகில் ஒப்பிலியே”

என்று கள்ளழகர் என்ற பெயரையும், கள்ளர்க்கு உரிமையுடையவர் அழகர் என்ற செய்தியினையும் குறிப்பிடுகிறது.… ( பக்கம் 152)

இப்பகுதி மக்களிடம் வழங்கும் கதையும் இதே செய்தியைத்தான் சொல்கிறது. ஆனால், கள்ளந்திரி மண்டபம் தாண்டி வந்தபோது இந்நிகழ்ச்சி நடந்ததாக ‘அழகர் வருணிப்பு’ சொல்ல, மக்களிடம் வழங்கும் கதையோ இச்சம்பவம் காரைக் கிணற்றில் (காதக்கிணறு) நடந்ததாகவே கூறுகிறது. இரண்டிடங்களுக்கிடையில் 5 கி.மீ. தொலைவு உள்ளது. ‘பெரிய அழகர் வருணிப்பு’ம் காரைக் கிணற்றில் இந்நிகழ்ச்சி நடந்ததாகவே கூறுகிறது. ‘சிறிய அழகர் வருணிப்பு’ மற்றோரிடத்தில் ‘காரைக்கிணர் கடந்தார் – என்னையன் கள்ளர் பயமே தீர்ந்தார்”” என்று கூறுகிறது. தவிரவும் இப்பகுதி மக்களிடத்தில் “காரைக்கிணறு கழிச்சேன் கழிச்சேன் கள்ளர் வேஷம் போட்டேன் போட்டேன்”” என்று அழகர் சொல்வதாக வழங்கும் சொல்லடையும் இக்கருத்தை உறுதி செய்வதால், கள்ளர் அழகர் ஊர்வலத்தை மறித்த இடம் காரைக்கிணறுதான் என்று உறுதியாகக் கொள்ளலாம். இச்சொல்லடை, நிகழ்ச்சி நடந்த இடத்தோடு அழகர் காரைக்கிணறு தாண்டிக் கள்ளர் வேடமிடுவதாக ஏதோ உறுதி (சத்தியம்) செய்து கொடுப்பது போலவும் சொல்கிறது. ( பக்கம் 153)

அழகர் ஊர்வலம் கள்ளர்களால் வழிமறிக்கப்பட்டது தொடர்பாக ஒரு சிறு சடங்கு மட்டுமே இப்பொழுது நடைபெறுகிறது. விழா முடிந்தபின் அழகர் தன் கோயிலுக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குப் பின்புறமாக, அழகர் ஏறிவரும் பல்லக்கை மாங்குளம் கிராமத்தினரான கள்ளர் சாதியினர் சிலர் பெருஞ்சத்தத்துடன் வழிமறிக்கின்றனர். பல்லக்கை இரண்டு மூன்று முறை சுற்றி வந்தபின் பல்லக்கின் முன் கொம்பினை ‘வாழாக்கலை’ என்னும் ஈட்டியால் குத்துகின்றனர். சில நிமிடங்களுக்கு ஒரு நாடகம்போல இந்நிகழ்ச்சி நடத்தப்பெறுகிறது.

வெள்ளியங்குன்றம் ஜமீன்தார், நாயக்கராட்சியின்போது அழகர் கோவில், ‘வடக்குக்கோட்டை கொத்தழம்’ பாதுகாவல் பொறுப்பி லிருந்தார். அழகர் ஊர்வலம் திருமலை நாயக்கர் காலத்தில்தான் மதுரை வந்தது. அதற்கு முன் சோழவந்தான் அருகிலுள்ள தேனூர் சென்றது வெள்ளியங்குன்றம் ஜமீன்தாருக்கு சகம் 1591இல் (கி.பி.1669) திருமலை நாயக்கர் வழங்கிய பட்டயம் வேடர்கள் (வலையர் எனப்படும் மூப்பனார் சாதியினர்) இக்கோயிலில் நகைகளையும் பாத்திரங்களையும் கொள்ளையிட்ட செய்தியைக் குறிக்கிறது. “இப்பட்டயம் திருமலை நாயக்கர் மறைந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன் சகம் 1489இல் (கி.பி 1567) விசுவநாத நாயக்கர் வழங்கிய பட்டயம் கள்ளர்கள் அழகர் கோயிலுக்கு வந்த பக்தர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுத்த செய்தியைக் குறிக்கிறது.”

இரண்டு பட்டயங்களிலும் அழகர் சப்பரத்தை மறித்த செய்தியோ, கள்ளர் வேடம் பற்றிய குறிப்போ காணப்படவில்லை. எனவே நாயக்கராட்சியின் வீழ்ச்சியின்போது, நாட்டில் அரசியல் தலைமை பலவீனமடைந்திருந்த காலத்திலேதான் இந்நிகழ்ச்சி நடந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அழகர் மதுரை வரும்போது, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளர் வேடத்தைக் களைந்து பெருந்தெய்வக் கோலம் புனைகிறார். திரும்பும்போது, தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் மீண்டும் கள்ளர் வேடம் அணிகிறார். தல்லாகுளத்திற்கும் வண்டியூருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெருந்தெய்வமாகவே அவர் காட்சி தருகிறார். … (பக்கம் 154)

அழகரின் கள்ளர் கோலம், அதற்கான கதை, சடங்குகள், நம்பிக்கைகள் இவற்றிலிருந்து நம்மால் உண்மையாக நடந்திருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஊகித்து உணர முடிகிறது.

அழகர்கோயிலுக்குத் தெற்கிலும் கிழக்கிலும் மேலநாட்டுக் கள்ளர்களே பெருந்தொகையாக வாழும் சாதியினராவர். அவர்கள் வைணவ மரபினர் அல்லர். மிகப்பெரிய சொத்துடைமை நிறுவனமாகிய கோயிலோ ஒரு மலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆள் வலிமையும் ஆயுத வலிமையும் உடைய கள்ளர் சாதியினர், தங்கள் மரபுவழி நாட்டுப் பகுதியில் நுழைந்து, மதுரைக்கு வரும் அழகரின் ஊர்வலத்தை மறித்துக் கொள்ளையிட முனைகின்றனர். கோயிலின் மேலாண்மையை ஏற்றிருந்த மேல்சாதியினர், ’கோயிலும் இறைவனும் உங்களுக்கும் பொது’ எனச் சமரசம் செய்துகொள்ள முன்வருகின்றனர். சமரசத்தின் வெளிப்பாடாகக் கோயில் நடைமுறைகளில் வைணவ கள்ளர்க்கு மரியாதைகள் வழங்கப்படுகின்றன. ஆடிமாத தேர்த் திருவிழாவில் நான்கில் மூன்று வடங்களை இழுக்கும் உரிமை மேலநாட்டுக் கள்ளர்க்கு வழங்கப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவில் அழகர்கோயிலுக்கும் தல்லாகுளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், கள்ளர் சாதியின் ஆண்மகனைப் போல இறைவனுக்கு வேடமணிவித்து வரவும் கோயிலார் உடன்படுகின்றனர். ( பக்கம் 155)

நிலமானிய மதிப்பீடுகள் வலிமையாக இருந்த அக்காலத்தில் ‘கோயில் மரியாதை’ என்பது கள்ளர் சாதியாருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டிருக்கின்றது; ஆகையால் அவர்களும் இதற்கு உடன்பட்டிருக்கின்றனர். வைணவ மதம் சார்ந்த கோயில், ஒரு பண்பாட்டு சமரசத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்துத் தன்னையும் தன் சொத்துக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது. நாளடைவில் கோயிலும் கள்ளழகர் கோயில் என்றே வழங்கப்படலாயிற்று. ( பக்கம் 156).

இதுவே அழகர் ‘கள்ளழகர்’ ஆன கதையாகும்.

****************************************

இணைப்பு :-

¶மாற்று மரபுகளும் தமிழ் வைணவமும்:

மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழாவின்போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் (தீட்டுக்கு உறுப்பான) தோலால் செய்த பைகளில் எடுத்து வரும் நீரை, உலா வரும் இறைவனின் திருமேனிமீது பீய்ச்சி அடிக்கின்றனர். வேறு சிலர் மிகப் பெரிய திரியினை வைத்து இறைவன் முன் சாமியாடுகின்றனர். வேறு சிலர் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டு ஆடுகின்றனர். இந்த அடியவர்கள் அனைவரும் தென்கலை நாமமும், மார்பில் துளசிமாலையும் அணிந்திருக்கின்றனர். 1979இல் இக்கட்டுரையாளர் நிகழ்த்திய கள ஆய்வின்படி இவ்வாறு ஆடியும் பாடியும் வரும் மக்களில் பள்ளர், பறையர், இடையர், சேர்வை, தேவர், பிள்ளை, குறவர், சக்கிலியர், நாயுடு, நாயக்கர்,ஆசாரி, வலைய மூப்பனார், அம்பலம் (கள்ளர்), வேளார் (குயவர்) ஆகிய சாதியினர் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது. இவர்களில் சு% இடையர், 20% பள்ளர் பறையர், 16% சேர்வை, 3% சந்தனக் குறவர், 3% சக்கிலியர். … (பக்கம் 167, 168)

தமிழ்நாட்டுப் பெருஞ்சமயங்களான சைவம், வைணவம் இரண்டிலும் சைவத்தை விடவும் வைணவம் நாட்டார் மரபுகளைப் பெருமளவு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. அரசு ஆதரவைச் சைவத்தினும் பார்க்க வைணவம் குறைவாகவே தமிழ்நாட்டில் பெற்றிருந்தது என்பதும் வரலாற்று உண்மையாகும். இருப்பினும் வரலாற்றுப் போக்கில் சைவத்தைப் போலவே வைணவமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. சைவம் இயல்பிலேயே உடைமை சார்ந்தும் அதிகாரம் சார்ந்தும் நிற்பதைப் போல வைணவம் நிற்கவில்லை. ஏனென்றால் அது கால்நடை வளர்ப்புக் காலத்தைச் சேர்ந்த முல்லை நாகரிகப் பொருளாதாரத்தில் பிறந்த சித்தாந்தமாகும். வேளாண்மை நாகரிகப் பொருளாதாரமே உடைமை சார்ந்த சிந்தனைகளை வளர்த்தது. எனவேதான் சைவம் இறைவனை ‘உடையார்’ (இருப்பவன்) என்றும் கோயிலை ’ஈச்சரம்’ (ஈசுவரம் – ஐசுவரியம் மிகுந்த இடம்) என்றும் உடைமை சார்ந்து குறிப்பிட்டு வந்திருப்பதைக் காணலாம். ஓராயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளில் சைவக் கோயில்களின் இறைவன் ‘உடையார்’ என்று அழைக்கப்படுவதையும் வைணவக் கோயில்களில் அச்சொல் விலக்கப்பட்டு ‘ஆழ்வார்’, ‘பரமசாமிகள்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுவதையும் நாம் எண்ண வேண்டும். (பக்கம் 173)

உதவிய நூல்: தெய்வங்களும், பண்பாட்டு அசைவுகளும், தொ.பரமசிவன், வெளியீடு NCBH