“37 நாட்களில் எடுக்கப்பட்ட 2 மணி நேர படம் – திட்டம் போட்டு திருடுற கூட்டம்!”
2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் பேச்சு வருமாறு:
“நம்ம ஊரில் திருடுற படம் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். கதையாக எழுதி விடலாம், ஆனால் அதை திரையில் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதை இயக்குனர் சுதர் அழகாக செய்திருக்கிறார். என்னையும் பிரேம்ஜியையும் அண்ணன் தம்பிக்கு உதாரணமாக எல்லோரும் சொல்றதுல ரொம்ப பெருமை” என கலகலவென்று பேசினார் இயக்குனர் வெங்கட் பிரபு.
“சந்திரனை லுங்கி, வேஷ்டியில் தான் பார்த்கிருக்கிறோம், இந்த படத்தில் தான் கோட் சூட் போட்டு ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கெட்டப் பார்த்தவுடனே ஈர்க்கிறது. அவரது விக் சிறப்பு. கிரிக்கெட் பின்னணியில் இந்த திருடுற படத்தை எடுத்திருக்கிறார்கள்” என்றார் இயக்குனர் ராஜேஷ்.
“இப்போதெல்லாம் நிறைய பாடல்கள் வருகின்றன. சாதாரணமாக பாடல்கள் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மனதில் பதிந்தாலே அது பெரிய ஹிட். இந்த படத்தின் பாடல்கள் இப்போதே மனதில் பதிந்து விட்டன. படமும் பெரிய வெற்றி பெறும்” என்றார் நடிகர் ஜெயப்பிரகாஷ்.
“பிரேம்ஜிக்கு ஒரு அண்ணன் கிடைத்தது போல சந்திரனுக்கும் ஒரு நல்ல அண்ணன் கிடைத்திருக்கிறார். தம்பிக்காக படம் தயாரிப்பது, கதை கேட்பது என எல்லாம் செய்து கொடுக்கும் பாசமான அண்ணன் ரகுநாதன். இந்த படத்தின் இயக்குனர் சுதர் சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதேபோல எல்லா இயக்குனர்களும் சரியான பட்ஜெட்டில் படத்தை முடித்து கொடுத்தால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வளர்த்து விட்ட தயாரிப்பாளர்களை மறந்துவிட்டு, வளர்ந்த பிறகு சொந்த தயாரிப்பில் நடிக்க போய் விட்டார்கள் பல நடிகர்கள். ஆனால் சொந்த படம் எடுத்து, தயாரிப்பில் உள்ள கஷ்டத்தை புரிந்துகொண்டு வளரும் சந்திரனை பார்ப்பது மகிழ்ச்சி” என்றார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா.
“சிவலிங்கா, குற்றம் 23 படங்களை ரிலிஸ் செய்யும் பிஸியில் கூட, இந்த படத்தின் கதையை கேட்டு உடனடியாக பண்ணலாம் என ஓகே சொன்னார்கள் தயாரிப்பாளர்கள். எடிட்டர் வெங்கட் குறும்பட காலத்திலேயே என் நண்பன். அவன் இந்த படத்தில் இருந்தால் நல்லாயிருக்கும்னு அண்ணன்கிட்ட கேட்டேன், எந்த மறுப்பும் இல்லாமல் கமிட் பண்ணி விட்டார். லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, கோடிக் கணக்கில் பணம் போட்டு எனக்காக படத்தை தயாரித்திருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நாயகன் சந்திரன்.
“ரகுநாதன் தான் சந்திரனின் அண்ணன் என தெரியாத நேரத்தில் அவரிடம் ஒரு கதை சொன்னேன். அவர் சந்திரனுக்காக கதை கேட்கிறார் என்று தெரியாது. கதை ஓகே ஆனவுடன் உடனடியாக டீம் செட் ஆனது. டூப் போட்டு எடுக்க வேண்டிய ஸ்டண்ட் காட்சியை கூட, நானே நடிக்கிறேன் என துணிச்சலாக நடித்தார் சந்திரன். வளர்ந்து வரும் நடிகர் இப்படி நடிப்பது ஆச்சர்யம் தான். சந்திரன், சாத்னா டைட்டஸ் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பார்த்திபன் நடிச்சா நல்லாருக்கும்னு கேட்டேன், உடனே அவரையும் கமிட் பண்ணிட்டாங்க தயாரிப்பாளர்கள். 37 நாட்களில் இந்த படத்தை முடித்திருக்கிறோம், படத்தை பார்த்தால் உங்களுக்கே வியப்பாக இருக்கும். படம் இரண்டு மணி நேரம், பரபரன்னு ஹரி சார் படம் மாதிரி இருக்கும்” என்றார் இயக்குனர் சுதர்.
விழாவில் இயக்குனர் தனபால் பத்மநாபன், நடிகர்கள் வைபவ், நிதின் சத்யா, சுப்பு பஞ்சு, அபினவ், அஜய், அரவிந்த் ஆகாஷ், அஜய், சாம்ஸ், டேனி, தயாரிப்பாளர்கள் கே ஆர் ஃபிலிம்ஸ் சரவணன், இசையமைப்பாளர் அஷ்வத், எடிட்டர் கேல் எல் பிரவீன், எடிட்டர் வெங்கட் ரமணன், கலை இயக்குனர் ரெமியன், தயாரிப்பாளர் பிரபு வெங்கடாசலம், பாடலாசிரியர்கள் நிரஞ்சன் பாரதி, முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.