திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: பின்வாங்கியது மோடியின் இண்டிய தேர்தல் ஆணையம்
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் இண்டிய தேர்தல் ஆணையம் தான்தோன்றித்தனமாக அரசியல் உள்நோக்கத்துடன் அறிவித்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை, கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்திருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதால் அவரது திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருக்கிறது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் திருவாரூர் தொகுதி உட்பட (வழக்கு நிலுவையில் இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி நீங்கலாக) தமிழகத்தில் காலியாக இருக்கும் 19 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இப்போதைக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என்று இண்டிய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு 03-12-2018 அன்று கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
ஆனால் கஜா புயல் பாதிப்பையோ, தமிழக அரசின் கோரிக்கையையோ ஒருபொருட்டாக மதிக்காத மோடியின் தேர்தல் ஆணையம், அரசியல் உள்நோக்கத்துடன் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தான்தோன்றித்தனமாக அறிவித்தது.
ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், நிவாரணப் பணிகள் முழுமையாக நடைபெறாமல் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதில் இன்னும் இடர்பாடுகள் நீடிப்பதால், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்தன.
மேலும், எம்.எல்.ஏ-க்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று (07-01-2019) விசாரணைக்கு வர உள்ளது.
இடைத்தேர்தலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிடும் சூழல் இருப்பதால், இண்டிய தேர்தல் ஆணையம் முந்திக்கொண்டு, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக நேற்றைய (06-01-2019) தேதியிட்ட கடிதத்தில் அறிவித்துள்ளது.