திராவிட அமைப்புகள் ஒன்று திரண்டு அமைப்பினரை இதுபோல் திரட்டிக் காட்டியிருந்தால்…?
நீதிமன்ற தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் இந்த கூட்டத்தை இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவாரம் மதுரை பழங்காநத்தத்தில் கூட்டியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் பற்றி ஆய்வு செய்த ஓர் ஆய்வறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு தகவல் சொன்னார். வாரத்துக்கு ஒருமுறை இணையவழியில் ஓர் ஆர்எஸ்எஸ்காரர் இரு சங்கப்பரிவார – இந்துத்துவ அமைப்புகளை தவறாது சந்திப்பாராம். அமைப்புகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதும் அடுத்த பணி குறித்தும் அந்த சந்திப்பு இருக்குமாம். நாட்டில் உள்ள எல்லா இந்துத்துவ அமைப்புகளும் இப்படி ஆர்எஸ்எஸ்ஸின் இயக்கத்துக்குள் வருவதாக அந்த ஆய்வறிஞர் குறிப்பிட்டார்.
இதுபோல் தமிழ்நாட்டில் பல திராவிட இயக்கங்களும் அம்பேத்கரிய இயக்கங்களும் மார்க்சிய இயக்கங்களும் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் இன்னொரு அமைப்புடன் ஏதோ ஒருவகை பிணக்கும் போட்டித்தன்மையும் கொண்டிருக்கும். அதை தீர்க்கும் தன்மையும் எவருக்கும் இல்லை. திராவிட அமைப்புகள் ஒன்று திரண்டு அமைப்பினரை இது போல் திரட்டிக் காட்டியிருந்தால், இன்று இந்த சங்கப் பரிவார கூட்டம் திருப்பரங்குன்ற மக்களை அச்சுறுத்தியிருக்க முடியாது.
சீமான் பெரியாரை அவதூறு பேசுகையில் 30 இயக்கங்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து முடிந்தது. இன்னும் அதிக இயக்கங்கள் இங்கு உண்டு. ஆனால் கூட்டமைவுக்கு வழி கிடையாது.
கருஞ்சட்டை பேரணி, நீலச்சட்டை பேரணி, செஞ்சட்டை பேரணி போன்ற முன்னெடுப்புகள் பிற இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு தொடரப்படவில்லை. கருஞ்சட்டை பேரணி பற்றி வடக்கு பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசும்போது பிரமித்தார். அது போன்ற கூட்டமைவுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்படி அறிவுறுத்தினார்.
சீமான் போன்றவொரு ஆள் பெரியாரை பற்றி பேசிக் கொண்டுதான் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார். இன்று பழங்காநத்தத்தில் சங்கப்பரிவாரக் கூட்டம் ஒரு பெரும் திரட்சியைக் காட்டியிருக்கிறது. நமது தனிமனிதவாதம், பெரிய அண்ணன் நடத்தை போன்றவை ஒழியுமா என்றுதான் தெரியவில்லை.
‘யார் இவர்கள்’ என மதுரை மக்கள் சங்கப்பரிவார கூட்டத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல, மார்க்சிய-திராவிட-அம்பேத்கரிய இயக்கங்களுக்கு இடையே கூட்டமைவு ஏற்படாத நிலையை தமிழ்நாடு மக்கள் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வோம்.
RAJASANGEETHAN