“ஹெச்.ராஜாவை தமிழக இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்!”
“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் ஹெச்.ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர்.
நேற்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்காமல், பத்திரிகையாளர்களையே தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தமிழக ஊடகத்தினர் நரேந்திர மோடியை தொடர்ந்து சிறுமைப்படுத்துவதாகவும் ஆத்திரம் பொங்க கூறியிருக்கிறார். மேலும் தேவையில்லாமல் சோனியா காந்தி குறித்து இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
தம் மீது பிரதமர் பதவி திணிக்கப்பட்டபோது அதை மறுதலித்தவர் சோனியா காந்தி. சோனியா காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த அந்நியர் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தமது உயிரையே தியாகம் செய்த இந்திராவின் அன்பு மருமகளான சோனியாவின் தேசப்பற்று, விடுதலைக்காக துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதேபோல, பயங்கரவாதத்திற்கு தமது கணவர் ராஜீவ்காந்தியை பலிகொடுத்தவர் சோனியா காந்தி. இத்தகைய அரும்பெரும் தியாகங்களை செய்த சோனியா காந்தியைப் பற்றி விமர்சிப்பதற்கு பாஜகவில் எவருக்கும் அருகதையில்லை.
நீண்டகாலமாக தமிழக அரசியலில் அதிகப் பிரசங்கித்தனமாக காங்கிரஸ் தலைவர்களையும், தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளையும் நாக்கில் நரம்பின்றி நரகல் நடையில் ஹெச். ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். இவரது பேச்சை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் வெடித்துள்ளன.
இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பிறகும் தன்னை திருத்திக் கொள்ளாமல் இந்தியாவை ஆளுகிற கட்சி என்கிற ஆணவத்தில் தொடர்ந்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி இழிவாக கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் ஆளும் கட்சி என்பதால் நாலாந்திர அரசியல்வாதியைப் போல பேசி வருகிற ஹெச். ராஜாவை, 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் எச்சரிக்க விரும்புகிறோம். இத்தகைய பேச்சுக்களை உடனடியாக அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துமீறிப் பேசி வருகிற இவரை அகில இந்திய பாஜக அடக்கி வைக்க வேண்டும்.
லட்சோபலட்சம் தொண்டர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச். ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச். ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விவசாய போராட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் பத்திரிகையாளர்களையும், சோனியா காந்தியையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த ஹெச். ராஜாவை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.