ஆரியத்துவ வேட்பாளருக்கு அதிமுக கட்சிகள் ஆதரவு: திருநாவுக்கரசர் கண்டனம்!
மத்திய ஆரியத்துவ மோடி அரசுக்கு அடிபணிந்து மகா மட்டமான எடிபிடிகளாய் மாறிப்போன அதிமுக (அம்மா) கட்சியும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியும், குடியரசு தலைவர் தேர்தலில், மோடியின் பாஜக நிறுத்தியிருக்கும் ஆரியத்துவ வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. அதிமுக கட்சிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை) அறிவித்தார். நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியும் பாஜக வேட்பாளர் ராமநாத் கோவிந்தை ஆதரிப்பதாக இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்” என்றார்.
இவ்விரு அதிமுக கட்சிகளின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த அரசியல் பாதைக்கும் எண்ணங்களுக்கும் மாறாக வகுப்புவாத பாஜக வேட்பாளரை ஆதரிப்பதற்கு அதிமுக முனைந்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது” என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. பிரதமர் தொலைபேசியில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டதும் அடுத்த நொடியே அவரை ஆதரிக்கிற முடிவை முதல்வர் பழனிசாமி எடுத்திருப்பது வியப்புக்குரியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவின் இன்னொரு அணியும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த அரசியல் பாதைக்கும் எண்ணங்களுக்கும் மாறாக வகுப்புவாத பாஜக வேட்பாளரை ஆதரிப்பதற்கு அதிமுக முனைந்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
அதிமுகவின் இரு அணிகளுமே தமிழ்நாட்டு நலனைவிட சுயநல அரசியல் ஆதாயத்தின் அடிப்படையிலேயே இத்தகைய முடிவு எடுத்துள்ளன. மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க துணிவற்ற நிலையில் அதிமுகவும், பழனிசாமி அரசும் இருப்பதால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளிலிருந்து மீட்க எந்த நிவாரணமும் வழங்காத பாஜக அரசை அதிமுக ஆதரிக்க முனைவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இத்தகைய சுயநல போக்கு காரணமாக எதிர்காலத்தில் மிகப்பெரிய விலையை அதிமுக கொடுக்க வேண்டிவரும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.