“எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்”! – திருமாவளவன்

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப் நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ப்ரிவியூ திரையரங்கில் பார்த்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைக்கு தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம்.

சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கிறது. யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்தவில்லை.

இன்றைய இளைஞர்கள் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நுட்பமாக இதன் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதியை கடந்து நட்பு உருவாக வேண்டும், அது வலுவாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் நண்பர்களாக வரும் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வழிகாட்டுவதாக ஜனநாயகத்தை கற்பிப்பதாக இருக்கிறது.

அருள்நிதியின் நடிப்பு அபாரமாக உள்ளது. நடிப்பில் முதிர்ச்சி வெளிப்படுகிறது. சாதிகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல்கள் வெடிப்பதுக்கு அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் அதிகார வர்க்கத்தின் அணுகுமுறையும் காரணமாக இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகள் தங்கள் சாதியை ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள் என தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் ஓர் உரையாடலை வைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டு சமூகத்தை சேர்ந்த மூர்க்கன், பூமிநாதன் இடையே நட்பு மேலோங்குகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியமாக வேண்டும் என்ற இயக்குநரின் வேட்கை, கனவு வெளிப்படுகிறது. சாதி என்ற உடன் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. சாதி என்றவுடன் காதலை தூக்கி எறிந்து விட கூடாது. திரைப்படத்தில் இரண்டு காதல்கள் வருகிறது. சாதியை கடந்து மொழியைக் கடந்து காதல் வர வேண்டும் என்பதை சிறப்பாக சித்தரிக்கிறது இந்த திரைப்படம்.

மூர்க்கன் தலித் அல்லாத சமூகத்தில் எழும் நாயகனாகவும் பூமிநாதன் தலித் சமூகத்தில் மிளிர்கிற நாயகனாகவும் இரண்டு கதாபாத்திரங்களுடன் அதிகார வர்க்கத்தை தோலுரித்திருக்கிறார்கள்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாக்கே உயர்வானது என்பதை இயக்குநர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்தத் திரைப்படம் மிகச்சிறந்த போதனையை சாதியவாதிகளுக்கு, மதவாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, அதிகார வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டக் கூடிய ஒரு திரைப்படமாக இருக்கிறது கழுவேத்தி மூர்க்கன்” என்றார்.