“சுவாதி கொலை வழக்கு விசாரணை செல்லும் பாதையில் சந்தேகம்!” – திருமாவளவன்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பிராமண இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற தலித் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அவரது இந்த கோரிக்கை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். உண்மையான குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலும் அது பற்றி கவலையில்லை என்றார்.
மென்பொருள் இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நீங்கள் சிபிஐ விசாரணை கோர காரணம் என்ன?
இவ்விவகாரத்தில் என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ராம்குமாரை குற்றவாளி என்றோ அல்லது அவர் நிரபராதி என்றோ எவ்வித வாதத்தையும் முன்வைக்கவில்லை. அது நீதிமன்ற விவகாரம். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த வழக்கு விசாரணை செல்லும் பாதை சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. எனது முதல் வாதமே காவல்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுதான். காவல்துறை மிக கவனமாக செயல்பட்டு தெரிந்தெடுக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஊடகங்கள் வாயிலாக கசியவிட்டிருக்கிறது.
உங்கள் குற்றச்சாட்டை விரிவாக விவரிக்க முடியுமா?
திடீரென ஒரு வழக்கறிஞர் ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார். அதுவும் ராம்குமாரிடம் வக்காலத்து பெறாமலேயே அந்த ஜாமீன் மனுவை அவர் தாக்கல் செய்கிறார். அவர் மத்திய அரசு வழக்கறிஞர், பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். அந்த ஜாமீன் மனுவில், ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இது எனக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அனுதாபியான ஒருவர் பிராமணப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தலித் ஒருவருக்காக வாதாடுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது அனுபவத்தின் மூலம் சொல்கிறேன், இது சாத்தியமற்றது என்று. ராம்குமாருக்கு போலியாக ஆதரவு தெரிவித்து உண்மைக் குற்றவாளியை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக தோன்றுகிறது.
ஒருபுறம் பாஜக, ஆர்எஸ்எஸ் தலையீட்டால் சுவாதி வழக்கில் குளறுபடிகள் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதே வேளையில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஐ அமைப்பின் விசாரணையை கோருகிறீர்கள். இது முரணாக இருக்கிறதே?
சிபிஐ அமைப்பு அரசியல் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது உண்மையே. ஆனால், ஆதிக்க சாதிகளின் கோரிக்கைகளுக்கு வெகு சீக்கிரம் செவிசாய்க்க பழகிவிட்ட மாநில போலீஸாரைவிட சிபிஐ விசாரணை நியாயமாக இருக்கும் என்பதே எனது பார்வை. பிரமாண மக்கள் எண்ணிக்கை ரீதியாக தமிழகத்தில் அதிகமாக இல்லையென்றாலும் சமூகக் கட்டமைப்பில் செல்வாக்கு மிகுந்த பதவிகளில் அவர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். தலித்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை காவல்துறை எப்படி கையாளும் என்பதற்கான படிப்பினையை கடந்த காலங்கள் எங்களுக்கு தந்திருக்கிறது.
ராம்குமார் கைதை நீங்கள் வரவேற்றீர்கள். போலீஸ் துரித நடவடிக்கையைப் பாராட்டினீர்கள். ஆனால், இப்போது ஏன் அந்த நடவடிக்கையின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கிறீர்கள்?
அது ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் வழக்கு செல்லும் பாதையின் காரணத்தால். சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை கைது செய்வதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இப்போதுதான், கோகுல்ராஜ் கொலை வழக்கை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். குற்றவாளி யார் என வீடியோ ஆதாரத்துடன் தெளிவாக தெரிந்திருந்த நிலையிலும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜை சுதந்திரமாக விட்டுவைத்திருந்தது காவல்துறை. முதல் தகவல் அறிக்கை பதிவதிலும்கூட தாமதம் நிலவியது. யுவராஜ் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். ஆனால், யுவராஜ் இருப்பிடமே தெரியவில்லை என போலீஸார் கூறிவந்தனர். கோகுல்ராஜ் தற்கொலை செய்துவிட்டதாகக் கூட கூறப்பட்டது.
இதுதான் போலீஸ் மனநிலை. ஆதிக்க சாதி தலையீட்டால் அவர்கள் எளிதில் திசை மாறிவிடுவார்கள். சுவாதி வழக்கில் ஊடகங்களில் வெளியாகும் அத்தனை தகவல்களும் போலீஸார் கூறியதே. ராம்குமார் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்ற தகவலும்கூட போலீஸார் கூறியதே. இதிலும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. முதலில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் பிளேடால் அறுத்துக் கொண்டார் என்று கதைக்கப்பட்டது. ஆனால், பாஜக சார்ந்த அந்த வழக்கறிஞரோ ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்படுவதே பொய் என்றார்.
இதைத்தான் ராம்குமாரின் தந்தையும் கூறுகிறார். தந்தை என்பதால் மகனுக்கு சார்பாகவே பேசுவார் என ராம்குமார் தந்தை வாதத்தை நாம் புறம் தள்ளினாலும்கூட. ராம்குமார் மீது இதற்கு முன் எந்த வழக்கும் இல்லை என்பதையும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தலித் என்பதாலேயே நீங்கள் தலையிடுவதாக சிலர் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இது முற்றிலும் அர்த்தமற்றது. அவதூறானது. ராம்குமார் குற்றவாளி, நிரபராதி என்ற எந்த நிலையையும் நான் எடுக்கவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இது ஒரு படுகொலை. ஆணாதிக்கத்தின் வன்முறை வெளிப்பாடு. குற்றவாளி யாராக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சுவாதியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நான் இதுவரை ராம்குமார் குடும்பத்தில் யாரையும் சந்திக்கவில்லை என்பதே உண்மை. சுவாதி கொலை வழக்கை சாதிய பார்வையுடன் நான் அணுகவே இல்லை. எனது வேண்டுகோள் எல்லாம் இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை நியாயமான விசாரணை மூலம் கண்டறிய வேண்டும் என்பதே.