இந்தி, உருது, அரபி உள்ளிட்ட 13 மொழிகளில் திருக்குறள் வெளியீடு!
திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை ஒன்றிய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு (சிஐசிடி) ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்கியது. அதன்படி சம்ஸ்கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சவுராஷ்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
தஞ்சாவூரை சேர்ந்த முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்தியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேராசிரியர் எஸ்.ராஜகோபாலன், அரபியில் ராமநாதபுரம் பேராசிரியர் ஏ.பஷீர் அகமது ஜமாலி, உருதுவில் சென்னை பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் அமானுல்லா, பாரசீகத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி எஸ்.சாத்தப்பன் என பலர் மொழிபெயர்த்துள்ளனர்.
இந்த மொழிபெயர்ப்பு அனைத்தும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
சிஐசிடிஎல் சார்பில் ஏற்கெனவே 2012-ல் பஞ்சாபி மற்றும் மணிப்புரியிலும் 2014-ல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் 2015-ல் குஜராத்தியிலும் திருக்குறள் வெளியாகியுள்ளது.
18 ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு ஒன்றையும் (A Compendium of Tirukkural-3 Vol.) சிஐசிடி வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், சுவிடீஷ், டேனிஷ், கொரியன், ஜப்பானிஸ் உள்ளிட்ட 10 அயலக மொழிகளிலும் அஸ்ஸாமி, துளு, போஜ்புரி, சந்தாலி, கொங்கணி, போடோ, சிந்தி, மைதிலி, மால்டோ உள்ளிட்ட 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் வெளியாக உள்ளது.