திருச்சிற்றம்பலம் – விமர்சனம்
நடிப்பு: தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்
எழுத்து – இயக்கம்: மித்ரன் ஆர்.ஜவஹர்
தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ சார்பில் கலாநிதி மாறன்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அகமது
’யாரடி நீ மோகினி’, ’குட்டி’, ’உத்தம புத்திரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் – இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹரும், நடிகர் தனுஷும் நான்காவது முறையாக இணைந்துள்ள படம்; நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்; ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் தயாரித்துள்ள படம்; ‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ் படம்… என ஏகப்பட்ட காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று எடுத்த எடுப்பிலேயே உறுதியாகச் சொல்லலாம்.
‘பழம்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுபவன் இப்படத்தின் நாயகன் ’திருச்சிற்றம்பலம்’. ஒருவிதத்தில் “காதல் போயின் காதல்” என வாழ்ந்த அவனது காதல் கதைகள் தான் இப்படத்தின் கதை.
சென்னையில், டூவீலரில் போய் உணவு டெலிவரி செய்யும் ஆளாக வேலை செய்து வருகிறான், நாயகனான திருச்சிற்றம்பலம் என்ற ‘பழம்’. குடும்பத்தில் பெண் என யாரும் இல்லாமல், தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), அப்பாவும் போலீஸ் இன்ஸ்பெக்டருமான நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்) ஆகியோருடன் வசித்து வருகிறான். மூவரும் ஒரே வீட்டில் வசித்தாலும், ‘அவனே… இவனே…’ என்று ஜாடையாகத் திட்டித் தீர்க்கும் அளவுக்கு அப்பாவுடன் பத்து ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாதவனாகவும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் அளவுக்கு தாத்தாவிடம் நெருக்கம் உள்ளவனாகவும் இருக்கிறான் பழம்.
அவன் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள் நாயகி ஷோபனா (நித்யா மேனன்). ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவளும் பழமும் சிறுவயது முதலே அன்னியோன்யமாகப் பழகிவருவதால், பரஸ்பரம் ‘பெஸ்டி’யாகத் திகழ்கிறார்கள். வலிகளையும், மகிழ்ச்சியையும் பகிர் ந்துகொள்கிறார்கள்.
இந்நிலையில், பழம் தன்னுடன் படித்த அனுஷாவை (ராஷி கண்ணா) தற்செயலாகச் சந்திக்கிறான். பழகுகிறான். படிக்கும்போது ஒருதலையாய் காதலித்த தன்னை அவள் இப்போதாவது காதலிப்பாளா என மனசுக்குள் மருகுகிறான். அவனது தவிப்பைத் தெரிந்துகொள்ளும் ஷோபனா, “உன் காதலை அனுஷாவிடம் சொல்லிவிடு” என்று அறிவுரை கூறுகிறாள். ஆனால் அனுஷா, பழத்தின் காதலை ஏற்க மறுத்துப் போய்விடுகிறாள்.
இந்த நேரத்தில் அப்பா நீலகண்டனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இவர்களது வீட்டுக்கு ஒரு பெண் வந்தால்தான் இவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாத்தா திருச்சிற்றம்பலம், பேரன் பழத்தை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.
ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள தன் குடும்பத்தினருடனும், ஷோபனாவுடனும் கிராமத்துக்கு வருகிறான் பழம். வந்த இடத்தில் ரஞ்சனியை (பிரியா பவானி சங்கர்) பார்க்கிறான். உடனே அவள் மீது காதல் கொள்கிறான். இது பற்றி ஷோபனாவிடம் சொல்ல, ஷோபனாவே ரஞ்சனியை அழைத்து வந்து பழத்துடன் பேச வைக்கிறாள். ஆனால் ரஞ்சனிக்கு பழம் மீது காதல் இல்லை என்பது தெரிய வருகிறது. ஏமாற்றம் அடைகிறான்.
இந்நிலையில் “நீ ஏன் ஷோபனாவை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது” என்று தாத்தா திருச்சிற்றம்பலம் கேள்வி எழுப்ப, தோழியை மணப்பதா என்று பழம் குழம்புகிறான். பின்னர் அவளிடம் திருமண எண்ணத்தைச் சொல்ல, அதை மறுக்கும் அவள், அவனுடன் பேசுவதையே நிறுத்திவிட்டு, வேலை நிமித்தம் கனடா சென்று விடுகிறாள்.
இதன்பிறகு பழத்தின் நிலைமை என்ன ஆனது என்பது படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் மிகப்பெரிய பலமே, கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமான நடிகர் – நடிகையர் தேர்வு தான். நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்தில் பொருந்துவதோடு, கச்சிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
’நடிப்பு அசுரன்’ தனுஷ் என்றால், ’நடிப்பு ராட்சசி’ நித்யா மேனன். இருவரும் போட்டி போட்டு யதார்த்தமாகவும், ரசிக்கும்படியாகவும் நடித்து, பார்வையாளர்களை வசப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்களின் நடிப்பைத் திரையில் காண்பதே சிறந்த சுகானுபவம். இருவரையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.
பாரதிராஜாவின் நகைச்சுவை கலந்த அனுபவ நடிப்பு, படத்தை மேலும் ரசிக்கத் தக்கதாக மாற்றுகிறது.
நடிப்பதற்கென்றே பிறந்த பிறவிக்கலைஞன் பிரகாஷ்ராஜ், நாயகனின் தந்தையாக, போலீஸ் அதிகாரியாக, வயோதிகத் தந்தையின் மகனாக வெளுத்துக்கட்டியிருக்கிறார். மனைவியும், மகளும் இறந்ததற்கு தானே காரணம் என குமுறும்போதும், பக்கவாதம் வந்து படாதபாடு படும்போதும் நம்மையறியாமலே கண் கலங்க வைத்துவிடுகிறார்.
சில காட்சிகளே வந்தாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக ராஷி கண்ணாவும், மிக மிகக் குறைந்த நேரமே வந்தாலும் கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண்ணாக பிரியா பவானி சங்கரும் வந்து, தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்கள்.
இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், இம்முறை நேர்த்தியான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தெளிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் யூகத்தை ஆங்காங்கே உடைப்பதன் மூலம் திரைக்கதையை வலுவாக்கியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.
அனிருத் இசையில் “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே”, ”தாய்க்கிழவி”, “தேன்மொழி” ஆகிய பாடல்கள் ஏற்கெனவே செம ஹிட். பின்னணி இசையிலும் இதம் சேர்த்திருக்கிறார்.
பிரேமுக்கு பிரேம் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் திறமை பளிச்சிடுகிறது.
‘திருச்சிற்றம்பலம்’ – ரசனைக்குரிய ஜனரஞ்சக திரைப்படம்; ரசிகர்களுக்கு தித்திக்கும் திரைப்’பழம்!