திரு மாணிக்கம் – விமர்சனம்
நடிப்பு: சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேஸி, கருணாகரன், சுலில்குமார், சந்துரு, சாம்ஸ், ஸ்ரீமன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: நந்தா பெரியசாமி
ஒளிப்பதிவு: சுகுமார் எம்
படத்தொகுப்பு: குணா
இசை: விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு: ஜிபிஆர்கே சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: ஜி.பி.ரேகா ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில்
வெளியீடு: மாஸ்டர் பீஸ்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் AIM
கேரள மாநிலம் குமுளியில் லாட்டரி சீட்டுகளையும், புத்தகங்களையும் விற்பனை செய்யும் சிறிய கடையை நடத்திவரும் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி சுமதி (அனன்யா), இரண்டு மகள்கள், மனைவியின் தம்பி, மாமியார் ஆகியோருடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்குப் பேச்சுத்திறன் சவால் இருப்பதால் அவருக்கான மருத்துவச் செலவு, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான செலவு, மனைவியின் தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான செலவு எனப் பல பொருளாதார நெருக்கடியில் சிக்கி போராடிக்கொண்டிருந்தாலும் அனைவரிடமும் அன்பாக பழகுகிறார். நேர்மையாக இருக்கிறார்.
இந்நிலையில், முன் பின் பார்த்திராத முதியவர் மாதவபெருமாள் (பாரதிராஜா), மாணிக்கத்தின் கடைக்கு வந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், கையிலிருந்த பணம் தொலைந்துவிட்டதால், நாளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை லாட்டரி சீட்டை பத்திரமாக வைத்திருக்குமாறும் சொல்லிவிட்டுச் செல்கிறார். நல்வாய்ப்பாக, அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது.
இப்போது அந்த லாட்டரி சீட்டு முதியவருக்குச் சொந்தமா, அவர் பணமே கொடுக்காததால் கடைக்காரரான மாணிக்கத்துக்குச் சொந்தமா என்ற குழப்பம் உண்டாகிறது. எனினும், அது அந்த முதியவருக்குத் தான் சொந்தம் என்ற முடிவுக்கு வரும் மாணிக்கம் அதை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.
அந்த முதியவர் யார்? எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல், அவர் கொண்டுவந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பெயரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து பரிசு விழுந்த லாட்டரி சீட்டை அவரிடம் ஒப்படைக்க மாணிக்கம் புறப்படுகிறார்.
இது பற்றி அறிந்த அவரது மனைவி சுமதி உள்ளிட்ட குடும்பத்தாரும், உறவினர்களும் மாணிக்கத்தின் முடிவுக்கும் முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்தவும், லாட்டரி சீட்டை கைப்பற்றவும் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சியால் மாணிக்கத்தை சில ஆபத்துகளும் துரத்த, முதியவரை கண்டுபிடித்து அவரிடம் லாட்டரி சீட்டை ஒப்படைத்தாரா? அல்லது குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து, லாட்டரி சீட்டை கொடுக்காமல் திரும்பி வந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘திரு மாணிக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தும் மாணிக்கமாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம், தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என்று சமுத்திரக்கனிக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல் இருக்கும் மாணிக்கம் கேரக்டரில், அவர் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார். தன் அனுபவ நடிப்பால், பார்வையாளர்களுக்கு நெருக்கமாகி இருக்கிறார்.
மாணிக்கத்தின் மனைவி சுமதியாக அனன்யா நடித்திருக்கிறார். அமைதியான, குடும்பப் பாங்கான பெண், இரண்டு மகள்களின் பொறுப்புள்ள தாய் என்ற முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அது முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல நடிகையாக முத்திரை பதிக்கிறார்.
முதியவர் மாதவபெருமாள் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். முதுமையின் நடுக்கம், வெகுளித்தனம், வைராக்கியம் போன்ற குணநலன்களை தன் உடல்மொழியால் கொண்டுவந்து, பார்வையாளர்களின் பரிவையும், அனுதாபத்தையும் பெறுகிறார்.
பெரியப்பாவாக வரும் இளவரசு, வாப்பாவாக வரும் நாசர், சர்ச் பாதிரியார் சாமுவேலாக வரும் சின்னி ஜெயந்த், கற்பகமாக வரும் வடிவுக்கரசி. செல்லம்மாளாக வரும் கிரேஸி, சற்குணமாக வரும் கருணாகரன், கேசவனாக வரும் சுலில்குமார், பஸ் டிரைவர்களாக வரும் சாம்ஸ் மற்றும் ஸ்ரீமான் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆனால், சக பஸ் பயணியாக, லண்டன் ரிட்டர்னாக நடித்திருக்கும் தம்பி ராமையா, காமெடி என்ற பெயரிலும், நடிப்பு என்ற பெயரிலும் வெளிக்காட்டும் பாவனைகளும், செயல்களும் சிரிக்க முடியாத கோமாளித்தனமாக மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கு கோபத்தை வர வைக்கும் விதத்திலும் இருக்கிறது.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி. ஒரு சாமானியனின் எளிய கதையை எடுத்துக்கொண்டு, குடும்ப உறவுகளால் உணர்வுகளையும், பரபர காட்சிகளால் விறுவிறுப்பையும் சேர்த்து இதை ஃபீல் குட் படமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், படத்தின் அந்த லாட்டரி மையக்கரு, ஏற்கெனவே வெற்றி, ஹரீஷ் பேரடி நடிப்பில் வெளியான ‘பம்பர்’ படத்தின் கதையை அப்பட்டமாக நினைவூட்டுவது இயக்குநரின் கற்பனை வறட்சியையும், இயலாமையையும் காட்டுகிறது.
விஷால் சந்திரசேகரின் இசையும், சுகுமாரின் ஒளிப்பதிவும், குணாவின் படத்தொகுப்பும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன.
‘திரு மாணிக்கம்’ – பார்க்கலாம்!