திரி – விமர்சனம்
“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது ‘திரி’.
கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். இவர் தன் மகன் ஜீவாவை (அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார்.
இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரியில். பொறியியல் இறுதியாண்டு பயிலும் அவருக்கு ‘மோசமான மாணவன்’ என்ற குறிப்புடன் நடத்தைச் சான்று வழங்கப்படுகிறது. கொதித்துப்போகும் அவர், நீதி கேட்டு அங்கண்ணனைச் சந்திக்கிறார். அதற்குப் பதிலாக அடியே கிடைக்கிறது. ஜீவா திருப்பி அடித்தாரா, இல்லையா, அவர் கையாண்ட வழிமுறை என்ன என்பதுதான் ‘திரி’.
நாயகன் அஸ்வின் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், தந்தைக்கு பாத்திரமான மகனாகவும் அவரது நடிப்பு சிறப்பு. நட்பு, காதல், சண்டை என அனைத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது.
சுவாதி ஒரு செய்தியாளராக, எதற்கும் பயப்படாத ஒரு இளம் பெண்ணாக துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான குறும்புடனும், ரசிக்க வைக்கும் சிரிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.
அர்ஜய் குறைவான காட்சிகளிலே வந்தாலும், தன்னை தாக்கிய ஒருவனை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ஆசிரியருக்குண்டான மரியாதையுடனும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்திலும் அவரது நடிப்பு சிறப்பு.
ஒரு ரவுடி அரசியல்வாதிக்கு உண்டான கெத்துடன் ஏ.எல்.அழகப்பன் கதைக்கு ஏற்ப முக்கிய காட்சியில் வந்து செல்கிறார். மற்றபடி கருணாகரன், டேனியல், செண்ட்ராயன், அனுபமா குமார் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அப்பா – மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை சிறப்பாக சொல்லியிருக்கும் எஸ்.அசோக் அமிர்தராஜுக்கு பாராட்டுக்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வரும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை சிறப்பாக கூறியிருக்கிறார். கல்வி முக்கியம், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை நல்ல உதாரணத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விலைபோகும் பொருளாக கல்வி மாறிவருவதாகவும், கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கக் கூடாதோ, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
‘திரி’ – பார்க்கலாம்!