“465 படங்களை பார்த்துவிட்டு தான் இயக்கவே வந்தேன்!” – ‘திரி’ இயக்குனர்
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தகட்டை வெளியிட, தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.
“திரி’ கல்வியை மையப்படுத்திய, யதார்த்தமான ஒரு கமர்சியல் படம். எடிட்டர் ராஜா சேதுபதியும் படத்தில் என்னோடு நடித்திருக்கிறார். எனக்கு டான்ஸ்னாலே கால் உதறும். முடிந்தவரை ஆடியிருக்கிறேன். குடும்பத்தோடு பார்க்க கூடிய படம்” என்றார் நாயகன் அஸ்வின்.
“ஆர்.பி.பாலகோபி தான் தயாரிப்பாளர் என்றதும், உடனே ஓகே சொல்லி விட்டேன். இயக்குனர் கதை சொல்ல வந்தபோது என்னுடைய காஸ்ட்யூம் என்ன என்று கேட்டேன். இப்ப இருக்குற மாதிரியே வாங்க சார். அப்படி தான் உங்க கேரக்டரையே எழுதியிருக்கேன் என்றார். ‘ஈசன்’ படத்துக்கு சசிகுமார் என்னை வந்து கேட்டபோது என் காஸ்ட்யூமை மாற்றக் கூடாது என்று திட்டவட்டமாக இருந்தேன். படத்துக்கு செய்யும் விளம்பரங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்துவிட்டு தான் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கமும் நல்ல பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இருக்கிறது. விஷால் வேறு அணியை சேர்ந்தவராக இருந்தாலும், எல்லோரையும் அரவணைத்து செல்கிறார் என்றார் தயாரிப்பாளர் அழகப்பன்.
“பொதுவாக நான் பிரிவியூக்களில் படம் பார்ப்பதில்லை. அங்கே உண்மையை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்ப்பது தான் பிடிக்கும். இயக்குனர் அசோக் அமிர்தராஜ் யாரிடமும் வேலை செய்ததில்லை. அவரே தயாரிக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரத்தில் தான் பாலகோபி போல சரியான ஆட்கள் படத்துக்குள் வந்தார்கள். நான் கருத்து சொல்வது மாதிரியே நிறைய படங்கள் என்னை தேடி வருகின்றன. கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும்” என்றார் நடிகர் ஜெயபிரகாஷ்.
“பல படங்களுக்கு, இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தான் பாலகோபி. 20 வருடங்களுக்கு முன்பே எனக்கும் பல படங்களுக்கு உறுதுணையாய் இருந்தவர். அவர் தயாரித்திருக்கும் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன்.
“திரி’ படத்தில் கமிட்டானபோது 3 படங்கள் தான் நடித்துக் கொண்டிருந்தேன். கமிட்டான பின் 15 படங்களில் ஒப்பந்தம் ஆனேன். அதனால் இந்த படத்தில் சில நாட்கள் நடிக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் நடிகர் சென்ட்ராயன்.
“465 படங்களை பார்த்துவிட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ‘துருவங்கள் 16’, ‘மாநகரம்’ போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்சியல் படமா என்று நினைக்க வேண்டாம். நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” எனறார் இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.
நாயகி ஸ்வாதி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுநாதன், காமன்மேன் கணேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி, இசையமைப்பாளர் அஜீஷ், அனுபமா குமார், அர்.ஜெய், டேனி, தளபதி தினேஷ் ஆகியோரும் விழாவில் பேசினர்.