“கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி… சமுதாயத்தின் வீழ்ச்சி” என்ற கருத்தை சொல்லும் படம் ‘தெரு நாய்கள்’!
ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தெரு நாய்கள்’. செ.ஹரி உத்ரா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டி நடிக்கிறார். புதுமுகம் அக்ஷதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இதன் இயக்குனர் செ.ஹரி உத்ரா கூறுகையில், “டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிரான பதிவு தான் இந்த திரைப்படம். ‘கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி… சமுதாயத்தின் வீழ்ச்சி’ என்ற கருத்தை இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை நாசமாக்கும் எரிவாயு குழாய் பதிப்புக்காக, ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ஒரு அரசியல்வாதியை கைக்குள் போட்டுக்கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அவற்றுக்கு எதிராக விவசாய மக்கள் நடத்தும் போராட்டமும் தான் இப்படத்தின் கதை.
இதன் படப்பிடிப்பை மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் நடத்தி முடித்துவிட்டோம். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இசையையும், மே மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறோம்” என்றார் இயக்குனர் செ.ஹரி உத்ரா.
ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம்
இசை – ஹரிஷ் – சதீஷ்
படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தர்
பாடல்கள் – மாஷா (சகோதரிகள்), முத்தமிழ், ஜி.கே.பி, லலிதானந்த்
பாடியோர் – வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம், சபேஷன்
இணை தயாரிப்பு – உஷா
தயாரிப்பு – சுசில்குமார்
ஊடகத்தொடர்பு – நிகில்