ஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு!
“ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது.
இது பற்றிய செய்திக்குறிப்பு:
தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சத்தியபாமா (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை), வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் (சென்னை உயர்நீதிமன்றம்), மோகனசுந்தரம் சுவாமிகள் (திருவில்லிப்புத்தூர் தெய்வத்தமிழ் ஆன்மீகர்), இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல், குடந்தை), கலையரசி நடராசன் (தலைவர், சைவத் தமிழ்ப் பேரவை, ஆவடி), வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன் (கரூர் சித்தர் ஆன்மிகக் கூட்டமைப்பு), ஆசீவக சுடரொளி (ஆசீவகம் – சமய நிறுவனம்), பொன்னுச்சாமி அடிகளார் (தேனி மாவட்டம்), கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), அரங்கநாதன் (அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்), முனைவர் வே.சுப்பிரமணிய சிவா (வள்ளலார் ஆய்வாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1:
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா அறக்கட்டளையும், அவ்வளாகத்தில் உள்ள இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி – திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைத் தொடர்களை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.
ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டு வழிபாடு நடக்கும் தியான லிங்கம் கோயில் மற்றும் ஆதியோகி என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை ஆகியவை இந்து மற்றும் சைவ நெறிகளுக்கும், ஆகம விதிகளுக்கும் புறம்பான வகையில் அமைந்திருக்கின்றன.
இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Controller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu – Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை உரிய மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவற்றை ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.
இவை தவிர, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” (Cauvery Calling) என்ற பெயரால் நிதித் திரட்டியதில் மோசடி நடந்திருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது (Writ Petition No 43414/2019 (GM-PIL)).
இவ்வாறு பலவாறான சமயநெறி மீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 2
இந்து அறநிலைத்துறையைக் கலைக்கும் ஜக்கி வாசுதேவின் முயற்சிக்குக் கண்டனம்!
ஜக்கி வாசுதேவும் வேறு சில ஆதிக்க சக்திகளும் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் நிர்வாகங்களிடம் அனுமதி பெறாமல், அத்துமீறி (Trespass) திருக்கோயில்களின் சன்னிதானங்களுக்கு முன்பாக ஆண்கள் – பெண்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள்ளார் ஜக்கி வாசுதேவ். இது சட்டவிரோதச் செயல்!
ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சற்றொப்ப நூறாண்டுகளாக இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தின் தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் அதன் பன்மைத்தன்மை ஆகும். பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களை நிர்வாகம் செய்ய தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை மிகமிகத் தேவை.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத் துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும்.
எனவே, தமிழ்நாட்டு இந்து மக்கள் அனைவரும் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்று தெய்வத் தமிழ்ப் பேரவை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 3
தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் விதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அன்றாடப் பூசைகளும், வழிபாடுகளும் தமிழ்வழியில் நடைபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தாலும், அதற்குரிய மந்திர நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கோயில்களில் அன்றாட பூசைகள் தமிழ் வழியில் நடத்தப்படுவதில்லை.
இந்த விதிமீறல் தொடரக் கூடாது எனத் தமிழ்நாடு அரசைத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. சமற்கிருதத்தில் பூசை நடத்த வேண்டுமெனக் கோருவோரைத் தவிர, இயல்பாக நடக்கும் அனைத்துப் பூசை மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவதை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடைமுறை வழக்கமாக்கிட உறுதி செய்ய வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
உண்ணாப்போராட்டம்!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆன்மிகர்கள் – அடியார்கள் – தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்புடன் – தஞ்சையில் வரும் 08.05.2021 – காரி(சனி)க்கிழமை நாளன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை – கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி, ஒருநாள் வேண்டுகோள் உண்ணாப் போராட்டம் நடைபெறும்.
நம் ஆன்மிகம் காக்கும் இப்போரட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது!