“தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற தலைப்பு நீதித்துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தராது”: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேச்சு

Al -TARI Movies சார்பில் தயாரிப்பாளர் CR. செல்வம் தயாரிப்பில், இயக்குநர் தீரன்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “தீர்ப்புகள் விற்கப்படும்”.  ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசம், குற்றங்கள் குறித்த சமூகத்தின் மீதான சாட்டையடி,  இவற்றோடு பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை உருவாக்கும் ஒரு தரமான படைப்பாகவும் உருவாகியுள்ளது இப்படம். 11:11 Productions சார்பில்  தயாரிப்பாளர் Dr.பிரபு திலக் இப்படத்தை வழங்குகிறார்.

டிசம்பர் 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

0a1f

இவ்விழாவில் பேசியோர் பேச்சு விவரம்:

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு:

இந்தப்படத்தின் முன்னோட்டத்தை காண அழைத்த பிரபுதிலக் மற்றும் அவரது அம்மாவுக்கு நன்றி. இந்த தலைப்பு உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். ஆனால் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தராது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சன் கோகுலே கடந்த வாரம் நீதிபதிக்கு நீதி என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அது குறித்தான பேட்டியில், நீதித்துறையில் ஊழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார். இது தான் நாட்டின் நிலைமை நடைமுறை. பலபேர் நாட்டில் முழு தண்டனை அனுபவித்து விட்ட பிறகு நிராபராதி என தீர்ப்பாகும்.  நீதி விற்கப்படுவது மட்டுமல்ல மறுக்கப்படவும் செய்யும். அதை புரிந்துகொண்டு, இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்துவோம்  நன்றி.

தயாரிப்பாளர் Dr.பிரபு திலக்:

இந்த நாள் மீண்டும் வருமா என்று ஏக்கமாக இருந்தது. கொரோனா பயம் நீங்கி நாம் மீண்டும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் பணத்தாலும் பாசத்தாலும் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது எனும் வசனம் வரும், அப்படியெனில் தீர்ப்புகள் விற்கப்படும் என்பது எதைக்குறிக்கிறது என்பதில் தான் இப்படத்தின் கதை அடங்கியிருக்கிறது. சிபியை வைத்து வால்டர் படத்தை தயாரிக்க முடிந்தது. இப்போது அவரது அப்பாவை வைத்து உருவான படத்தை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல படங்களுக்கு 11:11 Productions  நிறுவனம் ஆதரவு தரும். சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறி தான். தண்டனைகள் இங்கு கடுமையாக்கப்பட வேண்டும். என்ன மாதிரி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அது நியாயமாக இருக்குமா என்பதை விவாதிக்கும் படமாக இப்படம் இருக்கும்.

Al -TARI Movies சார்பில் ரஷீக் :

என்னுடைய தயாரிப்பாளர் சார்பாக இங்கு வந்திருக்கும் பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தை வெளிக்கொண்டுவர உதவிய Dr.பிரபு திலக் அவர்களுக்கு நன்றி. நல்ல படத்தை தந்த என் குழுவுக்கு நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

இசையமைப்பாளர் S.N.பிரசாத்:

’தீர்ப்புகள் விற்கப்படும்’ இன்றைய சமூகத்திற்கு தேவையான படம். எனக்கும் இரண்டு பெண்கள்.  மகளே மகளே என் மகள்களுக்குமான பாடலாக நினைக்கிறேன். மோகன்ராஜ், ஶ்ரீகாந்த் இன்றைய சமூகத்திற்கு அவசியமான வரிகளை தந்துள்ளார்கள், படத்தை பாருங்கள். ஆதரவு தாருங்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் ஆஞ்சி:

இந்தப்படம் எழுதும்போதே சத்யராஜ் சார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதேபோல்  அவர் அற்புதமாக நடித்து தந்தார். இந்தப்படத்திற்கு பிறகு இயக்குநர் தீரன் பெரிய இடத்திற்கு செல்வார். படத்தை எல்லோரும்  சேர்ந்து  நன்றாக உருவாக்கியுள்ளோம் எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் AL.உதயா:

இந்தப்படம் முதலில் ஆரம்பிக்கும்போது தீரன் என்னுடைய ஆபிஸில் ஆபிஸ் பாயாக இருந்தார். ஆபிஸில் யாரும் இல்லாதபோது திரைக்கதை எழுதிக்கொண்டிருப்பார். இப்போது அவர் இயக்குநர் ஆகியிருப்பது எனக்கு பெருமை. சத்யராஜ் சாரை வைத்து படம் செய்துள்ளார், அவருடன் ஒரு காட்சியாவது நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரை வைத்து தீரன் இயக்கியிருப்பது மகிழ்ச்சி. படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த டைட்டில் சத்யராஜ் சாருக்கு கச்சிதமாக பொருந்தும். ஒருவருக்கு உதவி தேவைப்பட்ட போது சிபியை அணுகினேன். ஆனால் உடனே சத்யராஜ் சார் உதவினார் அவர் செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை அவ்வளவு எளிமையாக இருக்கிறார். இந்தப்படம் சமூகத்திற்கு தேவையான படமாக இருக்கும். தீர்ப்புகள் விற்கப்படும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் SA சந்திரசேகர்:

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ மிக  அழுத்தமான தலைப்பு. இதுவரை தீர்ப்புகளை விற்காத நீதியரசர் சந்துரு, கடமை தவறாத காவல் அதிகாரி திலகவதி, நெற்றிகண் திறந்தாலும் குற்றம் குற்றமே எனும் கோபால் இவர்களை வைத்துக்கொண்டு இந்த தலைப்பை கேட்க  நன்றாக இருக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை என்று 80களிலேயே  சட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தேன். நான் நேரில் அனுபவித்த விசயத்தை வைத்துக் கொண்டு, 20 வருடங்கள் சட்டத்தை எதிர்த்து, கதை செய்தேன். இன்றைய காலத்தில் வில்லன்கள் அதிகமாகி விட்டார்கள் இண்டலிஜெண்டாக இருக்கிறார்கள். வில்லன்கள் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்கள். தகப்பனுக்கும் மகளுக்கும் உண்டான பாசத்தை இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். பாசம் தான் இறுதியில் ஜெயிக்கும். நல்லவர்கள் தான் கடைசியில் ஜெயிப்பார்கள். தனிமனிதன் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. குற்றவாளிக்கு தண்டனை கிடைத்து விட்டால் ஏன் தனி மனிதன் கையில் எடுக்கப்போகிறான். நீதிபதி சந்துரு போல் நல்லவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு சில போலிகளும் இருக்கிறார்கள். அம்மாதிரி கதையை இதில் சொல்லியிருக்கிறார்கள். சத்யராஜ் என்ன கதாப்பத்திரம் தந்தாலும் அசத்திவிடுவார். ஆஞ்சி நல்ல கேமராமேன். தீரன் முதல் படமே சமூக பொறுப்போடு செய்துள்ளார். வாழ்த்துகள்.

நடிகர் சத்யராஜ்:

இன்று எனக்கு பெருமையான நாள். நிஜ ஹீரோவுக்கு முன்னால் நிழல் ஹீரோவாக நான் இருக்கிறேன். நீதிபதி சந்துரு அவர்களே டைட்டில் ஓகே என்று சொல்லிவிட்டார். படத்தில் இனி பிரச்சனை வந்தால் பார்த்து கொள்ளலாம். ஆஞ்சி சார் தான் இந்தக்கதைக்காக என்னை அணுகினார். கதையை இயக்குநர் தீரன் சொன்னபோதே கதை மிகவும் பிடித்துவிட்டது. கதை சென்சாரில் மாட்டிக்கொள்ளுமோ என சந்தேகம் இருந்தது. ஏனெனில் பாரதிராஜா சார்  இயக்கத்தில் நான் நடித்த வேதம் புதிது படத்தை சென்சாரில் தடை என்று சொல்லி விட்டார்கள். அப்போது எம் ஜி ஆர் சார்  சி எம், அவர் கேள்விப்பட்டு, பாரதிராஜாவிடம் படத்தை போடு என்றார். அன்று எம் ஜி ஆர் அருகே கைகட்டிக்கொண்டு, படம் பார்த்தேன். படம் ஆரம்பிச்சு இடைவேளையில் டீ காபி எல்லாம் தோட்டத்தில் இருந்து வந்துவிட்டது. படம் முடிந்த பின்னாடி, ரிலீஸ் டேட் பிக்ஸ் பண்ணுங்க படம் ரிலீஸ் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். அப்படி தான் படம் வந்தது. அப்புறம் பெரியார் படம்,  அந்த படத்தில் பெரியார் பேசியது தான் வசனமாக வைத்தோம். ஆனால் பெரிய எதிர்ப்பு வந்தது. கலைஞரிடம் கேட்ட போது, பெரியாரே எதிர்ப்பில் வந்தவர் தானே அப்புறம் படத்திற்கு மட்டும் வராதா என்றார். ஆனால் அப்புறம் தான் தெரிந்தது நீதிபதி சந்துரு தான் பெரியார் படம்  வரக் காரணமாக இருந்துள்ளார். அதனால்  இந்தப்படத்தில் சென்சார் பயம் இருந்தது. இப்போது சென்சார் வாங்கி விட்டோம்  என்றார்கள் ஆனால் இந்த காலத்தில் படம் வந்த பிறகு சென்சார் செய்கிறார்கள், ஜெய்பீம் வந்த பிறகு பலர் சென்சார் செய்கிறார்கள்.  இன்று பெரியார் படம், அம்பேத்கார் படம் இருந்தால், படம் ஜெயிக்கிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.  அது போல் இந்தப்படம் இதன் நல்ல கருத்துக்காக ஜெயிக்கும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை இந்தப்படம் பிடித்தால் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சிபிராஜ்:

2கே கிட்ஸ்க்கு  அப்பாவை கட்டப்பாவா தெரியும், 90ஸ் கிட்ஸ்க்கு அமைதிப்படை சத்யராஜா தெரியும், ஆனால் 80களில் இருந்தவருக்கு உங்கள் சத்யராஜா தெரியும் அந்த சத்யராஜை,  அப்பாவை திரையில் கொண்டுவந்திருக்கிறார் தீரன்.  ரொம்ப நாளாக அப்பாவை திரையில் அப்படி பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதைசெய்த தீரனுக்கு நன்றி. 11:11 Productions நல்ல படங்களை தொடர்ந்து தந்து வருகிறார், அவர் தேர்வு செய்தால் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நக்கீரன் கோபால்:

நான் பொதுவாக நிகழ்ச்சிக்கு வருவதில்லை. என்ன கதை என்று கேட்டேன். பாலியல் குற்றம், பொள்ளாச்சி விசயம், ஒரு மகளுக்கு நடக்கும் அவலத்தை எதிர்த்து, தந்தை என்ன தண்டனை தருகிறார் என்பது தான் படம் என்றார்கள். நல்லது என தோன்றியது. இன்றைய சமூகசூழலில் இந்தப்படத்தை எடுக்க ஒரு தைரியம் வேண்டும். தம்பி திலக் படத்தை வாங்கியிருக்கிறார். பிரச்சனைகள் வந்தாலும் பார்த்துக்கொள்வார்.  சமூகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடக்கிறது ஆனால் அதற்கு தீர்வு என்றால், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், இந்தப்படத்தின் இசை விழாவுக்கே பெரிய கூட்டம் வந்துள்ளது படம் கண்டிப்பாக வெற்றி பெறும். நன்றி

திலகவதி பி எஸ்:

இந்தப்படத்தின் தலைப்பு என்னை அதிர வைத்தது. சட்டத்தை தனி மனிதர்கள் கையில் எடுக்கக்கூடாது, சமூகத்தை அது சிக்கலாக்கும் என்று தான் நான் சொல்வேன் ஆனால் இந்தப்படம் தன் மகளுக்காக ஒரு தந்தை சட்டத்தை கையில் எடுப்பதாக கதை அமைந்துள்ளது. நீதிபதி சந்துரு வந்திருக்கிறார் அவர் போராடிய வழக்கை ஜெய்பீம் படத்தில் பார்த்திருப்பீர்கள் . அதனால் நீதி மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட வேண்டாம். ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் சட்டமே வெள்ளைக்காரன் காலத்தில் வைத்தது, அதில் பாதி சட்டங்களை இப்போது ஒரே நாளில் நீக்கி விடலாம் இன்றைய சமூகத்திற்கு ஒத்துவராத சட்டங்கள் வழக்கில் இருக்கிறது அதில் மாற்றம் வர வேண்டும். இந்த காலத்தில் வரும் சில தீர்ப்புகளை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதை நாம் கேட்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள். கேள்விகள் கட்டாயமாக எழுப்பப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். அதை இப்படம் எழுப்பும் என நம்புகிறேன். இப்படத்தில் நல்ல கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள் இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் மயில்சாமி:

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை வரிசையில் தீர்ப்புகள் விற்கப்படும். போஸ்டர் பார்க்கும்போது சத்யராஜ் சார் தோளில் பேக்கோடு நடந்து வருவது நன்றாக இருந்தது. இந்தியாவில் முதல்முறையாக நீதிபதிகள் கோர்ட் வாசலில், நாட்டின் நிலைமை சரியாக இல்லை என பேட்டி தருகிறார்கள், இன்று நிலைமை அப்படி இருக்கிறது. சமீபத்தில் ஜெய்பீம் படத்தில் வந்த  நீதிபதி இங்கு நிஜத்தில் வந்திருக்கிறார். சத்யராஜ் அண்ணா எம் ஜி ஆருக்கு பிறகு தர்மம் செய்து கொண்டிருக்கிறவர். போன் செய்தால் எந்நேரமும் எடுப்பார். இந்த காலத்தில் 2 லட்ச ரூபாய் போன் வைத்து கொண்டு, யாரும் போன் எடுப்பதில்லை நான் கடன்காரன் போன் செய்தாலும் எடுப்பேன். இப்பல்லாம் நான் இரவு போனை எடுப்பதில்லை, ஏனென்றால் இப்பல்லாம் இரவு 10 மணி ஆனால் தண்ணி அடித்து விட்டு தான் போன் செய்கிறார்கள். ஆனால் போனை எடுப்பதில் ஹீரோ சத்யராஜ் சார் தான். இந்தப்படம் அனைவரும் நன்றாக செய்துள்ளார்கள் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் தீரன்:

இதே இடத்தில் உதவி இயக்குநராக நிறைய இசை விழாவில் பங்கேற்று இருக்கிறேன் அப்போதெல்லாம் நமக்கான மேடை கிடைக்காதா என நினைத்துள்ளேன் ஆனால் இப்படிப்பட்ட மேடை கிடைத்தது. என் பாக்கியம். இந்தகதையை சொன்னபோது, ரொம்ப டார்க்காக இருக்கிறது, என பலர் மறுத்து விட்டார்கள். அப்போது தான் அற்புதம் நடந்தது. சத்யராஜ் சாரிடம் போய் கதை சொன்னேன், பாகுபலி வெற்றியில் இருந்தார். அவருக்கு பாகுபலி தாண்டி பெரிய ஆளுமையை நிகழ்த்திவிட்டார். அவரிடம் கதை சொன்னபோது,  தூங்காமல் கேட்டார்.  பவுண்டட் கேட்டார். கொடுத்து விட்டு வந்துவிட்டேன்.  ஒரு நாள் காலையில் 7 மணிக்கு போன் செய்தார். முழு திரைக்கதையையும் படிச்சேன். நாம் பண்ணலாம் என்றார்.  அப்புறம் தான் படம் ஆரம்பித்தது. நான் ஆபீஸ் பாயாக தான் வாழ்வை ஆரம்பித்தேன் தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் சினிமாவில் மத்த எல்லா துறைகளும் பிழைக்க முடியும். தயாரிப்பாளருக்கான இயக்குநரா இரு என்றார் சத்யராஜ் சார். அவர் படத்திற்கு வந்த பிறகு படம் பெரிதாக மாறியது. 11:11 Productions  உள்ளே வந்தவுடன் படம் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது. அவருக்கு நன்றி. என்னுடைய குழு கடுமையாக உழைத்துள்ளார்கள், அவர்களால் தான் இப்படம் முழுமையாகியிருக்கிறது அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.