தீர்க்கதரிசி – விமர்சனம்
நடிப்பு: சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரா, பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி மற்றும் பலர்
இயக்கம்: பி.ஜி.மோகன் – எல்.ஆர்.சுந்தரபாண்டி
ஒளிப்பதிவு: ஜே.லக்சுமண்
படத்தொகுப்பு: ரஞ்சித் சி.கே.
இசை: ஜி.பாலசுப்பிரமணியன்
தயாரிப்பு: பி.சதீஷ் குமார்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (எய்ம்)
ஒரு கிரைம் ஸ்டோரியை அமானுஷ்ய கதை போல் சொல்லி பரபரப்பையும் விறுவிறுப்பையும் கூட்டியிருப்பது தான் ‘தீர்க்கதரிசி’ திரைப்படம்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் மர்ம நபர் ஒருவர், அடுத்து நடக்க இருக்கும் கொலையை / விபத்தை / கொள்ளையை பற்றி முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் கொடுத்து, அச்சம்பவங்களால் பாதிக்கப்பட இருப்பவர்களை காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார். ஆனால், நடக்கப்போகும் துயரச் சம்பவங்கள் பற்றி முழுமையான தகவலைச் சொல்லாததால், அவர்களை காப்பாற்ற முடியாமல் காவல்துறை திணறுகிறது. அதே சமயம், காவல்துறைக்கு தகவல் அளிக்கும் அந்த மர்ம நபர் ஊடகங்களுக்கும் அந்த தகவலைச் சொல்கிறார். இதனால், முகம் தெரியாத அவர், நடப்பதை முன்கூட்டியே அறியும் ’தீர்க்கதரிசி’யாக மக்களிடம் பிரபலமாகி விடுகிறார். அந்த மர்ம நபர் யார்? அவர் சொல்லும் சம்பவங்கள் தற்செயலாக நடப்பவையா? அல்லது திட்டமிட்டு நடத்தப்படுபவையா? அந்த மர்ம நபர் யார் என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘தீர்க்கதரிசி’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதன்மை கதாபாத்திரமாக இருந்தாலும் குரல் மூலமாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சத்யராஜ், படத்தின் இறுதியில் தோன்றி கைதட்டல் பெறுகிறார். அவருடைய அனுபவ நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
போலீஸ் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் அஜ்மல், கதையின் நாயகனாக நடித்தாலும் இறுதிக் காட்சியில் அவரது கதாபாத்திரம் கொடுக்கும் திருப்புமுனை எதிர்பார்க்காதது.
படத்தின் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது வேலையை சரியாக செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.
ஸ்ரீமன், தேவதர்ஷினி, ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அனுபவ நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணனின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் இரவுக் காட்சிகள் மற்றும் லைவ் லொக்கேஷன்களை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.
ஜி.பாலசுப்பிரமணியத்தின் இசையில் காவலர்களுக்கு ஆதரவான பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ரஞ்சித் சி.கே-வின் படத்தொகுப்பு காட்சிகளை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் பி.சதிஷ்குமார் திரைக்கதை அமைக்க, பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இருவரும் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள். சஸ்பென்ஸ் ஆக்ஷன் கதையை மிக நேர்த்தியாக இயக்கியிருப்பதோடு, அதில் சமூகத்திற்கான நல்ல மெசஜையும் சொல்லியிருப்பது பாராட்டும்படி இருக்கிறது.
’தீர்க்கதரிசி’ – சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர்!