தீராக்காதல் – விமர்சனம்
நடிப்பு: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அம்ஜத் கான், அப்துல் லீ மற்றும் பலர்
இயக்கம்: ரோஹின் வெங்கடேசன்
ஒளிப்பதிவு: ரவிவர்மன் நீலமேகம்
படத்தொகுப்பு: பிரசன்னா ஜிகே
இசை: சித்து குமார்
தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
உயிருக்கு உயிராய் காதலித்து, பின் கைநழுவிப்போன காதலியை திருமணத்துக்குப்பின் சந்திக்க நேர்ந்தால், சந்தித்துப் பழக நேர்ந்தால் என்ன ஆகும் என்பது படு சுவாரஸ்யமான கற்பனை. இந்த கற்பனையை அடித்தளமாகக் கொண்டு ‘அழகி’, ‘ராஜா ராணி’ ‘96’ போன்ற பல வெற்றிப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றின் அடித்தளம் ஒன்று என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் வெவ்வேறு விதமாய் வளர்ந்து காதல் காவியங்களாய் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது இணைந்திருக்கும் வெற்றிக்காவியம் ‘தீராக்காதல்’.
மனைவி வந்தனா (ஷிவதா), மகள் ஆர்த்தி (பேபி வ்ரித்தி விஷால்) ஆகியோருடன் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நாயகன் கௌதம் (ஜெய்), வேலை நிமித்தமாக மங்களூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த ரயில் பயணத்தின்போது தனது முன்னாள் காதலி ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) கௌதம் எதிர்பாராத விதமாக சந்திக்கிறான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்த காதல் மீண்டும் புத்துயிர் பெற, இருவரும் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொள்வதோடு மங்களூரில் அடிக்கடி சந்தித்து, மகிழ்ச்சியாக அளவளாவி, தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆரண்யாவின் கணவன் பிரகாஷ் (அம்ஜத் கான்) அவளை தினமும் கொடுமைப்படுத்துவதால் திருமண வாழ்க்கையின் மீது அவள் விரக்தி கொண்டிருக்கிறாள். தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் ஆரண்யா, தன்னை அன்பாக பார்த்துக்கொள்ள கௌதம் இருப்பான் என நினைத்து, சென்னை திரும்பிய பிறகும் அவனுடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறாள்.
ஒரு கட்டத்தில் இது தவறு என புரிந்துகொள்ளும் கௌதம், ஆரண்யாவை விட்டு விலகிச் செல்கிறான். இதனால் கௌதமுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆரண்யா, அவனது மனைவி வந்தனாவை விவாகரத்து செய்துவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு வற்புறுத்துகிறாள். இந்நிலையில் இந்த விஷயம் கௌதமின் மனைவிக்குத் தெரிய வர, அவள் அதிர்ச்சியடைந்து கௌதமைவிட்டு குழந்தையுடன் பிரிந்து செல்கிறாள்.
இந்த பிரச்னையை கௌதம் எப்படி கையாண்டான்? அவனுடன் வந்தனா மீண்டும் இணைந்தாளா? கௌதம் – ஆரண்யா உறவு என்ன ஆனது? என்பது தான் ‘தீராக்காதல்’ படத்தின் மீதிக்கதை.
ஒருபுறம் மனைவி – மகள் மீது பாசம், இன்னொருபுறம் முன்னாள் காதலி மீது அக்கறை என இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் நாயகன் கௌதம் கதாபாத்திரத்தில் வருகிறார் ஜெய். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம் அவருக்கு இருப்பதால், மிக எளிதில் அவரை பார்வையாளர்களால் கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. இந்த படத்தில் சின்ன சின்ன உணர்வுகளைக் கூட மிக நேர்த்தியாக கட்த்தியுள்ளார். குறிப்பாக முன்னாள் காதலியைப் பார்த்தவுடன் அவரின் முகத்தில் தெரியும் புத்துணர்வையும், மனைவியை ஏமாற்றி விட்டோம் என்பதை புரிந்துகொண்டு, மனைவியிடம் நடந்ததை விளக்க முயற்சி செய்யும்போது ஏற்படும் குற்ற உணர்வையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரண்யா என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் முன்னாள் காதலியாகவும், ஒரு கொடுமைக்கார கணவனின் மனைவியாகவும் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைத் தவிர வேறு எந்த நடிகையும் இந்த கதாபாத்திரத்தில் இத்தனை பாந்தமாக பொருந்தியிருப்பாரா என்பது சந்தேகமே. அவ்வளவு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மனைவியாக, காதலியாக, தோழியாக எல்லா இடங்களிலும் வியக்க வைக்கிறார். குறிப்பாக தனது முன்னாள் காதலனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியையும், தன்னால் அவனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் இட்த்திலும் அவரது நடிப்பு சிறப்பு. சில இடங்களில் அவர் வெளிப்படுத்தும் மெல்லிய வில்லத்தனம் அசர வைக்கிறது.
நாயகன் கௌதமின் மனைவி வந்தனா கதாபாத்திரத்தில் வருகிறார் ஷிவதா. ஒரு குழந்தையின் தாயாக, அலுவலகம் செல்லும் மனைவியாக மிக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார். தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை தெரிந்துகொள்ளும் இடங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் கோபம் யதார்த்தம்.
கௌதம் – வந்தனா தம்பதியரின் மகள் ஆர்த்தியாக வரும் பேபி வ்ரித்தி விஷால், இந்த சிறுவயதில் இத்தனை இயல்பான நடிப்பா என வியக்க வைக்கிறது. ஆரம்ப காட்சிகளில் சுட்டிப்பெண்ணாகவும், இறுதியில் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் திறவுகோலாகவும் வந்து மனதில் நிற்கிறாள்.
நாயகன் கௌதமின் நண்பன் அருண் கதாபாத்திரத்தில் வரும் அப்துல் லீ, ஆங்காங்கே நகைச்சுவை வசனங்களை விரவியிருப்பது ரசிக்க வைக்கிறது.
இந்த படத்தின் மிக முக்கியமான பிளஸ் இதன் திரைக்கதையும், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இதை நகர்த்திச் செல்லும் விதமும் தான். கொஞ்சம் அசிரத்தையாக இருந்தால் ‘கள்ளக்காதல் கதை’யாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ள ஒரு ஸ்டோரி லைனை மிகவும் எச்சரிக்கையாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள்.
ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பும், சித்து குமார் இசையும் இப்படத்தை சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றுவதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
’தீராக்காதல்’ – மனைவி இல்லாமல் கணவனும், கணவன் இல்லாமல் மனைவியும் திரையரங்குக்கு தனித்தனியாகப் போய் பார்த்து மனதார ரசித்து மகிழலாம்! தம்பதியராகப் போனால், திரும்பிவரும்போது சண்டை நிச்சயம்! எச்சரிக்கை!