தி ஸ்மைல் மேன் – விமர்சனம்

நடிப்பு: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான், ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன், பேபி ஆலியா மற்றும் பலர்

இயக்கம்: ஷியாம் – பிரவீன்

ஒளிப்பதிவு: விக்ரம் மோகன்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: கவாஸ்கர் அவினாஷ்

தயாரிப்பு: சலீல்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (AIM)

“சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150-வது படம்” என்ற அறிவிப்போடு வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தி ஸ்மைல் மேன்’. போலீஸ் புலனாய்வு செய்யும் ’கிரைம் திரில்லர்’ ஜானரில், ‘சீரியல் கில்லர்’ ரகத்திலான கதையம்சத்தை உள்ளடக்கியுள்ள படம் இது. இக்கதை முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்) ஒரு குற்றவாளியைத் துரத்திச் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி, தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் ’அல்மைசர்’ என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை மறந்து, இன்னும் ஒரு வருடத்தில் ஞாபக சக்தியை முழுமையாக இழந்துவிடுவார் என்றும் மருத்துவர் கூறுகிறார்.

உடல்நல பாதிப்பு காரணமாக முழு ஓய்வில் இருக்கும் சிதம்பரம் நெடுமாறன், தனது போலீஸ் சேவையின்போது புலனாய்வு செய்து தீர்த்து வைத்த குற்ற வழக்கு விவரங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். அந்த புத்தகத்தில் ‘ஸ்மைல் மேன்’ என்ற சீரியல் கில்லர் வழக்கு விவரங்கள் மட்டும் முழுமையாக எழுதப்படாமல் இருக்கிறது. அந்த சீரியல் கில்லரை வெங்கடேஷ் (சுரேஷ் மேனன்) என்ற சிபிசிஐடி உயர் அதிகாரி சுட்டுக்கொன்று அவனது அத்தியாயத்தை முடித்து வைத்துவிட்டார் என்றும், அதன்பிறகு வெங்கடேஷ் மர்மமான முறையில் மாயமாகி விட்டார் என்றும் போலீஸ் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், சிதம்பரம் நெடுமாறன் மட்டும் அது பற்றி தன் புத்தகத்தில் எழுதாமல் பாக்கி வைத்திருப்பது ஏன் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் தொடர்கொலைகள் நிகழத் தொடங்குகிறது. கொல்லப்படுகிறவர்களின் வாயைக் கிழித்து சிரிப்பது போல் வைத்துவிடும் ‘ஸ்மைல் மேன்’ கில்லரின் பாணியில் இத்தொடர் கொலைகள் இருக்கின்றன. இது பற்றி புலனாய்வு செய்ய முன்னாள் உயர் அதிகாரி வெங்கடேஷின் மகனும், இளம் சிபிசிஐடி அதிகாரியுமான அரவிந்த் (ஸ்ரீகுமார்) நியமிக்கப்படுகிறார். அவர் தனக்கு உதவுமாறு புலனாய்வில் நிபுணத்துவம் வாய்ந்த சிதம்பரம் நெடுமாறனை அணுகுகிறார்.

’ஸ்மைல் மேன்’ சீரியல் கில்லர் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டதாக போலீஸ் துறை அறிவித்துள்ள நிலையில், இப்போது ’ஸ்மைல் மேன்’ கில்லர் பாணியை பின்பற்றி இன்னொரு ’copy cat killer’ போலியாக உருவாகி தன் கைவரிசையைக் காட்டி வருகிறான் என்று அரவிந்த் யூகிக்கிறார். ஆனால் இதை ஏற்க மறுக்கும் சிதம்பரம் நெடுமாறன், ‘இவன் வேறு அவன் வேறு அல்ல, இருவரும் ஒருவரே; ஒரே ‘ஸ்மைல் மேன்’ சீரியல் கில்லர்’ தான்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அரவிந்த் நினைப்பது போல் இரண்டு கொலையாளிகளா? அல்லது சிதம்பரம் நெடுமாறன் உறுதியாகக் கூறுவது போல ஒரே கொலையாளியா? கொலையாளியை நெருங்குவது யார் – அரவிந்தா, சிதம்பரம் நெடுமாறனா? அரவிந்தின் தந்தை வெங்கடேஷ் என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சஸ்பென்ஸை இறுதி வரை காப்பாற்றி, திருப்பங்களுடன் விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘தி ஸ்மைல் மேன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சிபிசிஐடி அதிகாரி சிதம்பரம் நெடுமாறனாக சரத்குமார் நடித்திருக்கிறார். கட்டுடலுடன் கச்சிதமாக போலீஸ் அதிகாரி போலவே கம்பீரமாகவும், மிடுக்குடனும் இருப்பதால் அவரை தேடி போலீஸ் அதிகாரி வேடம் நிறைய வருவதில் ஆச்சரியமில்லை. அவரும் படத்துக்குப் படம் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக வந்து தனது நற்பெயரை தக்க வைத்துக்கொள்கிறார். இந்த படத்தில் ‘அல்மைசர்’ என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராகவும், அதே நிலையில் சீரியல் கில்லரைப் பிடிக்க முயல்பவராகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார். மறந்து போனாலும் நினைவுபடுத்திக்கொள்ள வசதியாக முக்கிய தகவல்களை அவர் குரல் பதிவு மூலம் தன் செல்போனில் பதிவு செய்துகொள்வது கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மையை அதிகப்படுத்துகிறது. சரத்குமார் இன்னும் பலப்பல படங்களில் நாயகனாக நடித்து சாதனை புரிய வாழ்த்துகள்.

இளம் சிபிசிஐடி அதிகாரி அரவிந்தாக வரும் ஸ்ரீகுமார் இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார். அவரது உதவி அதிகாரி கீர்த்தனாவாக வரும் சிஜா ரோஸ் கதாநாயகியாகவோ, ‘லவ் இண்ட்ரஸ்ட்’ ஆகவோ இல்லாதபோதிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

ஃபிளாஷ் பேக்கில் நர்ஸ் சித்ராவாக இனியாவும், அவரது மகளாக பேபி ஆலியாவும் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கொலைகாரனிடம் பேபி ஆலியா சிக்கிக்கொள்ளும் காட்சிகள் நம்மை பதறச் செய்கின்றன.

மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் வரும் கலையரசன் மிரட்டியிருக்கிறார்.

சிபிசிஐடி உயர் அதிகாரி வெங்கடேஷாக வரும் சுரேஷ் மேனன், குமாஸ்தாவாக வரும் ஜார்ஜ் மரியான், பாலமுருகனாக வரும் நடராஜன், பிச்சுமணியாக வரும் ராஜ்குமார், ஜோசப்பாக வரும் மலைராஜன் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

சீரியல் கில்லர் கதை தமிழுக்கு புதிது இல்லை என்றாலும், இதற்குள் எவ்வளவு புதுமைகளைப் புகுத்த முடியுமோ அவ்வளவு புதுமைகளைப் புகுத்தி, பரபரப்பான திரைக்கதை அமைத்து, சீட் நுனியில் உட்காரும் வகையில் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஷியாம் – பிரவீன். லாஜிக்குகளை முறைப்படுத்தி, திரைக்கதையில் – குறிப்பாக ஃபிளாஷ் பேக்கில் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும், சான் லோகேஷின் படத்தொகுப்பும், கவாஸ்கர் அவினேஷின் இசையமைப்பும் கதைக்கு ஏற்ப பயணித்து, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

’தி ஸ்மைல் மேன்’ – கிரைம் திரில்லர் பிரியர்களுக்கு செம விருந்து! கண்டு களிக்கலாம்!