இந்த ஓவியத்துக்கும் ‘த ரெவனன்ட்’ படத்துக்கும் தொடர்பு உண்டு!

இன்று ஆஸ்கர் நாள். இந்தியா The Revenant படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு நூதனமான சமூகம். தன்னால் செய்ய முடியாததை மேற்கத்திய நாடுகள் செய்யும்போது மட்டும் சொரிந்துகொண்டு பாராட்டும், ரசிக்கும் சமூகம். வரலாற்று கதைகளில் தொடங்கி Porn வரை இது தொடர்கிறது. நல்லவை யாவும் இந்தியாவில் இருந்து போனது, தனக்கு பிடிக்காதவை யாவும் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தது என தீர்க்கமாக நம்பும் சமூகம்.

நான் பதிவேற்றி இருக்கும் இந்த ஓவியத்துக்கும் Revenant  படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தொடர்பு உண்டு!

Revenant படம் சொல்வது வெறும் Survival பற்றியது அல்ல. இனக்குழுக்களுக்குள் நடக்கும் சண்டை. குழுவுக்குள்ளே நடக்கும் துரோகமும்கூட. இதை லீடாக வைத்து பின்னப்பட்ட கதை. நமக்கும் அந்த கதைக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதனால் பொதுவில் அனைவராலும் பாராட்டப்படுகிற கதை. இதுவே இந்தியாவில் நடக்கும் இனக்குழு குறித்த கதையாக இருந்தால்…? சந்துக்கு ஒருவர் கிளம்பி இருப்பார். ஏனெனில் ஒரு படைப்பானது யாரையும் குற்றம் சொல்லாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் படைக்கப்பட வேண்டும். அதனால்தான் பனைமர உயரம் பறக்கும் கார்கள், தாவி ஓடும் சூப்பர் ஹீரோக்கள், தொப்புள் ஆம்லேட்கள் இங்கே எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்துவது இல்லை. அதுவே பணம் பார்க்கும் யுக்தியாகி “யார் மனதையும் புண்படுத்தாத” படைப்பாகி விடுகிறது!

இந்த ஓவியத்தை ஒரு முறை உற்றுப் பாருங்கள். இதை முதல் முறை பார்த்தபோது அழுதே விட்டேன் நான். ஒளிந்திருந்து பார்க்கும் அந்த கூட்டத்தின் பயம், தயங்கி எட்டி பார்க்கும் அந்த சிறுவன், பல்லக்கு கடக்கும் வரை காத்திருக்கும் கூட்டம், பல்லக்கில் அமர்ந்திருப்பவனின் முகத்தில் இருக்கும் இறுமாப்பு, பல்லக்கு சுமப்பவரின் முகத்தில் இருக்கும் சோகம்!

உலகம் முழுக்க அடிமை கூட்டம் உண்டு. ஆனால் அந்த அடிமை கூட்டம் எதிரில் கூட வருவது தீட்டு என சொல்லி கழிவுகளாக நடத்தப்பட்ட சமூகம் இந்திய சமூகம். இந்தியாவின் இனக்குழு பிரச்னையை சொல்ல வேண்டுமானால் இதைதான் சொல்ல வேண்டி இருக்கும்.  இந்த ஓவியத்தை முழு நீள படமாக ஓடவிட்டால் அந்த அழுத்தத்தின் வலிமை சொல்லி மாளாதது! ஆனால் நடக்காது. காரணம் அடிமைப்படுத்துவதற்கே அறிவியல் காரணம் சொல்லும் நாடு நம் நாடு. Revenant-ஐ கொண்டாடுகிற நம்மில் பலர், இந்த இன பிரச்னையை ஆழமாக சொன்னால் அதை புறகணிப்பதோடு தடையும் கோருவோம்!

Ignorance என்கிற குவியலின் மேலே நகர்கிறது இந்திய வாழ்க்கை. இங்குள்ள உண்மைகள் ஈர நிர்வாணம். வெட்டுப்படாத ஈர தொப்புள் கொடி கர்ப்பப்பையில் இருந்து வெளியேறிய கழிவுகளோடு யாரிவர் என்கிற ஆதாரத்தோடு பச்சையாக இருக்கிறது. சீவி சிங்காரிக்கப்பட்ட பொய்களின் நடுவே சகிக்க முடியாதபடி இருக்கிறது உண்மைகள்!

இதை ஏற்றுக்கொள்ளுகிற மனோபாவம் நமக்கு வளராமல் போனால் எந்த உண்மையும் இங்கே சொல்ல முடியாது. உலகத் தரமான சினிமா என்று எதையோ நோக்கி பயணிக்க இங்குள்ள கதைகள் தூசு தட்டப்படாமல் இருக்கிறது. நடந்தவைகளை திரும்பிப் பார்ப்பதனால் நியாயமான உள்ளங்கள் அவற்றில் இருக்கிற குறைகளை களைவதற்கு உதவும். புனிதப்படுத்திக்கொண்டே இருக்க முயன்றால், இறுமாப்பின் அடுக்குகள் தோலுரிக்காத பாம்பைப் போல கனத்துக்கொண்டே இருக்கும்!

ஒரு இந்தியனை அடிப்பது வெள்ளைகார பொம்மையாக இருந்தால்கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்கிறபோது சிலிர்த்துக் கொள்கிற மயிர், சுய விமர்சனம் செய்தால் மட்டும் ஏன் சூம்பிப் போகிறது?

இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், வெளிநாட்டு நிலபரப்பில் நடக்கும் அட்டூழியங்களை பதிவு செய்யும் படங்களை பாராட்டுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும்!

இந்த ஓவியனுக்கு ஒரு ராயல் சல்யூட்!

– விஜயபாஸ்கரன் கருணாநிதி