‘விடுதலை பாகம்1’ திரைப்படத்தில் ’ஆகச் சிறந்த லவ் புரொபோசல்’!

பவானிஸ்ரீயின் பாட்டியை கரடி கடித்து விடும். உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பாட்டியை சிலர் துணியில் மடக்கி தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்.

அப்போது, அன்றைக்குத்தான் போலீஸ் பணியில் சேர்ந்து இருக்கும் சூரி, அந்த வழியாக ஜீப்பில் வருவார். காவலர்களுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் அந்த ஜீப்பின் டிரைவர் அவர்!

உடனடியாக சாப்பாட்டு டப்பாக்களை இறக்கி ஓரத்தில் வைத்துவிட்டு அந்தப் பாட்டியையும் மற்றும் சிலரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைவார்.

பாட்டி குணம் அடைந்து பவானிஸ்ரீக்கு நிச்சயதார்த்தம் நடத்துவார். அந்த நிச்சயதார்த்தத்துக்கு சூரி சென்று வருவார்.

ஒரு கட்டத்தில் பவானிஸ்ரீயின் திருமணம் நின்றுவிடும்.

மிகவும் நெருங்கிய சொந்தத்தில் வந்த அந்த மாப்பிள்ளை வீட்டார், பவானிஸ்ரீயிடம் வரதட்சிணை பணம் கேட்டு, அதை அவரால் தர முடியாது என்பதால் வேறு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு போய் விடுவார்!

இந்த நிலையில் பவானிஸ்ரீயும் சூரியும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும் ஒரு சூழல் எற்படும். அப்போதுதான் பவானிஸ்ரீ தனது காதலை வெளிப்படுத்துவார்.

எப்படி?

//ரத்த சொந்தம்ன்னு சொல்லிக்கிட்டு கல்யாணத்துக்கு எங்கிட்ட பணம் கேட்டு விட்டுட்டு போயிட்டாங்க. அவங்கள சொந்தம்ன்னு நெனைக்கிறதா?

எந்த சொந்தமும் இல்லாம என்னோட பாட்டி உசுர காப்பத்திட்டு, அதனால் இப்போ தண்டனைய அனுபவிக்கிற நீ, அத யார்ட்டயும் சொல்லிக்காம இருக்கியே… ஒன்னை சொந்தம்ன்னு நெனைக்கிறதா//

கவனியுங்கள்…!

இந்த வார்த்தைகள் தமிழரசி எனும் பாத்திரத்துக்குச் சொந்தமான வார்த்தைகள். அவளுடைய ஊணிலிருந்து, உதிரத்திலிருந்து உருவான வார்த்தைகள். அவை வெற்றிமாறனுடையவை அல்ல.

இதை தமிழரசி எனும் பாத்திரத்தினுடைய ஆன்மாவின் புலம்பல்; வெற்றிமாறனால் எழுதிக் கொடுக்கப்பட்ட ‘வசனம்’அல்ல.

அதனால்தான் இது ‘படைப்பு’ ஆகிறது.

ஒரு பெண் தனது ஆதரவற்ற சூழ்நிலை, தனிமை வாழ்வு, ஏழ்மை நிலை இவற்றால் எல்லாம் உருவான குழப்பமான மனநிலை என தனது நெஞ்சத்தை திறந்து காட்டும் தருணம் அது.

தமிழரசி எனும் அந்தக் காட்டுப் பெண், தனது நிலையையும் சொல்லி விடுகிறாள், தனது காதலையும் சொல்லி விடுகிறாள். இது ஓர் உருக்கமான உணர்ச்சிகளை பார்வையாளர் மீது படியச் செய்து விடுகிறது!

தமிழ்ச் சினிமாவில் இடம்பெற்ற ‘ஆகச் சிறந்த லவ் புரொபோசல்’ இது அல்லவா!

சூரி பேச்சு வராமல் விக்கித்து நின்று கொண்டு இருப்பார்; நாமும்தான்!

-ம.தொல்காப்பியன்