தி கோட் – விமர்சனம்
நடிப்பு: விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாட்சி சௌத்ரி, பார்வதி நாயர், வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் வாசுதேவன், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்)
எழுத்து & இயக்கம்: வெங்கட் பிரபு
ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
கலை இயக்கம்: ராஜீவன்
சண்டைப் பயிற்சி: திலீப் சுப்பராயன்
தயாரிப்பு: ’ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட்’ கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன் & ரியாஸ் கே அகமத்
‘மன்மதலீலை’, ‘கஸ்டடி’ என வரிசையாக படுதோல்விப் படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அடுத்து விஜய்யின் 68-வது படத்தை இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘டொய்ங்’ என சரிந்துகிடந்த திரைப்படம்; பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டபோதெல்லாம், ‘ஐயையோ’ என விஜய் ரசிகர்களே அலறி வெளியிட்ட எதிர்மறை விமர்சனங்களால் காயப்பட்டு பரிதாபத்துக்குள்ளான திரைப்படம்; இந்த நிலை இப்படியே நீடித்தால் படம் ’பப்படம்’ ஆகிவிடும் என பயந்த கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட படக்குழுவினர், லட்சக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல்கள் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றின் வாயிலாக கடைசி பத்து நாட்களில், “விஜய்யை டீஏஜிங் செஞ்சிருக்கோம்; விஜயகாந்தை ’ஏஐ’ பண்ணியிருக்கோம்; விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில்கூட அரசியலை வச்சிருக்கோம்; சிவகார்த்திகேயன், திரிஷா, மகேந்திரசிங் தோனி எல்லாம் கௌரவத் தோற்றத்தில் வராங்க; அஜீத் பற்றிய ரெஃபரன்ஸும் இருக்கு; இப்படி இந்த படத்தில் நிறைய சர்ப்ரைசஸ் இருக்கு! ஓடி வாங்க, ஓடி வாங்க…” என தொண்டை வறண்டுபோகும் அளவுக்கு கூவிக் கூவி அழைத்து ‘ஹைப்’-ஐ மெல்ல மெல்ல ஏற்றி, எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம் இந்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற ‘தி கோட்’. சுமார் 330 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக பீற்றிக்கொள்ளப்படும் இந்த படம், உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் மத்தியில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
”தாழ்ந்து” கிடக்கும் தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழ் மண்ணை ”நட்டுக்குத்தலாக” தூக்கி நிறுத்துவதற்காக, தனிக்கட்சி தொடங்கி, அதற்கொரு பெயரை அறிவித்து, கொடியையும் வெளியிட்டுள்ள “ஆளப்போகும்” தமிழன் விஜய், தனது படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்று நீளமாகவும், ‘தி கோட்’ என்று சுருக்கியும் தூய ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி, ரூ.200 கோடியைக் கைப்பற்றுவதிலேயே கவனமாக இருந்திருக்கிறார் என்பது ஒருபுறம் இருக்க, இப்படத்தின் கதைத் தேர்விலாவது விழிப்புடன் இருந்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இதன் அடிப்படைக் கதை, எம்ஜிஆர் – நம்பியார் காலத்திலிருந்து பார்த்துப் பார்த்து சலித்துப்போன ‘நல்ல அப்பா – கெட்ட மகன்’ என்ற அமைப்பிலான அரதப்பழசான கதை. ஹீரோவின் சின்னஞ்சிறு வயது மகனை வில்லன் கடத்திக்கொண்டுபோய் வளர்த்து, ஆளாக்கி, ஹீரோவுக்கு எதிராகத் திருப்பிவிடுகிறான் என்ற கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு நூறு திரைப்படங்களாவது வெளிவந்திருக்கும். அந்த வகையில் இந்த ‘தி கோட்’ அரைத்த மாவையே அரைத்திருக்கும் நூற்றியோராவது திரைப்படம் எனக் கொள்ளலாம். என்ன ஒன்று… இந்த கற்காலத்துக் கதையை டீஏஜிங், விஎஃப்எக்ஸ், சிஜிஐ, கென்யா, தாய்லாந்து, மாஸ்கோ என்று பட்டி டிங்கரிங் பார்த்து, நவீன தொழில்நுட்ப மாய்மாலத்துடன் பாலிஷ் செய்து தந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவ்வளவு தான்!
விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் ஆகிய நால்வரும் நண்பர்கள். அதிரடியில் வல்லவர்கள். இந்திய உளவுப் பிரிவான ‘RAW’ அமைப்பில், தீவிரவாதிகளை வேட்டையாடும் ’Special Anti-Terrorist Squad’ எனும் ‘SATS’ படையில், ரகசிய ‘அண்டர்கவர்’ அதிகாரிகளாகப் பணிபுரிபவர்கள். இவர்கள், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மோகனைத் தேடி 2008ஆம் ஆண்டு கென்யாவுக்குச் செல்கிறார்கள். அங்கு ஓடும் ரயிலில் சண்டை நடக்கிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்துச் சிதற, அதிலிருந்த மோகனை அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு விஜய் & ஃபிரண்ட்ஸ் இந்தியா திரும்புகிறார்கள். ஆனால் அந்த சம்பவத்தில் மோகன் தப்பிவிடுகிறார். அவரது மனைவியும், மகனும் உயிரிழந்துவிடுகிறார்கள்.
இதன்பின் மற்றொரு ரகசிய அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதற்காக விஜய் & ஃபிரண்ட்ஸ் தாய்லாந்து போகிறார்கள். அப்படி போகும்போது விஜய், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான சினேகாவையும், 5 வயது மகனையும் உடன் அழைத்துச் செல்கிறார்.. அங்கு விஜய்யின் மகனை மர்ம நபர்கள் நைசாகக் கடத்துகிறார்கள். அவர்களிடமிருந்து மகனை மீட்கும் முயற்சியில் விஜய் ஈடுபடும்போது, அவரது மகன் உள்ளிட்ட குழந்தைகளைக் கடத்திச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்த குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். விஜய்யின் அஜாக்கிரதையால் தான் பிள்ளை பறிபோனது என்ற ஆத்திரத்தில் அவரைவிட்டு பிரிந்து போய் விடுகிறார் மனைவி சினேகா. மனம் உடைந்த விஜய்யும் SATS-ன் ‘அண்டர்கவர்’ அதிகாரி எனும் ரகசிய வேலையை விட்டுவிட்டு, குடியேற்ற (Immigration) துறை அதிகாரி எனும் பகிரங்க வேலைக்கு மாறிக்கொள்கிறார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு – அதாவது தற்போது – பணி நிமித்தம் ரஷ்யாவின் மாஸ்கோவுக்குச் செல்லும் விஜய், அங்கே தன்னைப் போல் அச்சு அசலான உருவம் கொண்ட இளைஞர் ஒருவரைச் சந்திக்கிறார். அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் விஜய்க்கு, தாய்லாந்து விபத்தில் இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் அந்த இளைஞர் என்பது தெரிய வருகிறது.
மகனைக் காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும் விஜய், இழந்த அனைத்தையும் தனது மகன் மூலம் திரும்பப் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும்போது, அவருடன் இருப்பவர்களான பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உள்ளிட்டோர் திடீர் திடீரென்று ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையாளி யார்? அவர் எதற்காக விஜய் மற்றும் அவரது குழுவினரை குறிவைத்து கொலை செய்கிறார்? அவரிடமிருந்து விஜய் தப்பித்தாரா? கொலையாளியைத் தீர்த்துக் கட்டினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு, பார்வையாளர்களின் தலையில் கிலோ கணக்கான மிளகாயை அரைக்கும் விதத்தில் விடை அளிக்கிறது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (எ) ‘தி கோட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதை தான் இப்படி என்றால், திரைக்கதை இதைவிட படுமொக்கை. அதிலுள்ள ஓட்டைகளை எண்ணி மாளாது; சொல்லி மாளாது…
விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் ஆகியோர் ‘SATS’-ன் ’அண்டர்கவர்’ அதிகாரிகளாம். அது அவர்களது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் யாருக்கும் தெரியாதாம். அது எப்படி? இன்று அவர்கள் எந்த ஆபரேஷனுக்குச் செல்கிறார்கள் என்பது வேண்டுமானால் ரகசியமாக இருக்கலாம். ஆனால், அண்டர்கவர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பதுகூட அவர்களது மனைவிகளுக்குத் தெரியாது என்றால்…? இப்படி யோசிப்பதற்கு விசித்திர ஜந்துவின் வித்தியாசமான மூளை வேண்டும்.
ஹீரோ உள்ளிட்ட நான்கு உளவுத்துறை ஆசாமிகளும் சண்டைக் காட்சிகள் நீங்கலாக ஏனைய காட்சிகளில், சாதாரண கான்ஸ்டபிள் வேலைக்குக்கூட லாயக்கில்லாத கேணையன்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கேட்டால்… காமெடியாம்! சிரிக்கத் தூண்டாத அபத்தமான காமெடி!
உயிருக்கு ஆபத்தான அதிரடி நடவடிக்கைக்கு தாய்லாந்து போகும் நாயகன், “வாங்க, வாங்க… செகண்ட் ஹனிமூன் டூர் போவோம்” என்று பொய் சொல்லி தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியையும், ஐந்து வயது மகனையும் உடன் அழைத்துச் செல்கிறாராம். எந்த மடசாம்பிராணியாவது இப்படி வேலியில் இருக்கிற ஓணானைத் தூக்கி ஜட்டிக்குள் போட்டுக்கொள்வானா?
அது மட்டுமா? முன்பின் தெரியாத தாய்லாந்தில், ஆள் நடமாட்டமே இல்லாத மருத்துவமனை வராந்தாவில், “நீ இங்கே உட்கார்ந்திரு. அப்பா போயிட்டு வந்திர்றேன்” என்று தன் ஐந்து வயது மகனை தனியே உட்கார வைத்துவிட்டுப் போகிறாராம் நாயகன். கதைப்படி, அடுத்த நிமிடம் சிறுவன் காணாமல் போக வேண்டுமே… என்ன செய்வது என்று ரூம் போட்டு யோசித்து இந்த ஐடியாவைப் பிடித்திருக்கிறார் இயக்குநர். காரி துப்பத் தோன்றுகிறதா, இல்லையா?
மேலும், ”விபத்தில் உங்க மகன் இறந்துவிட்டான்” என்று ஒரு கரிக்கட்டை சடலத்தைத் தூக்கிவந்து கொடுக்க, அது தன் மகன் தானா என்று கண்டறிய டிஎன்ஏ சோதனை உள்ளிட்ட அறிவியல் நிரூபணங்கள் எதையும் கோராமல், அதை அப்படியே குருட்டுத்தனமாக நம்பி விடுகிறாராம் நாயகன். கதைப்படி, மகன் செத்துப்போனதாக நாயகன் நம்ப வேண்டும் என்பதற்காக, புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டிய ‘அண்டர்கவர்’ அதிகாரியை அடிமுட்டாளாகப் படைத்திருக்கிறார் அமெச்சூர் இயக்குநர் வெங்கட் பிரபு.
ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வீடியோ கேம் மாதிரி அசட்டுத்தனமாக இருக்கிறது…
இதுபோல் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்தெறிய முடியும். விமர்சனம் ரொம்ப நீளமாகப் போய்விடும் என்பதால், இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.
அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். 67 படங்களில் நாயகனாக நடித்து பல வெற்றிகளைக் கண்ட ஒருவர், தனது 68-வது படத்திலும் நன்றாக, சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது “மல்லிகைப்பூ மணக்கிறது” என்று சொல்வதற்கு சமம். அதுபோல, அவரது அதிரடி நண்பர்களாக வரும் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், இவர்களது குழுத் தலைவராக வரும் ஜெயராம், விஜய்யின் மனைவியாக வரும் சினேகா, பிரஷாந்தின் மனைவியாக வரும் லைலா, வில்லனாக வரும் மோகன் ஆகியோரும் தங்களது பல்லாண்டுகால அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மகன் விஜய்யின் காதலியாக வரும் மீனாட்சி சௌத்ரி தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, வழக்கம்போல் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டு’களான பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ், அரவிந்த் ஆகியோர் ஆங்காங்கு தலைகாட்டியிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் நாயகன் என்பதால், சிவகார்த்திகேயன் ஒரேயொரு காட்சியில் மட்டும் கௌரவத் தோற்றத்தில் வந்து போகிறார். விஜய்க்கு வேண்டப்பட்டவர் என்பதால், திரிஷா ஒரேயொரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் தன் வேலையை ஒழுங்காகச் செய்யாததால், படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக நீண்டு, பொறுமையைச் சோதிக்கிறது.
ஹாலிவுட் படங்களுக்குப் பணியாற்றும் பிரபல தொழில்நுட்பக் கம்பெனிகளை காண்ட்ராக்ட் பேசி, பணத்தை கொட்டிக் கொடுத்தால், டீஏஜிங், ஏஐ, விஎஃப்எக்ஸ், சிஜிஐ உள்ளிட்ட அனைத்து நவீன தொழில் நுட்பங்களையும் சிரத்தையுடன் பயன்படுத்தி, ஹாலிவுட் தரத்துக்கு படத்தை நேர்த்தியாகக் கொண்டு வந்துவிடுவார்கள். அது இந்த படத்துக்கும் நிகழ்ந்திருக்கிறது.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (எ) ‘தி கோட்’ – தீவிர விஜய் ரசிகர்களுக்கு… மயக்கும் அபின்! ஏனைய பொதுப் பார்வையாளர்களுக்கு… கெட்டுப்போன ஆட்டுக்கறி விருந்து!