தி டோர் – விமர்சனம்

நடிப்பு: பாவனா, கணேஷ் வெங்கட்ராம், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ், பாண்டிரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஜெய்தேவ்
ஒளிப்பதிவு: கௌதம் ஜி
படத்தொகுப்பு: அதுல் விஜய்
இசை: வருண் உன்னி
தயாரிப்பு: ’ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ்’ நவீன் ராஜன்
பத்திரிகை தொடர்பு: பரணி அழகிரி
கட்டிடக்கலை நிபுணரான நாயகி மித்ரா (பாவனா) வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோயில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோயில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மித்ராவின் தந்தையான வக்கீல் ரத்னம் (நந்தகுமார்) விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார்.
தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் மித்ரா, கட்டிடக்கலைப் பணியிலிருந்து விலக முடிவெடுக்கிறார். ஆனால், கட்டிடக்கலை நிறுவனத்தின் உரிமையாளரான வேல்முருகன் (ஜெயபிரகாஷ்), மித்ராவிடம் பேசி, மீண்டும் பணிக்கு திரும்புமாறு செய்கிறார். பாதியில் நிறுத்திச் சென்ற கட்டிடக்கலைப் பணியை மீண்டும் ஆரம்பிக்கிறார் மித்ரா.
மித்ராவுடன், வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பெண், தூக்கத்தில் எழுந்து நடப்பது, தன் தலையைத் தானே சுவரில் முட்டி ரத்தக்காயம் ஏற்படுத்திக்கொள்வது என வினோதமாக நடந்துகொள்கிறார். தன்னை ஓர் அமானுஷ்ய சக்தி ஆட்டிப்படைப்பதாகவும் சொல்கிறார். பேய், பிசாசில் நம்பிக்கை இல்லாதவரான மித்ரா இதை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், மித்ராவின் கண்களுக்கும் ஒரு பெண்ணின் உருவம் தென்பட்டு மறைகிறது. இது கனவாக இருக்கலாம் என்று நினைக்கும் மித்ரா, அதை உதறி எறிந்துவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போகிறார். ஆனால், அமானுஷ்ய சக்தி விடுவதாக இல்லை. அது மித்ரா முன் திடீர் திடீரென தோன்றி பயமுறுத்துகிறது. இது கனவு அல்ல, ஆவியின் வேலை தான் என்று மித்ராவுக்கு எடுத்துச் சொல்லுகிறார், அமானுஷ்ய விவகாரங்கள் பற்றி அறிந்த விஸ்வா (ரமேஷ் ஆறுமுகம்) என்பவர்.
காவல்துறை அதிகாரியான ராய்ஸுதீன் (கணேஷ் வெங்கட்ராம்) உள்ளிட்ட தன் நண்பர்களின் உதவியுடன், மித்ரா தன்னை பின்தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது, இது தொடர்பாக அவர் புதிதாக சந்திக்கும் நபர்களெல்லாம் இறந்துபோகிறார்கள்.
மித்ராவை அச்சுறுத்தும் அமானுஷ்யம் யார்? அது எதற்காக மித்ராவைக் குறி வைக்கிறது? அதன் பின்னணி என்ன? மித்ரா தேடிச்செல்லும் நபர்களெல்லாம் இறந்துபோவது ஏன்? அவர்களது இறப்புக்கும், மித்ராவுக்கும் என்ன சம்பந்தம்? என்பன போன்ற கேள்விகளுக்கு திகிலாகவும், கிரைம் திரில்லர் பாணியிலும் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘தி டோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி மித்ராவாக பாவனா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் மறுபிரவேசம் செய்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும் பாவனாவின் பயணத்தில் திகில் குறைவாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.
மித்ராவுக்கு உதவும் காவல்துறை அதிகாரி ராய்ஸுதீன் கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஏற்றுள்ள பொருத்தமான கதாபாத்திரம் தான் இது என்பதால், அதை எவ்வித குறையுமின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
ஸ்ரீரஞ்சனி, கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
நாயகியின் அப்பா வக்கீல் ரத்னமாக வரும் நந்தகுமார்,
கட்டிடக்கலை நிறுவனத்தின் உரிமையாளர் வேல்முருகனாக வரும் ஜெயபிரகாஷ், தேவிகாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, நாகலிங்கமாக வரும் கிரீஷ், காண்ட்ராக்டராக வரும் பாண்டி ரவி, மேகாவாக வரும் சங்கீதா, மரியாவாக வரும் சிந்தூரி, ஷாலினியாக வரும் பிரியா வெங்கட், ராமாக வரும் கபில், இன்ஸ்பெக்டர் குமரனாக வரும் பைரி வினு, மீராவாக வரும் ரோஷினி, ராஜேந்திரனாக வரும் சித்திக், அமானுஷ்ய சக்தியாக வரும் வினோலியா உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய்தேவ். வழக்கமான பேய் கதை பாணியிலான திகிலுடன் ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை குறைத்துவிட்டு, கிரைம் நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். கதையின் நாயகி தேடும் ராம் யார் என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மர்ம மரணங்கள், இவற்றின் பின்னணி என்னவாக இருக்கும் என்ற கேள்வி போன்றவை பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. மொத்தத்தில், பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வையும், வித்தியாசமான அனுபவத்தையும் ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்தேவ்.
ஒளிப்பதிவாளர் கௌதம்.ஜி, படத்தொகுப்பாளர் அதுல் விஜய், இசையமைப்பாளர் வருண் உன்னி உள்ளிட்டோர் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
‘தி டோர்’ – சுவாரஸ்யமான ஹாரர் + கிரைம் திரில்லர் திரைப்படம்; பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5