இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல்: ஹமாஸ் அமைப்பின் பின்னணி

கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டு வீசப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதலில் இதுவரை சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் இரு தரப்புக்கும் இடையில் தொடரும் என தெரிகிறது.

இந்த சூழலில் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் பின்னணி குறித்து பார்ப்போம்:

சுமார் 22 லட்சம் மக்கள் வசித்துவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை அரசியல் ரீதியாக இந்த ஹமாஸ் அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. இந்த பகுதியின் பரப்பளவு 365 சதுர கிலோ மீட்டர். கடந்த 2007-ல் பாலஸ்தீன ஜனாதிபதி மொகமது அப்பாஸுக்கு விசுவாசமான ஃபதா படைகளுக்கு எதிரான போருக்குப் பிறகு காசா, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 1987-ல் ஷேக் அகமது யாசின், அப்துல் அஸிஸ் ஆகியோர் இணைந்து காசாவில் ஹமாஸ் அமைப்பை தொடங்கினர். பாலஸ்தீனிய பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிரான எழுச்சியாக இந்த அமைப்பு இயங்கி வருகிறது. பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இந்த அமைப்பு போராடி வருகிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு சமூக நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. அரசியல் ரீதியாகவும் பாலஸ்தீனத்தில் இயங்கி வருகிறது.

பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என சொல்லி ஹமாஸ் இயங்கி வருகிறது. கடந்த 1990-களில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் இடையே மேற்கொள்ளப்பட்ட ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கிறது ஹமாஸ்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிராந்தியங்களிலும், இஸ்ரேலிலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள், மக்களை குறிவைத்து தாக்குதலை மேற்கொள்வது ஹமாஸின் வாடிக்கை என கூறப்படுவதுண்டு. அதன் காரணமாக இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் நாடுகள் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் என சொல்வதுண்டு.

அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் ஈரான், சிரியா, லெபனானின் ஹிஸ்புல்லா போராளிக் குழு போன்றவை ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அதே போல காசாவில் இயங்கி வரும் மற்றொரு குழுவான இஸ்லாமிக் ஜிஹாத் குழுவின் ஆதரவும் உள்ளது.

கடந்த பத்து ஆண்டு காலமாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை அன்று தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இஸ்ரேலியர்கள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.